இடமாற்ற சர்ச்சை

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்துள்ளார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். உச்ச நீதிமன்ற கொலிஜீயத்தின் இந்த முடிவுக்கு சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏனெனில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீப் பானர்ஜி நியமிக்கப்பட்டு 10 மாதங்கள் தான் ஆகிறது. அதற்குள் அவரை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற  வேண்டிய அவசரம் என்ன என்பதுதான் தற்போது அவர்களது கேள்வி. மேலும் 72 நீதிபதிகள் கொண்ட மிகப்பெரிய சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் சஞ்சீப் பானர்ஜியை,  தலைமை  நீதிபதி, மேலும் ஒரு நீதிபதி என 2 நீதிபதிகள் மட்டுமே உள்ள மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி இருப்பதுதான் வக்கீல்கள் சங்கத்தினர் எதிர்ப்பை பதிவு செய்ய காரணமாக அமைந்து இருக்கிறது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீப் பானர்ஜி பணியாற்றியபோது மாதத்தில் குறைந்தபட்சம் 70 வழக்குகளிலாவது தீர்ப்பு வழங்கியிருப்பதாக கூறும் வக்கீல் சங்கத்தினர் அவரது இடமாற்றத்தை எதிர்த்து 237 பேர் உச்ச நீதிமன்ற கொலிஜியத்திற்கும் கடிதம் எழுதி இருக்கிறார்கள்.  ஒருபுறம் இப்படி இடமாற்றம், மறுபுறம் ஓரினச்சேர்க்கையாளர் என அறியப்பட்ட வக்கில் சவுரப் கிருபால் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமித்து கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. 2017ம் ஆண்டில் இருந்து ஏற்கனவே 4 முறை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்து வந்துள்ளது. ஆனால் ஓரினச்சேர்க்கையாளரை நீதிபதியாக நியமிக்க ஒன்றிய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து, கொலிஜியத்தின் பரிந்துரையை நிராகரித்து வந்தது. தற்போது மீண்டும் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க வக்கீல் சவுரப் கிருபால் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இதே போல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 9 பேர் நியமிக்கப்பட்டனர். இந்த பட்டியலில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளில் மூத்தவரான ஏ.எஸ். ஓகா பெயர் இடம் பெற்றது. ஆனால் 2ம் நிலையில் உள்ள அகில் குரேஷி பெயர் இடம் பெறவில்லை. அப்போது திரிபுரா தலைமை நீதிபதியாக இருந்த அவர் தற்போது ராஜஸ்தான் தலைமை நீதிபதியாக உள்ளார். அவரை விட பணிமூப்பு குறைந்த பலருக்கும் உச்ச நீதிமன்ற அமர்வில் இடம் கிடைத்த போதும் அகில் குரேஷி பெயர் இடம் பெறாததும், அதற்காக வக்கீல்கள் சங்கத்தினர் கூறிய காரணங்களும் கூட புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது. நீதிபதி நியமனங்கள் சர்ச்சைக்கு அப்பாற்பட்டு அமைந்தால் நமது நாட்டின் நீதிபரிபாலனம் நிச்சயம் வலுவடையும். அதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்….

Related posts

வெற்றிக்கோப்பை

மக்கள் குரலாக ஒலிக்கிறது

வலுக்கும் போராட்டம்