இசிஆரில் பிறந்தநாளை கொண்டாட போதை மாத்திரை, கஞ்சாவுடன் சென்ற கல்லூரி மாணவர்கள்: வாகன சோதனையில் சிக்கினர்

 

தண்டையார்பேட்டை, மே 29: இசிஆரில் பிறந்தநாள் கொண்டாட சென்ற கல்லூரி மாணவர்கள் போதை மாத்திரை, கஞ்சாவுடன் சிக்கினர். இதுதொடர்பாக, 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பாரிமுனை ராஜாஜி சாலை போக்குவரத்து சிக்னல் அருகே வடக்கு கடற்கரை காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் பிறந்தநாள் கொண்டாடுவதற்காக கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்வதாக கூறியுள்ளனர்.

சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களை சோதனை செய்து பார்த்தபோது 10 பொட்டலங்கள் கொண்ட கஞ்சா, 10 போதை மாத்திரைகளை எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து பிடிபட்ட இளைஞர்களிடம் நடத்திய விசாரணையில், திருவொற்றியூர் காலடிப்பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மோனிஷ், கோபாலகிருஷ்ணன் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், எண்ணூரை சேர்ந்த திருநங்கையான அலேக்கா என்பவரிடம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை எண்ணூரை சேர்ந்த சஞ்சய், திருவொற்றியூரை சேர்ந்த பிரபு, பிரசன்னா ஆகிய 3 பேர் மோனிஷ், கோபாலகிருஷ்ணனுக்கு விற்பனை செய்துள்ளனர். போதை மாத்திரை விற்பனை செய்த சம்பவத்தில் தொடர்புடைய பிரசன்னா, சஞ்சய், பிரபு ஆகியோரை வடக்கு கடற்கரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து 10 கஞ்சா பொட்டலம், 50 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக கஞ்சா மற்றும் போதை மாத்திரையை விற்பனை செய்த திருநங்கையான அலேக்காவை தேடி வருகின்றனர். போதை மாத்திரைகளை கொண்டு சென்றது கல்லூரி மாணவர்கள் என்ற காரணத்தால் போலீசார் எச்சரித்து அனுப்பியதாக தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் பாரிமுனை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை