ஆஸ்திரேலியாவுடன் 3வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் சரிந்தது இங்கிலாந்து; 185 ரன்னுக்கு ஆல் அவுட்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணியுடனான 3வது டெஸ்டில், இங்கிலாந்து  முதல் இன்னிங்சில் 185 ரன்னுக்கு சுருண்டது. ஆஷஸ்  தொடரின் 3வது டெஸ்ட் ‘பாக்சிங் டே’ போட்டியாக மெல்போர்னில் நேற்று  தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸி. பந்துவீச்சை தேர்வு செய்தது. கம்மின்ஸ் – ஸ்டார்க் வேகக் கூட்டணியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிய இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து பெவிலியன் திரும்பினர். ஹமீத் 0, கிராவ்லி 12, மலான் 14 ரன்னில் வெளியேற, கேப்டன் ஜோ ரூட் மட்டும் கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்து அரை சதத்தை எட்டினார். அவர் 50 ரன் எடுத்து (82 பந்து, 4 பவுண்டரி) ஸ்டார்க் வேகத்தில் கேரி வசம் பிடிபட்டார்.ஸ்டோக்ஸ் 25, பேர்ஸ்டோ 35 ரன் எடுக்க, பட்லர் 3, மார்க் வுட் 6 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றமளித்தனர். ராபின்சன் 22, ஜாக் லீச் 13 ரன் எடுத்து லயன் சுழலில் மூழ்க… இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 185 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது (65.1 ஓவர்). ஆஸி. தரப்பில் கம்மின்ஸ், நாதன் லயன் தலா 3, ஸ்டார்க்  2, கிரீன், ஸ்காட் போலண்ட் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து,  முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸி. முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 61 ரன் எடுத்துள்ளது. வார்னர் 48 ரன் (42 பந்து, 5பவுண்டரி) விளாசி ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மார்கஸ் ஹாரிஸ் 20, நாதன் லயன் (0) களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது. நடப்பு தொடரில் ஏற்கனவே 2 டெஸ்டிலும் தோல்வியை சந்தித்துள்ள  இங்கிலாந்து அணி, இதுவரை ஒரு இன்னிங்சில் கூட 300 ரன்னை தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.* ரூட் புதிய சாதனைடெஸ்டில் ஒரே ஆண்டில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் இருந்த ஜோ ரூட், நேற்று 27 ரன் எடுத்தபோது 3வது இடத்துக்கு முன்னேறினார். தென் ஆப்ரிக்காவின் ஸ்மித் (1656 ரன், 2008) 4வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.  பாகிஸ்தானின் முகமது யூசுப் 1788 ரன் (2006), வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ் 1710 ரன் (1976), ஜோ ரூட் (1680 ரன்) முதல் 3 இடங்களில் உள்ளனர். ரூட்  2வது இன்னிங்சில்  31 ரன் எடுத்தால் 2வது இடத்துக்கும், 109 ரன் விளாசினால் முதல் இடத்துக்கும் முன்னேறலாம்….

Related posts

மாநில ஜூனியர் தடகள போட்டி நாளை தொடக்கம்

டி20 உலக கோப்பை வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் மாயா