Sunday, June 30, 2024
Home » ஆஷாட நவராத்திரி விழா: வாராகி அம்மனை வழிபட்டால் வளங்கள் பெருகும்

ஆஷாட நவராத்திரி விழா: வாராகி அம்மனை வழிபட்டால் வளங்கள் பெருகும்

by kannappan

வாராகி நவராத்திரி : 21-6-2020 முதல் 29-6-2020 வரைஆனி மாதம் அமாவாசை மறுநாள் முதல் ஒன்பது நாட்கள் தெலுங்கு சம்பிரதாயப்படி ஆஷாட நவராத்திரி என்கிற வாராகி நவராத்திரி கொண்டாடப்படுகின்றது. நாம் எல்லோரும் நினைக்கும் அளவிற்கு வாராகி தேவி கோபகுணத்தைக் கொண்டவள் இல்லை. குழந்தை மனம் கொண்ட வாராஹி தேவியை தன்னலம் பாராமல், கெட்ட எண்ணங்களை மனதில் வைத்துக்கொள்ளாமல் வணங்கினால் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவிசெய்யும் தெய்வம்தான் இந்த வாராகி அம்மன்.தஞ்சை பெரிய கோயிலில் வாராகி அம்மன் வழிபாடு சிறப்பு வாய்ந்தது. பெரிய கோயிலை கட்டிய மாமன்னர் ராஜ ராஜசோழன் போருக்கு செல்லும் முன்பு வாராகி அம்மனை வணங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். மாமன்னர் ராஜராஜசோழன் இந்த அன்னையின் அருள் பெற்றுத்தான் எந்த செயலையும் தொடங்குவார். இங்கு வாராகி அன்னை தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கிறார். மாலை நேரத்தில் வாராகி அம்மனுக்கு கிழங்கு வகைகளை படைத்து வழிபாடு செய்வது சிறப்பானது. சக்தி பீடங்களில் ஒன்றான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் வாராகி பீடமாகவும் போற்றப்படுகிறது.சப்தகன்னியரில் ஒருவரான வாராகி அம்மன், திருமாலின் வராக அம்சமாக கருதப்படுகிறார். இவர் வராகமெனும் பன்றி முகத்தையும், எட்டு கரங்களையும் உடையவர். பின் இருகரங்களில் தண்டத்தினையும், கலப்பையையும் கொண்டவர். இவர் கருப்புற நிற ஆடையுடுத்தி சிம்மவாகனத்தில் அமர்ந்திருக்கிறார். கலியுகத்தில் கண்கண்ட தெய்வமான வாராகியை வணங்கினால் பகைவரை அழித்து பக்தரை காத்திடுவாள். கொடிய ஏவல், பில்லி சூனியத்தில் இருந்தும் காப்பாற்றுவாள். நினைத்த காரியம் நிறைவேறும். திருமணத்தடைகள் விலகும், புத்திரபாக்கியம் கிடைக்கும். காசி நகரத்தில் வாராகி அன்னைக்கு மிகப்பெரிய கோயில் உள்ளது. இங்குள்ள வாராகியை நேரடியாக தரிசிக்க முடியாது துவாரங்களின் வழியாகத்தான் தரிசிக்க முடியும். ஞாயிறன்று வாராகியை வழிபட்டால் நோய்கள் தீரும். திங்கட் கிழமைகளில் வழிபட்டால் மனநல பாதிப்புகள் நீங்கும். வீடு, நிலம் தொடர்பான பிரச்சினைகள் தீர செவ்வாய்க் கிழமைகளில் வாராகியை வழிபடலாம். கடன் தொல்லைகள் தீர புதன்கிழமை வழிபடலாம். குழந்தைப்பேறு கிட்ட வியாழக்கிழமை வழிபடலாம். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க வியாழக்கிழமை வழிபடலாம். வெள்ளிக் கிழமை வழிபட நினைத்த காரியம் நிறைவேறும். வாராகி காயத்ரி மந்திரத்தை ஜெபித்து வணங்கினால் கேட்ட வரங்களை கொடுப்பவள். வாராகி அம்மன்  பத்மாவதி அம்மனின் காவல் தெய்வமாகவும், சப்த கன்னியரில் ஒருவராகவும் அறியப்படுகிறார். அஷ்ட வாராகியாக மகா வாராகி, ஆதி வாராகி, ஸ்வப்ன வாராகி, லகு வாராகி, உன்மத்த வாராகி, சிம்ஹாருடா வாராகி, மகிஷாருடா வாராகி, அச்வாருடா வாராகி என எட்டு வாராகிகள் அழைக்கப்படுகிறார்கள். இந்த எட்டு கோயிலையும் உள்ளடக்கிய அஷ்டவாராகி கோயில் விழுப்புரம் சாலாமேட்டில் அமைந்துள்ளது. உலகிலேயே வாராகியம்மனுக்கு அமைக்கப்பட்ட முதல் கோயிலாக கருதப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயில் வாராகி வழிபட்ட தலமாக அறியப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் எனும் ஊரில் சப்தமாதாக்கள் கோயில் உள்ளது. இங்கு வாராகி அம்மனுக்கு பஞ்சமி திதியில் பூஜை மற்றும் மஹா யாகம் நடைபெறும். இழந்த செல்வம் திரும்ப வரும் வாராகி அம்மனுக்கு எட்டு சனிக்கிழமைகள் காலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிக்குள் அல்லது இரவு 8 மணியில் இருந்து 9 மணிக்குள், மண் அகலில் கருநீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முடிந்து, அதில் நல்லெண்ணெய் விட்டு தீபமிட்டு மனதார வேண்டினால் இழந்த அனைத்தையும் திரும்பப் பெறலாம். கோயிலுக்குச் செல்ல முடியாதோர் வீட்டிலேயே வாராகி அம்மனின் படத்தை வைத்து தனி பரிகார தீபமாக ஏற்றி வந்தாலும் இழந்த செல்வங்களை பெறலாம். வாராகி துர்க்கையின் படை சேனாதிபதியாக இருந்து வெற்றியை மட்டுமே ஈட்டியவள். வாராகி காயத்ரி மந்திரம்: ஓம் ச்யாமளாயை விக்மஹே ஹல ஹஸ்தாயை தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் இந்த மந்திரத்தை தினந்தோறும் 108 முறை ஜபிப்பது சிறந்தது. இந்த மந்திரத்தை ஜெபிப்போருக்கு எதையும் சாதிக்கும் வல்லமை உருவாகும். மனதில் தைரியம் பிறக்கும். கேட்ட வரங்கள் கிடைக்கும். பொதுவாகவே கிருத்திகை, பூரம், மூலம், ரேவதி இந்த 4 நட்சத்திரங்களை கொண்டவர்கள் வாராகி அம்மனை மனதார வழிபட்டாலே போதும். அவர்களுக்கு உடனடியாக பலன் கிடைத்துவிடும். இந்த நட்சத்திரம் இல்லாதவர்கள், இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் வாராகி அம்மனை வழிபடுவது சிறந்தது. நமக்கு இருக்கும் தீராத கஷ்டமாக இருந்தாலும், தீராத நோயாக இருந்தாலும், தீராத மன கஷ்டம், பணக்கஷ்டம், எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் வாராகி அம்மனை நினைத்து, தலைவாழை இலை விரித்து, அதில் பச்சரிசியை கொட்டி பரப்பி, அதன் மேல் ஒரு தேங்காயை உடைத்து இரண்டுமுடிகளாக வைத்து, அதில் இலுப்ப எண்ணெய் ஊற்றி, சிவப்பு திரி போட்டு, தீபம் ஏற்றினால் போதும். இந்த பரிகாரத்தை உங்கள் வீட்டின் அருகில் வாராகி அம்மன் கோயில் இருந்தால் அங்கு செய்யலாம். கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே சிறிய வாராகி அம்மன் திருவுருவப் படத்தை வைத்து அதன்முன் செய்து வரலாம்.வாராகி அம்மனுக்கு சிவப்பு மலர் மிகவும் விருப்பமானது அதிலும் சிவப்பு தாமரை மிகவும் பிடிக்கும். பஞ்சமி திதி அன்று வாரகியை மனதார நினைத்து வழிபடுவது நல்ல பலனைத்தரும்.வாராகி அம்மனுக்கு பூண்டு கலந்து தோல் நீக்கப்படாத உளுந்து வடை, நவதானிய அடை, மிளகு சேர்த்த வடை, வெண்ணெய் நீக்காத தயிர்சாதம், நவதானிய அடை, தோசை இவை அனைத்தும் மிகவும் பிடிக்கும்.- ந.பரணிகுமார்…

You may also like

Leave a Comment

nine + 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi