ஆவடி பகுதியில் மின்சார ரயில்களில் மாணவர்கள் அட்டகாசம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

 

ஆவடி, ஜூலை 1: ஆவடி பகுதியில் மின்சார ரயில்களில் அட்டகாசம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆவடி ரயில்வே காவல் நிலையங்களுக்கு உட்பட்ட திருநின்றவூர், நெமிலிச்சேரி, பட்டாபிராம், மிலிட்டரி சைடிங், இந்து கல்லூரி, ஆவடி, அண்ணனூர், திருமுல்லைவாயல், அம்பத்தூர் பகுதிகளில் ரயில் நிலையம் உள்ளன. இந்தப் பகுதியிலிருந்து தினந்தோறும் சென்னை மற்றும் அரக்கோணம் மார்க்கமாக நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் மின்சார ரயிலில் பயணித்து வருகின்றனர். இந்த ரயில் நிலையங்களின் அருகே தனியார் மற்றும் ஒன்றிய அரசு பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன.

இதில் சில மாணவர்களின் அட்டகாசம் தாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இது ஒரு புறமிருக்க ரயில் படிக்கட்டில் தொங்கியபடி, ஜன்னல் கம்பி மீது ஏறியபடி மாணவர்கள் செல்கின்றனர். மாணவர்களின் இந்த அட்டகாசம் குறித்து ரயில் பயணிகள் சங்கத்தின் நிர்வாகிகள் நேற்று ஆவடி ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் சடகோபன் கூறுகையில், ரயில் நிலையங்களில் உடனடியாக சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். இதுபோன்ற மாணவர்களின் அட்டகாசங்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘பீக் ஹவர்ஸ்’ எனப்படும் காலை, மாலையில் ஒரு ரயில் நிலையத்திற்கு 2 பேர் வீதம் அனைத்து ரயில் நிலையங்களிலும் போலீசாரை அமர்த்தி மிக தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அப்படி செய்தால்தான் மாணவர்களின் அட்டகாசத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்றார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை