ஆளுநர் வருகையின் போது அகற்றப்பட்ட வேகத் தடைகளை மீண்டும் அமைக்க வேண்டும்: ம.நீ.ம. கோரிக்கை

விருதுநகர், ஏப்.13: ஆளுநரின் சிவகாசி வருகையின் போது விருதுநகர்-சிவகாசி சாலையில் அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் சார்பாக கோரிக்கை விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக விருதுநகர் கலெக்டருக்கு மக்கள் நீதிமன்றம் சார்பில் விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு ஆளுநர் ரவி ராஜபாளையம் மற்றும் சிவகாசி தனியார் கல்லூரிகளில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க கடந்த ஏப்.1ம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு வந்தார். அவரது வருகையை முன்னிட்டு விருதுநகரிலிருந்து சிவகாசி செல்லும் சாலையில் இருந்த 25க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் அகற்றப்பட்டன. இன்று வரை அவை மீண்டும் போடப்படவில்லை. இதனால் லாரிகள், பேருந்துகள், கார்கள் மற்றும் டூவீலர்கள் இந்த சாலையில் தற்போது அதிக வேகத்தில் செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஞாயிறன்று இரவு விருதுநகர்-சிவகாசி சாலையில் வள்ளியூர் விலக்கு அருகே அதிக வேகமாக சென்ற தனியார் பேருந்து, டூவிலர் மீது மோதியதில் தந்தை மற்றும் மகள் படுகாயமடைந்தனர். இந்த சாலையில் அதிக எண்ணிக்கையில் கிராமப்புறங்களை சேர்ந்த தொழிலாளர்கள் சைக்கிள்களிலும், இரண்டு சக்கர வாகனங்களிலும் விருதுநகருக்கும், சிவகாசிக்கும் வேலைக்காக சென்று வருகின்றனர். வேகத்தடை இல்லாததால் மணல் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் அதிக வேகத்தில் செல்லும் நிலையில் தொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே நெடுஞ்சாலைத் துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து இந்த சாலையில் மீண்டும் வேகத்தடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை