ஆலை நிர்வாகம் லாரி அனுப்பாததால் வயலில் காய்ந்து வீணாகும் கரும்புகள்-விவசாயிகள் வேதனை

ஓசூர் : தர்மபரி சர்க்கரை ஆலை நிர்வாகம், கரும்பு வெட்ட உத்தரவு வழங்கிய போதிலும், கரும்பை எடுத்துச்செல்ல வாகனத்தை அனுப்பாததால் கரும்பு வெயிலில் காய்ந்து வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, பாலக்கோடு, அரூர் உள்ளிட்ட வட்டாரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், தர்மபுரி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்து கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஓசூர் அடுத்த மோரனப்பள்ளி கிராமத்தில், 2.5 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்திருந்த விவசாயி மனோகரனுக்கு, சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு வெட்டி அனுப்ப உத்தரவு வழங்கியது. ஆனால் தோட்டத்தில் இருந்து, சர்க்கரை ஆலைக்கு கரும்பை கொண்டு செல்ல லாரி அனுப்பவில்லை. இதனால் கடந்த 2 மாதங்களாக லாரி வரும், கரும்பை வெட்டி ஆலைக்கு கொடுத்து விட்டு, வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்திவிடலாம் என கருதிய நிலையில், யானை கூட்டம் கரும்பு தோட்டத்தில் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.மேலும் சில விவசாயிகள், ஆலை நிர்வாகம் கூறிய தேதிகளில் கரும்பை வெட்டி விட்ட நிலையில், லாரிகள் வராததால் தோட்டத்தில் கரும்பு வெயிலுக்கு கருகி காய்ந்து வருவதால் வேதனை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘150 டன் கிடைக்கக்கூடிய சமயத்தில், தற்போது 50 முதல் 60 டன் கரும்பு கிடைக்கிறது. அதுவும் பருவம் தவறுவதால் கடும் வெயிலால், காய்ந்து போய் தேவையான அளவு கரும்புச்சாறு இல்லாமல் உள்ளது. இதனால் கரும்பு விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இனிவரும் காலங்களில் கரும்பு வெட்ட உத்தரவு வழங்கும் ஆலை நிர்வாகம், உடனடியாக வாகனத்தை அனுப்பி கரும்பினை பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்….

Related posts

கள்ளக்குறிச்சி மாவட்டம்: வடதொரசலூரில் சிறுவர்கள், சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு!

திருப்புத்தூர் அருகே காய்கறி வேன் கவிழ்ந்து விபத்து: டிரைவர், கிளீனர் படுகாயம்

கேரளாவில் வெளுத்து கட்டும் பருவமழையால் ஆர்ப்பரித்து கொட்டும் சுருளி அருவி: சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரே குஷி