ஆலங்குடி வேட்பாளரை மாற்றக் கோரி முதல்வர் வேனை வழி மறிக்க அதிமுகவினர் முயற்சி: கோஷத்தை கேட்டதும் நிறுத்தாமல் வேகமாக சென்றார் எடப்பாடி: ஆத்திரத்தில் சாலை மறியல்

அறந்தாங்கி: ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளரை மாற்றக் கோரி முதல்வரின் ேவனை மறித்து மனு கொடுக்க காத்திருந்த அதிமுக தொண்டர்களின் கோஷத்தை கேட்டதும் நிறுத்தாமல் சென்றதால், அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளராக தர்ம.தங்கவேல் என்பவரை அதிமுக தலைமை அறிவித்தது. புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த தர்ம.தங்கவேலு, கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் அதிமுகவில் இணைந்தார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் அதிமுகவினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். வேட்பாளரை மாற்றி வேறு வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆலங்குடி தொகுதியில் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று தேர்தல் பிரசாரத்திற்கு முதல்வர் எடப்பாடி வரும் தகவல் அறிந்த ஆலங்குடி தொகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான அதிமுகவினர் அறந்தாங்கி அருகே உள்ள பனங்குளம் பகுதியில் நேற்று மாலை குவிந்தனர். வேட்பாளரை மாற்றுங்கள் எங்கள் முதல்வரே என்ற பதாகை, அதிமுக கொடியுடன் ஆலங்குடி தொகுதி வேட்பாளரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை மனுவுடன் முதல்வருக்காக சாலையோரத்தில் காத்திருந்தனர். தகவல் அறிந்த போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். பின்னர் போலீசார் தொண்டர்கள் சாலைக்கு வந்துவிடாத வகையில் சாலை ஓரம் கயிறு கட்டி தடுத்து நிறுத்தி வைத்தனர். இதனால் போலீசாருடன் அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அறந்தாங்கி தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜநாயகத்தை ஆதரித்து பேசிய முதல்வர் எடப்பாடி, அறந்தாங்கி நகர அதிமுக செயலாளர் ஆதிமோகனக்குமார் வீட்டில் மதிய உணவு அருந்தினார். பின்னர் சிறிது நேர ஓய்வுக்குபிறகு ஆவணம் கைகாட்டியில் ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் தர்ம.தங்கவேலுவை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக புறப்பட்டார். முதல்வரின் வாகன கான்வாய் பனங்குளத்தை அடைந்ததும், அதிமுக தொண்டர்கள் ஆலங்குடி தொகுதி வேட்பாளரை மாற்றுக என கோஷமிட்டபடி அவரது வேனை நோக்கி வந்தனர். அவர்கள் அதிமுக கொடிகளுடன் நின்றதால், முதல்வரின் வாகனம் மெதுவாக வந்தது. தொண்டர்களை பார்த்து கும்பிட்டபடியே வந்த முதல்வர் எடப்பாடி, வேட்பாளரை மாற்ற வேண்டும் என்ற கோஷத்தை கேட்டதும் டிரைவரிடம் வாகனத்தை நிறுத்த வேண்டாம் என தெரிவித்து, கையால் சைகை காட்டியும், தொண்டர்களை பார்த்து கும்பிட்டபடியும் அந்த இடத்தை கடந்து சென்றார். ஆலங்குடி வேட்பாளரை மாற்ற வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை நின்று கூட கேட்காமல், மனுவையும் வாங்காமல் முதல்வர் எடப்பாடி சென்றதால் அதிர்ச்சி அடைந்த அதிமுக தொண்டர்கள் சாலையில் அமர்ந்தனர். சிலர் சாலையில் படுத்து உருண்டனர். இதைத் தொடர்ந்து கோரிக்கையை முதல்வரிடம் தெரிவிக்க விடாமல் தடுத்த போலீசாரை கண்டித்தும், தொண்டர்களை சந்திக்காமல் சென்ற முதல்வரை கண்டித்தும் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் நீண்ட நேரம் பேசியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்களை போலீசார் கைது செய்து, வாகனங்களில் ஏற்றி அங்கிருந்து செல்ல முயன்றனர். உடனே பெண் தொண்டர்கள் போலீசாரின் வாகனங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் கைதான அதிமுகவினர் விடுவிக்கப்பட்டனர். ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளரை மாற்றும் வரை அடுத்தடுத்து போராட்டங்களை நடத்துவோம் எனக்கூறி அவர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது…

Related posts

அரியானா கொள்ளையரை பிடித்த காவல்துறை பணி பாராட்டுக்குரியது: எடப்பாடி பழனிசாமி பேட்டி

இந்தியா கூட்டணியை ஒன்றிணைத்தவர் யெச்சூரி: டெல்லி இரங்கல் கூட்டத்தில் தலைவர்கள் புகழாரம்

சொல்லிட்டாங்க…