ஆற்றுக்கு நடுவில் கோயில் கட்டி குடியிருந்தனர் வெள்ளத்தில் சிக்கிய வயதான தம்பதி மீட்பு

பென்னாகரம்: ஒகேனக்கல் மெயினருவி பகுதியில் குன்றில் உள்ள கோயிலில் சிக்கித் தவித்த வயதான தம்பதியை, போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் சென்று ஸ்டிரெச்சரில் வைத்து கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து விநாடிக்கு 2.40 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது.  ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை அருகே  சிறிய குன்றில், பென்னாகரம் அருகே அத்திமரத்தூர் கிராமத்தை சேர்ந்த குருசாமி (75), அவரது மனைவி பங்காருஅம்மாள் (72) ஆகியோர் கோயில் கட்டி, அங்கேயே தங்கி வசித்து வருகின்றனர். நேற்று ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், நடைபாதையில் 5 அடிக்கு மேலாக தண்ணீர் சென்றது. மேலும் குன்றை சுற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இருவரும் கோயிலில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர், தீயணைப்பு மீட்பு குழுவினர், வருவாய்த்துறையினர், ஊரக வளர்ச்சித்துறையினர் கொட்டும் மழையிலும், உடனடியாக அங்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஏணியை ஆற்றின் குறுக்கே போட்டு, அதன் வழியாக அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், ஸ்டிரெச்சரில்  நான்கு பக்கமும் கயிறு கட்டி, ஒவ்வொருவராக ஸ்ட்ரெக்சரில் படுக்க வைத்து, பாதுகாப்பு பெல்ட் அணிவித்தனர். ஆற்றின் இரு பக்கத்திலும் வீரர்கள் நின்று கயிறுகளால் ஸ்டிரெச்சரை இழுத்தனர். அப்போது மூதாட்டி ஏற்றப்பட்ட ஸ்டிரெச்சர்  தலைகீழாக சரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு மணி நேரம் திக்…திக் நீடிக்க ஒருவழியாக இருவரையும் பத்திரமாக மீட்டனர். ஆற்றில் வெள்ளம் அதிகளவில் சென்றதால் அவர்கள் பயந்துவிடாமல் இருக்க முகத்தை துண்டால் மூடியபடி கொண்டுவந்தனர்….

Related posts

திருப்பதிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது பைக் மீது கார் மோதி ஓட்டல் உரிமையாளர் உள்பட 3 பேர் பலி

ஒகேனக்கல் நீர்வரத்து 13,000 கனஅடியாக உயர்வு

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக இன்று பதவியேற்றுக் கொண்டார் ஷமீம் அகமது