ஆரோக்கிய அன்னை ஆண்டு பெருவிழாவையொட்டி வேளாங்கண்ணி கடலில் பக்தர்கள் குளிக்க தடை: நாகப்பட்டினம் கலெக்டர் அறிவிப்பு

நாகப்பட்டினம்,ஆக.23: வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை திருவிழா காலங்களில் பக்தர்கள் உயிர்பாதுகாப்பு கருதி கடலில் குளிக்க தடைவிதிக்கப்படுகிறது என கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் கூறினார். வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா திருமண மண்டபத்தில் முன்னேற்பாடு கூட்டம் நடந்தது. டிஆர்ஓ முத்துகுமாரசாமி வரவேற்றார். கூட்டத்திற்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது: புகழ்பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆண்டு பெருவிழா- வரும் 29ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. செப்டம்பர் மாதம் 7ம் தேதி தேர்பவனி நடைபெறுகிறது. 8ம் தேதி அன்னையின் பிறந்த நாள் விழாவுடன் நிறைவு பெறுகிறது. விழா காலங்களில் 10 லட்சம் பக்தர்கள் வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தருவார்கள்.

இதற்காக வேளாங்கண்ணி நகரத்திலிருந்து பள்ளிக்கு செல்லும் பள்ளி வாகனங்களை தடையின்றி சென்றுவர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவிழா காலங்களில் பொதுமக்கள் மற்றும் திருப்பயணிகள் கூட்ட நெரிசலின்றி பயணம் செய்ய பல்வேறு மண்டலங்களிலிருந்து 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் 24 மணி நேரமும் இயக்கப்படும். பயணிகள் சிரமம் இன்றி பயணம் செய்ய வசதியாக பேருந்து நிறுத்துமிடங்கள் குறித்து தகவல் பலகைகள் வைக்கப்படும். வேளாங்கண்ணியில் யாத்திரிகர்கள் வருகைக்கு தகுந்தவாறு மருத்துவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் அமர்த்திட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

10 இடங்களுக்கு மேல் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும். விழா காலங்களில் பொதுமக்கள் உயிரை பாதுகாப்பதற்காக கடலில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை அருகில் தீயணைப்பு வீரர்கள், போலீசார், கடலோர காவல்குழும போலீசார், தன்னார்வலர்கள் கொண்ட குழு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 4 மாவட்ட எஸ்பிகள் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். கடலோர எல்லைகளில் கடலோர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். பல்வேறு மாவட்டங்களில் இருந்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் வருகை தந்து அனைத்து உணவு விடுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு உணவின் தரத்தை பரிசோதனை செய்து தரம் குறைவான உணவகங்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள். இறைச்சி மீன் வருவல் விற்பனையினை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும்.

தேவையான தீயணைப்பு வாகனங்கள், உயிர்காக்கும் ரப்பர் படகுகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சுழற்சிமுறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
பேராலய உதவி பங்கு தந்தை ஆண்டோ ஜேசுராஜ், பேரூராட்சி தலைவர் டயானா சர்மிளா, டிஎஸ்பி பாலகிருஷ்ணன், பேரூராட்சி துணைத்தலைவர் தாமஸ் ஆல்வாஎடிசன், வேளாங்கண்ணி பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு