ஆரோக்கியமான சமுதாயம்

ஒரு சமுதாயம் எல்லா நிலையிலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அந்த மாநிலத்தின் வளர்ச்சி அபரிதமாக இருக்கும். இதற்கு அரசு அதிகாரிகள், மாணவர்கள் முதல் கடைக்கோடி மனிதன் வரை சமுதாயத்துக்கு விசுவாசமாக பணியாற்ற வேண்டும். இந்த நேர்மையான பணியாளர்களுக்கு தான் தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இளைய சமுதாயம் போதையில் தள்ளாடினால் நாட்டின் அஸ்திவாரமும் ஆட ஆரம்பித்துவிடும். எதிர்காலம் இருண்டு போய் விடும். எனவே போதையில்லாத மாநிலம் உருவாக்க அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள் என்று அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். போதைப்பொருள் பயன்படுத்துவோர் தன்நிலை மறந்து குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். மேலும் போதைப் பொருளுக்கு அடிமையாகி இளமையிலேயே குடும்பம் உள்பட அனைத்தையும் தொலைத்து தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்கும் சென்றுவிடுகிறார்கள். இது போன்ற பேராபத்துகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தால் சமுதாயம் சீரழிந்து சின்னாபின்னமாகிவிடும். எனவே, போதைப்பொருளுக்கு கடிவாளம் போட்டு இளைய தலைமுறையினரை மீட்கவும், அவர்களை அந்த பாதைக்கு போக விடாமல் தடுக்கவும் அவசியம் ஏற்பட்டுள்ளது. இதை உணர்ந்துள்ள தமிழக அரசு போதைப்பொருள் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளது. எதிர்காலத்தில் போதைப்பொருள் என்பது சமாளிக்க முடியாத  சட்டம்-ஒழுங்கு பிரச்னையாக மாறிவிடக்கூடாது என்பதற்காக மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ளார். நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றம் உள்பட அனைத்து குற்ற சம்பவங்களை செய்வோரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களாக இருக்கிறார்கள். சிலர் போதைப்பொருள் வாங்குவதற்கு கையில் பணம் இல்லாததால் தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள். இந்த போதைப்பொருள் பழக்கத்துக்கு இளம் பெண்கள், மாணவர்கள் உள்பட பலர் அடிமையாகி சீரழிந்துள்ளனர். பலரது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, அழிவுப்பாதையான போதைப்பாதையில் மாணவர்கள், இளைஞர்கள் செல்வதை தடுக்க முழு ஆற்றலையும் பயன்படுத்த வேண்டும். போதைப்பொருள் இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக வேண்டும். போதைப்பொருள் விற்பவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதுடன் அவர்களது சொத்துகளை முடக்க வேண்டும். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு குறைவு என்று நமக்குள் நாமே சமாதானம் செய்து கொள்ளக்கூடாது. சிறுதுளி போதைப்பொருள் நடமாட்டம் கூட தமிழகத்தில் இருக்க கூடாது. போதைக்கு அடிமையானவர் தமிழகத்தில் ஒருவர் இருந்தாலும் அவமானம் தான். எல்லாவற்றிலும் வளரும் தமிழகம் போதை போன்ற எதிர்மறையான விஷயங்களிலும் வளர்ந்துவிடக்கூடாது என்று தனது வருத்தத்துடன் அழுத்தம் திருத்தமாக தமிழக முதல்வர் எடுத்துள்ள முடிவுக்கு நிமிர்ந்து நின்று சல்யூட் அடிக்கத்தான் வேண்டும். முதல்வரின் இந்த உத்தரவை காவல்துறை அதிகாரிகள், ஆட்சியர்கள் மிக தீவிரமாக கடைபிடித்து போதையில்லாத ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கி காட்ட முன்வர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது….

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

அடுத்த அசத்தல்

‘மூன்றில் ஒரு பங்கு’