ஆருத்ரா விழாவையொட்டி அதிகாலையிலேயே திரண்டனர் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் மூலவருக்கு வெந்நீர் அபிஷேகம்-திரளான பக்தர்கள் தரிசனம்

ஸ்ரீகாளஹஸ்தி : ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் ஆருத்ரா விழாவையொட்டி மூலவர் காளஹஸ்தீஸ்வரருக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் பஞ்ச பூத ஸ்தலங்களில் வாயு ஸ்தலமாக விளங்கும் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் அமைந்துள்ளது. இந்நிலையில்  சிவன் கோயில்களில் திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி ஆருத்ரா தரிசன விழா நேற்று கோலாகலமாக நடந்தது. இதேபோல் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நேற்று அதிகாலை 3 மணிக்கு 4 மாட வீதிகளில் கோயில் மணி ஒலிக்கப்பட்டது. தொடர்ந்து 3.30 மணிக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க நடை திறக்கப்பட்டது. 3.45 மணிக்கு திருமஞ்சன சேவையும், 4 மணிக்கு கோ பூஜையும் நடந்தது. தொடர்ந்து காலை 4.30 மணிக்கு முதல் கால அபிஷேகம் நடந்தது. இதில் பக்தர்கள் ஈடுபட அனுமதி இல்லாததால், கோயில் சார்பில் மட்டுமே நடத்தப்பட்டது.இதனை தொடர்ந்து ஆருத்ரா விழாவையொட்டி காலை 7 மணிக்கு உளுந்து மாவினால் செய்யப்பட்ட லிங்கத்திற்கு நெய்யினால் அபிஷேகம் செய்தனர். மேலும் உளுந்து மாவினால் செய்யப்பட்ட லிங்கம் ஆவுடையார் அருகில் வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இந்த தரிசனம் மகா சிவராத்திரி தரிசனத்தை போல மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பக்தர்கள் கருதுகின்றனர். இந்த தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆண்டுதோறும் ஆருத்ரா விழாவின்போது மூலவர் காளஹஸ்தீஸ்வரருக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. அதன்படி நேற்று காலை 11 மணிக்கு நடைபெற்ற உச்சிகால அபிஷேகத்தில், மூலவர் காளஹஸ்தீஸ்வரருக்கு வெந்நீரால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நடராஜர் சன்னதியில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. முன்னதாக கோயில் வளாகத்தில் உள்ள நடராஜர் சுவாமி சன்னதி அருகில் சிவகாமி சுந்தரி சமேத நடராஜர் உற்சவ மூர்த்திகளை ஸ்தானபீடத்தில் நிறுத்தினர். தொடர்ந்து கலச ஸ்தாபனம் செய்ததோடு கணபதி பூஜை நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் ஸ்தான பீடத்தில் வீற்றிருக்கும் சிவகாம சுந்தரி சமேத நடராஜர் உற்சவமூர்த்திகளுக்கு பால், தயிர், தேன், சந்தனம், பஞ்சாமிர்தம், இளநீர் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இறுதியில் கலசத்தில் இருந்த புனிதநீரால் உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிவகாம சுந்தரி சமேத நடராஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.காலை 11.30 மணிக்கு சிவகாம சுந்தரி நடராஜர் உற்சவமூர்த்திகள் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலு மற்றும் உறுப்பினர்கள், கோயில் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்….

Related posts

காஷ்மீரில் 2ம் கட்ட தேர்தல்; 26 தொகுதிகளில் 56% வாக்குப்பதிவு: அமைதியாக நடந்தது

அமலாக்கத்துறையால் ஓராண்டுக்கு முன் கைது; செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

சந்திரபாபு நாயுடு செய்த பாவத்துக்கு மன்னிப்பு கேட்டு திருப்பதியில் ஜெகன் வழிபாடு: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அறிவிப்பு