ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் நடை மேம்பாலம் அமைக்கப்படுமா?

ஆரல்வாய்மொழி: திருநெல்வேலி – நாகர்கோவில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்து சோதனை ஓட்டமும் நடந்துள்ளது. திருநெல்வேலி சந்திப்புக்கு முன்பு வரையுள்ள ரயில்வே பகுதிகள் திருவனந்தபுரம் கோட்டத்துடனேயே இருந்து வருகின்றன. இதனால் இப்பகுதி ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் சுற்றி தோவாளை, செண்பகராமன்புதூர், மாதவலாயம், பூதப்பாண்டி, துவரங்காடு, அழகியபாண்டிபுரம் உள்ளிட்ட பல குக்கிராமங்கள் உள்ளன.  இக்கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தை நம்பியே பயணம் செய்து வந்தனர். ஆரல்வாய்மொழி சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான காற்றாலை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்களில் பல இடங்களில் இருந்தும் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ரயில் மூலம் பணிக்கு வந்து சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் நின்று சென்ற சில ரயில்களை, ரயில்வே நிர்வாகம்  திடீரென அதிவிரைவு வண்டியாக மாற்றியது. இதனால்  அந்த ரயில்கள் இங்கு நிற்காமல்  செல்கின்றன. இதனால் ஆரல்வாய்மொழியில் இறங்க வேண்டிய பயணிகள், பெரும்பாலும் நாகர்கோவில் ரயில் நிலையத்தையே பயன்படுத்த  வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதுபோல ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் செயல்பட்டுவந்த முன்பதிவு நடைமுறை திடீரென்று நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய நாகர்கோவில் செல்ல வேண்டிய அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இரட்டை ரயில் பாதை பணிகளால், ஆரல்வாய்மொழியில் நின்று செல்லும் ரயில்கள் 2வது நடைமேடையில் நிறுத்தப்படுகின்றன. இந்த ரயில் நிலையத்தில் முதல் நடைமேடையில் இருந்து 2வது பிளாட்பார்ம் செல்ல வேண்டுமானால் தண்டவாளத்தில் இறங்கி செல்ல வேண்டும். இதனால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பலவீனமானவர்கள், பெண்கள், குழந்தைகள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் பயணிகள் ரயிலை தவற விடுவதும், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதும் வாடிக்கையாக நடந்து வருகின்றன. ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் 2வது பிளாட்பார்ம் செல்ல நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பல கோரிக்கைகள் வைத்தும், இதுவரை எந்தவி நடவடிக்கையும் இல்லை. எனவே திருவனந்தபுரத்துடன் இணைந்துள்ள குமரி, நெல்லை பகுதிகளை  மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும். ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் உடனடியாக நடை மேம்பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன….

Related posts

சிசுவின் பாலினம் தெரியப்படுத்தும் ஸ்கேன் மையங்கள் மீது நடவடிக்கை பாயும்: காஞ்சி கலெக்டர் எச்சரிக்கை

தஞ்சை அருகே ஏரியில் பயிற்சி விமானம் விழுந்ததா? வதந்தி பரப்பியவருக்கு போலீஸ் வலை

அரசு பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் கொண்டாட ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: தமிழ்நாடு அரசு விளக்கம்