ஆரணி ஒன்றியக்குழு கூட்டம் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் அமைப்பதில் முறைகேடு-திட்டமே வேண்டாம் என கவுன்சிலர்கள் ஆவேசம்

ஆரணி :  ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளது. இந்த திட்டமே எங்களுக்கு வேண்டாம் என ஆரணி ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆவேசமாக தெரிவித்தனர்.ஆரணி பிடிஓ அலுவலகத்தில் நேற்று ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. பிடிஓ சீனிவாசன் தலைமை தாங்கினார். பிடிஓ பாண்டியன், துணை பிடிஓக்கள் ரூபன்மனோகரன், ருத்ரமூர்த்தி, உதவி பொறியாளர் ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார். ஒன்றியக்குழு தலைவர் கனிமொழி சுந்தர் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். கூட்டத்தில், ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர், சாலை, தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, ஒன்றிய கவுன்சிலர்கள் கூறியதாவது:வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் தொடர் கனமழையால் ஊராட்சிகளில் கழிவுநீர் கால்வாய், நீர்வரத்து கால்வாய் அடைப்பு ஏற்பட்டு தெருக்களில் சேறும், சகதியுமாக இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தாலும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே, அனைத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெருக்களில் கால்வாய்களை தூர்வாரி, துய்மைப்பணிகள், அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டும்.எங்களை ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த பொதுமக்கள் அடிப்படை வசதிகள், சிமென்ட் சாலை ஏற்படுத்தி தர கோரிக்கை வைக்கின்றனர். எனவே, ஒன்றிய கவுன்சிலர்களுக்கு சிமென்ட் சாலை அமைத்தல் பணியை கேட்டால், அது கவுன்சிலர்களுக்கு கிடையாது என்கின்றனர். எனவே, எம்பி, எம்எல்ஏ, மாவட்ட கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு சிமென்ட் சாலை பணி வழங்குவதுபோல்,  ஒன்றிய கவுன்சிலர்களுக்கும் பணி வழங்க தீர்மானம் நிறைவேற்றி, மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்புதல் பெற வேண்டும்.ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 38 கிராம ஊராட்சிகளிலும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க, தெருக்களில் சாலையை உடைத்து பள்ளம் தோண்டி பைப்லைன் அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஒப்பந்ததாரர்கள் பணியை முழுமையாக செய்யாமல் கிராமங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலை மற்றும் நல்ல முறையில் உள்ள சாலைகளை உடைத்து சேதப்படுத்துகின்றனர். ஆனால், வீடுகளுக்கு குழாய் அமைக்காமல் தெருக்களில் தோண்டிய பள்ளங்கள் அப்படியே விட்டு சென்றுள்ளனர். தற்போது பெய்து வரும் கனமழையால் அனைத்து கிராமங்களிலும் சேறும், சகதியுமாக இருந்து வருகிறது. மேலும், ஒப்பந்தாரர்கள் முறையாக பணிகள் செய்யாமலே பில் வாங்கி கொண்டு பணிகள் முடித்ததாக கூறி தொடர் முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு பயன்படாத ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை கவுன்சிலர்கள் அனைவரும் புறக்கணிக்கிறோம். இந்த திட்டமே எங்களுக்கு வேண்டாம் என ஆவேசமாக தெரிவித்தனர். கூட்டத்தில், ஒன்றிய கவுன்சிலர் புனிதா அலேக்ஸ், ரஞ்சித், ஜெயபிரகாஷ், குமார், கலா ரகு உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். …

Related posts

மெரினாவில் நாளை விமான சாகச நிகழ்ச்சி: போக்குவரத்து மாற்றம்

மெரினாவில் நாளை விமான சாகச நிகழ்ச்சி: போக்குவரத்து மாற்றம்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக வானிலை மையம் தகவல்!