ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு அரசு பள்ளிகளில் பணியாற்றும்

வேலூர், மே 5: அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறைக்கான மானியக் கோரிக்கையின்போது அறிவிப்பை வௌியிட்டார். அதை தொடர்ந்து அரசாணையின்படியும் தமிழர் நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம், தொன்மையின் சிறப்பு மற்றும் தமிழகமெங்கும் பரவியிருக்கும் தொல்லியல் தலங்கள் குறித்த தகவல்களை மாணவர்களிடம் சிறப்பாக கொண்டு சேர்க்கும் வண்ணம் தொல்லியல் துறை வாயிலாக தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 6 நாட்களுக்கு உண்டு உறைவிடப் பயிற்சி (களப்பயணம் உட்பட) வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் ஒரு குழுவிற்கு 40 ஆசிரியர்கள் வீதம் 25 குழுக்களாக கோவை, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி, மற்றும் புதுக்கோட்டை ஆகிய 11 ஆகிய மண்டலங்களில் மொத்தம் 1000 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பயிற்சியின் செயல்திட்டம், அட்டவணை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் பெயர் பட்டியல் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. அந்த ஆசிரியர்களை பயிற்சியில் கலந்துகொள்ள ஏதுவாக பணி விடுவிப்பு வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். மேலும் இப்பயிற்சியில் ஆசிரியர்கள் கலந்துகொள்வதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இப்பயிற்சி உண்டு உறைவிடப் பயிற்சியாக இருப்பதால் பயிற்சியில் கலந்துகொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் 6 நாள்களும் பயிற்சி மையத்தில் தங்குவதை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் உறுதிசெய்யவேண்டும். மேலும் விவரங்களுக்கு இந்நிறுவன ஒருங்கிணைப்பாளரான உதவிப்பேராசிரியர் பிரபாகரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு