ஆம்புலன்ஸ் மோதி முதியவர் பலி: 2 பேர் படுகாயம்

புழல்: புழல் சைக்கிள் ஷாப் அருகே மாதவரம் ரவுண்டானா பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 108 ஆம்புலன்ஸ் வாகனம் நின்றிருந்தது. அப்போது, செங்குன்றத்தில் ஒருவருக்கு ஆபத்து என ஆம்புலன்ஸ் டிரைவருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, அவர் ஆம்புலன்சை செங்குன்றம் நோக்கி வேகமாக ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த 108 ஆம்புலன்ஸ் வேன் ஜிஎன்டி சாலை, புழல் மத்திய சிறைச்சாலை அருகே வந்தது. அப்போது, சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது வேகமாக மோதிய ஆம்புலன்ஸ் வாகனம், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து,  சாலையின் நடுவே தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில், அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து பலியானார். மேலும், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சேதுபதி(21), காஞ்சிபுரத்தை சேர்ந்த உதவியாளர் சந்திரசேகரன்(37) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து, இறந்த முதியவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை