ஆம்னி பஸ் கவிழ்ந்து டிரைவர்கள் உட்பட 29 பேர் படுகாயம் ஆரணி அருகே நள்ளிரவு விபத்து பஞ்சராகி நின்ற டிராக்டர், லாரி மீது மோதாமல் இருக்க திருப்பியபோது

ஆரணி, டிச.13: ஆரணி அருகே பஞ்சராகி நடுரோட்டில் நின்ற டிராக்டர், லாரி மீது மோதாமல் இருக்க திருப்பியபோது ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர்கள் உட்பட 29 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து வேலூர், ஆரணி வழியாக மதுரைக்கு நேற்று முன்தினம் இரவு தனியார் ஆம்னி பஸ் 2 டிரைவர்கள் உட்பட 29 பயணிகளுடன் புறப்பட்டது. பஸ்சை தஞ்சாவூரை சேர்ந்த விக்டர்(59) என்பவர் ஓட்டினார். மேலும், அவருடன் திருச்சியை சேர்ந்த மற்றொரு டிரைவர் கண்ணன்(50), திருத்துறைபூண்டியை சேர்ந்த கிளீனர் சந்தோஷ்(20), மேனேஜர் செல்வம் ஆகியோர் சென்றனர்.

நேற்றுஅதிகாலை 1.30 மணியளவில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த விண்ணமங்கலம் அருகே ஆரணி- சேத்துப்பட்டு செல்லும் சாலையில் ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த சாலையில் விறகு கட்டைகளை ஏற்றிச்சென்ற டிராக்டர் ஒன்று டயர் பஞ்சராகி சாலை நடுவில் நீண்ட நேரமாக நின்றுள்ளது. இதற்கிடையே, விண்ணமங்கலத்தில் இருந்து ஆரணி நோக்கி மொபாட்டில் சென்ற வாலிபர் பூபதி(22) என்பவர் டிராக்டரில் எதிர்பாராதவிதமாக மோதி படுகாயம் அடைந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறிது நேரத்தில் நடுரோட்டில் பழுதடைந்து நின்ற டிராக்டரை ஆம்னி பஸ் கடந்து செல்ல முயன்றபோது சேத்துப்பட்டில் இருந்து ஆரணி நோக்கி டிப்பர் லாரி ஒன்று எதிரே வேகமாக வந்துள்ளது. இதனை கண்டதும் ஆம்னி பஸ் டிரைவர், டிராக்டர் மற்றும் லாரி மீது மோதாமல் இருக்க பஸ்சை இடது புறமாக திருப்பினார். இதில், நிலை தடுமாறிய ஆம்னி பஸ் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது, லாரி டிரைவர் வலதுபுறம் திருப்பியதால், லாரி விபத்தில் சிக்காமல் வேகமாக சென்று விட்டது. ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் விக்டர், மற்றொரு டிரைவர் கண்ணன் மற்றும் பஸ்சில் வந்த பயணிகள் சிவகங்கையை சேர்ந்த பரஞ்சோதி(25), மதுரையை சேர்ந்த இக்பால்(27), சம்பா(46), விஸ்வா, ரங்கத்தைச் சேர்ந்த ராமன்(67), திருப்பதியை சேர்ந்தவர் ருத்விக்(19), சுனில்(30), தாசின்நிகார்(30), மதுசூதனன்செட்டி(62), ராணிப்பேட்டை மதன்குமார்(39) உட்பட 29 பேருக்கு காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து, தகவலறிந்து வந்த ஆரணி போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கத்தனர். அங்கு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், 5 பேரை மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்