ஆமை வேகத்தில் நடந்து வரும் ஆளவந்தார் கோயில் கட்டுமான பணி: விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

மாமல்லபுரம், மே 13: மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி கிராமத்தை சேர்ந்தவர் ஆளவந்தார் நாயக்கர். இவர், ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில், கடற்கரையொட்டி சவுக்கு கன்று பயிரிட்டு பராமரித்து வந்தார். இவரை ஊக்கப்படுத்த ஆங்கிலேய அரசாங்கம் அவருக்கு 1,054 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கியது. இவர், கடந்த 1914ம் ஆண்டு தனது சொத்துகள் அனைத்தையும் தர்ம சாசனங்களுக்கு பயன்படுத்த வேண்டுமென கைப்பட உயில் சாசனம் எழுதி வைத்துவிட்டு மறைந்தார். இவரது, சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயில், மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில், திருப்பதி வெங்கடாஜலபதி கோயில்களில் உற்சவத்தின்போது அன்னதானம் வழங்க வேண்டுமென உயிலில் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது, இவரது சொத்துக்களை இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நெம்மேலியில், 1967ம் ஆண்டு ஆளவந்தாருக்கு தனி கோயிலும், முன் மண்டபமும் கட்டப்பட்டது. மேலும், கோயிலில் தினமும் பூஜைகள் செய்து விழா நடந்து வந்தது. இந்த கோயில் மற்றும் முன்புறம் உள்ள மண்டபம் கடல் காற்றினாலும், பேரிடர் இயற்கை சீற்றத்தினாலும் மேற்கூரைகள் சேதமடைந்து சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தது. கடந்தாண்டு, சட்டமன்ற கூட்ட தொடரின்போது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ₹1 கோடி நிதி ஒதுக்கி, கோயில் மற்றும் முன்புற மண்டபம் முழுமையாக இடித்து அகற்றி கருங்கல்லில் கட்டப்படும் என அறிவித்தார். இதையடுத்து, இந்து சமய காஞ்சிபுரம் இணை ஆணையர் வான்மதி முன்னிலையில், கோயிலில் இருந்த ஆளவந்தார் சிலையை அருகில் உள்ள ஒரு ஷெட்டில் வைத்து பாலாலய பிரதிஷ்டை மற்றும் பூஜைகள் செய்து, கோயில் மற்றும் முன் மண்டபம் கருங்கல்லில் கட்டுவதற்கான பணிகள் ஜனவரி மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. தற்போது, சில காரணங்களுக்காக தொய்வு ஏற்பட்டு பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘தனது சொத்துக்கள் அனைத்தையும் தர்மசாசனத்து உயில் எழுதி வைத்து விட்டு மறைந்த ஆளவந்தார் கோயில் கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும். ஆளவந்தார் அறக்கட்டளை நிர்வாகத்தும், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர். எனவே, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தனி கவனம் செலுத்தி ஆளவந்தார் கோயில் கட்டுமான பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்றார்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை