ஆமைகள், நண்டுகள் ஓடி விளையாடிய கீழக்கரை கடற்கரையை அழகுடையதாக மாற்ற வேண்டும்: இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

கீழக்கரை: கீழக்கரை கடற்கரையில் குப்பகைள் அதிகம் சேர்ந்துள்ளதுடன், கடலில் கழிவுநீரும் கலக்கிறது. இதனால் அனைவரும் கண்டு ரசித்த அழகான கடற்கரை தற்போது அவலத்திற்குரிய இடமாக மாறியுள்ளது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரியுள்ளனர். கீழக்கரை கடற்கரை பல ஆண்டுகளுக்கு முன் கழிவுகள் இல்லாமல் சுத்தமாக காட்சியளிக்கும் கடற்கரையாக இருந்து வந்தது. இந்த கடற்கரைக்கு குழந்தைகளுடன் செல்பவர்கள் மணல் வெளியில் ஓடி விளையாடும் சிறு ஆமைகள், நண்டுகளை ரசிப்பதுடன், அவற்றை பிடிக்க ஓடிச்செல்வது வழக்கம். கீழக்கரையில் உள்ள நீண்ட கடற்கரை பகுதியில் எங்கு வேண்டுமானாலும் அமர்ந்து கடல் அலைகளின் அழகை ரசிக்கலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் காலப்போக்கில் கழிவு நீரும் பிளாஸ்டிக் குப்பைகளும் கீழக்கரை கடற்கரை பகுதியை அசுத்தமாகியது. தற்போது கடற்கரை பகுதி முன்பு இருந்ததை காட்டிலும் ஓரளவு சுத்தமாக இருந்தாலும் முழுமையாக சுத்தமடையவில்லை.இன்று சிறு ஆமைகள், நண்டுகள் என கடலோரம் வரக்கூடிய கடல் வாழ் உயிரினங்களையும் காண முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது கடற்கரை பாலம் அமைந்துள்ள பகுதி மட்டும் சுத்தமாக காட்சியளிக்கிறது. அருகிலுள்ள ஊர்களின் கடற்கரையோரம் ஆமைகள் குஞ்சு பொரிப்பது குறித்த செய்திகள் வெளியாகின்றன. ஆனால் கீழக்கரைக்கு அந்த வாய்ப்பு இல்லாமல் போனது. இதற்கு காரணம் கீழக்கரை கடற்கரை பகுதியில் கடல் பகுதியில் மாசடைந்து இருப்பதுதான் என்பது மிகுந்த வேதனைக்குரியதாக உள்ளது.சில ஆண்டுகளுக்கு முன்பு கீழக்கரை கடற்கரையை சுத்தம் செய்யும் முயற்சியாக கீழக்கரை இளைஞர்கள அந்த பகுதியில் 30 ஆண்டுகளாக சேர்ந்திருந்த குப்பைகளின் பெரும்பகுதியை அகற்றினர். இதையடுத்து அப்பகுதியில் சிறு பூங்காவும் ஏற்படுத்தப்பட்டது. இந்த பூங்காவை அமைக்கக்கூடாது என சர்ச்சையும் ஏற்பட்டது. இதனால் இளைஞர்களின் முயற்சிக்கு போதுமான ஆதரவு கிடைக்காமல் திட்டம் வெற்றியடையாமல் போனது.கடல் வாழ் உயிரினங்களில் ஆமைகள் கரைப்பகுதிக்கு வந்து மண்ணுக்குள் முட்டையிடுவது வழக்கம். பின் அந்த முட்டையில் இருந்து குஞ்சுகள் வரும் நாளில் மிகச்சரியாக அந்த இடத்திற்கு ஆமைகள் மீண்டும் வந்து சேரும். பின் தன் குஞ்சுகளை கடலுக்குள் அழைத்துச்செல்லும். இந்த பணிகள் நடைபெற வேண்டும் என்றாலம் கடற்கரை அதற்கு வசதியானதாக இருக்க வேண்டும். இதுபோல் இனப்பெருக்கம் செய்யும் கடல் வாழ் உயிரினங்களின் வருகை தற்போது கீழக்கரையில் குறைந்துள்ளது.இதற்கு கடற்கரை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள், கழிவுநீர் கடலில் கலப்பது, கடற்கரை முழுவதும் குவிந்திருக்கும் குப்பகைள் உள்ளிட்டவை காரணங்களாக அமைந்துள்ளது. எனவே கடல் வாழ் உயிரினங்களுக்கு மட்டுமின்றி கடலின் அழகை ரசிக்க வரும் பொதுமக்கள் மற்றும் இயற்கையை காக்கும் வகையில் கடற்கரை பகுதியில் குப்பை கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும். அதோடு கடலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். வேறு வழியின்றி கடற்பகுதிக்கு வரும் கழிவுநீரை சுத்திகரித்துவிட வேண்டும். இதுபோன்ற பணிகளை மேற்கொண்டால் மட்டுமே செய்தால் மீண்டும் கீழக்கரை கடற்கரை பகுதி இயற்கை எழில் கொஞ்சும் இடமாக மாறும். எனவே இதற்கான பணிகளை அதிகாரிகளுடன் இணைந்து பொதுமக்களும் துவக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்