ஆபாச சி.டி. வழக்கில் நீதி விசாரணை நடத்த கோரிக்கை பேரவையில் காங்கிரஸ் தர்ணா

* நாள் முழுவதும் முடங்கிய கூட்டத்தொடர் * கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் * சித்தராமையா அறிவிப்புபெங்களூரு: ஆபாச சி.டி. வழக்கில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்களின  தொடர் தர்ணாவின் காரணமாக பேரவை நாள் முழுவதும் முடங்கியது. கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் வரை போராட்டம் தொடரும் என எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா அறிவித்துள்ளதால் பகல்-இரவு  போராட்டத்தில் காங்கிரசார் ஈடுபடலாம் என தெரிகிறது.  கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 4ம்தேதி தொடங்கியது. வருகிற 26ம்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த 8ம்தேதி முதல்வர் எடியூரப்பா பட்ஜெட் தாக்கல் செய்தார். சிவராத்திரி விடுமுறைக்கு பிறகு கடந்த திங்கட்கிழமை பேரவை மீண்டும் கூடினாலும் ரமேஷ் ஜார்கிஹோளி ஆபாச சி.டி. விவகாரம் ஒட்டுமொத்த அவை நடவடிக்கை முழுவதையும் முடக்கியது. நேற்று முன்தினம் சி.டி. விஷயத்தை பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா எழுப்பி ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.  சபாநாயகர்  காகேரி, ஒத்தி வைப்பு தீர்மானத்திற்கு அனுமதி அளிக்கவில்லை என்றாலும் விதி 69ன்கீழ் விவாதிக்க அனுமதி வழங்கினார். இதன் மீது எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, டிகே சிவகுமார், ராமலிங்கரெட்டி, எச்.கே. பாட்டீல், மாஜி சபாநாயகர் ரமேஷ்குமார் விவாதம் நடத்திய நிலையில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து பேரவையில் காங்கிரசார் தர்ணாவில் ஈடுபட்டனர். சபாநாயகர் காகேரி இருக்கை முன்பு காங்கிரஸ் உறுப்பினர்கள் சங்கமேஸ்வர் உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டதால் அமளி துமளி ஏற்பட்டது. சபாநாயகர் காகேரி எதிர்க்கட்சி உறுப்பினர்களை சமாதானம் செய்ய முயன்றாலும் அதில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதையடுத்து பேரவை ஒத்தி வைக்கப்பட்டது. நேற்று காலை 11 மணி அளவில் மீண்டும் அவை கூடுவதற்கான மணி ஒலித்த போதே சபாநாயகர்  இருக்கை முன்பு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தலைமையில் காங்கிரசார் குவிந்து தயாராக நின்றனர். சபாநாயகர் காகேரி பேரவைக்குள் நுழைந்த மறுநிமிடம் காங்கிரசார் சி.டி.களை கையில் வைத்துக்கொண்டு அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். சபாநாயகர் காகேரி எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றாலும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. இதையடுத்து அவை 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோருடன் சபாநாயகர் காகேரி அவசர ஆலோசனை நடத்தினார்.  அதன் பிறகு பகல் 12.40 மணி அளவில் மறுபடியும் அவை கூடினாலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தர்ணாவை கைவிடவில்லை என்பதால் பிற்பகல் 3 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது. பிற்பகலில் மறுபடியும் அவை கூடினாலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் தர்ணாவின் காரணமாக எந்த அலுவலும் நடைபெற இயலவில்லை. எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, சி.டி. விவகாரத்தில் மாநில அரசின் எஸ்.ஐ.டி. விசாரணை நாங்கள் ஏற்க தயாராக இருக்கிறோம். அதே நேரம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மேற்பார்வையில் இந்த விசாரணை நடைபெறவேண்டும். ஆபாச சிடி பயத்தில் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ள அமைச்சர்கள் 6 பேரும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு உள்துறை அமைச்சர் பசவராஜ்பொம்மை உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து பதில் கூறினர். இவ்வாறு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் போராட்டத்தினால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. சபாநாயகர் காகேரி, பட்ஜெட் மீது விவாதம் நடைபெறவேண்டும், மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்த வேண்டும் என்பதை நினைவுப்படுத்தி எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் உறுப்பினர்களை இருக்கைக்கு திரும்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதை ஏற்காமல் தர்ணாவில் ஈடுபட்ட காரணத்தினால் சபாநாயகர் காகேரி, அவை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார். இன்று காலை 11 மணிக்கு கூடும் நிலையில்  சி.டி. வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும் வரை அதாவது ரமேஷ்ஜார்கிஹோளி மீது எப்.ஐ.ஆர்.பதிவு செய்ய வேண்டும் அத்துடன் சி.டி. விஷயத்தில் தடை உத்தரவு பெற்றுள்ள அமைச்சர்கள் 6 பேரும் பதவியை ராஜினாமா செய்யும் வரை எங்களின் போராட்டம் நிற்காது என எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உறுதிபட அறிவித்துள்ளார்.  சி.டி. விஷயத்தில் தடை உத்தரவு பெற்றுள்ள அமைச்சர்கள் 6 பேரும் பதவியை ராஜினாமா செய்யும் வரை எங்களின் போராட்டம் நிற்காது என எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உறுதிபட அறிவித்துள்ளார்….

Related posts

வன்முறையையும் வெறுப்பையும் பரப்பும் பாஜகவினர் இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை புரிந்து கொள்ளவில்லை: ராகுல் காந்தி கருத்து

பீகார் சிவான் மாவட்டத்தில் கண்டகி நதியில் கட்டப்பட்டுள்ள பாலம் இடிந்து விழுந்து விபத்து

மீண்டும் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்!