ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த எஸ்பி தொடர்புக்கு உதவிய ஆசிரியைக்கு பாராட்டு திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு முகாமில்

திருவண்ணாமலை, ஜூலை 20: திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு குறைதீர்வு முகாம் நடந்தது. அப்போது, ஆன்லைன் மோசடியில் இழந்த ₹4,600 மீட்டு, சம்மந்தப்பட்ட பெண்ணிடம் எஸ்பி ஒப்படைத்தார். இதில் பெண்ணுக்கு உதவிய ஆசிரியைக்கு பாராட்டு ெதரிவித்தார். திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில், வாரந்தோறும் புதன் கிழமையன்று சிறப்பு குறைதீர்வு கூட்டம் நடக்கிறது. போலீஸ் ஸ்டேஷன்களில் தங்கள் புகார் மனுக்களுக்கு தீர்வு கிடைக்காத பொதுமக்கள், இக்கூட்டத்தில் மனு அளித்து பயன்பெறுகின்றனர். அதன்படி, திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில், சிறப்பு குறைதீர்வு முகாம் எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் நேற்று நடந்தது. அதில், ஏடிஎஸ்பி பழனி மற்றும் டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது, பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட எஸ்பி கார்த்திகேயன், அவர்களுடைய மனுக்கள் மீது உடனடி விசாரணை நடத்தினார். மேலும், சம்மந்தப்பட்ட சப் டிவிஷன் டிஎஸ்பியிடம் அந்த மனுவை அளித்து, உடனடியாக விசாரணை நடத்தி தீர்வு காணுமாறு எஸ்பி கார்த்திகேயன் உத்தரவிட்டார். நேற்று நடந்த முகாமில் 21 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். முதற்கட்ட விசாரணை முடிந்த மனுக்கள், தொடர் நடவடிக்கைக்காக சம்மந்தப்பட்ட டிஎஸ்பிக்களுக்கு எஸ்பி கார்த்திகேயன் பரிந்துரை செய்தார்.

இந்நிலையில், செங்கம் தாலுகா, செல்வநாயக்கன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ராதிகா என்பவர் ஆன்லைன் மோசடியில் பறிகொடுத்த ₹4,600ஐ மீட்டுத்தருமாறு நேற்று முன்தினம் சைபர் கிரைம் உதவி எண் 1930ஐ தொடர்புகொண்டு புகார் அளித்தார். மேலும், குலுக்கல் மூலம் தன்னுடைய செல்போன் எண் தேர்வு செய்யப்பட்டதாகவும், அதில் ₹1 லட்சம் பரிசு விழுந்திருப்பதாகவும், ராதிகாவை மர்ம நபர் ஒருவர் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது, ஜிஎஸ்டியாக ₹4,600 செலுத்தினால், வங்கி கணக்குக்கு பணம் அனுப்பப்படும் என தெரிவித்து, ஓடிபி எண்ணை பெற்றுள்ளார். அதன்மூலம், அவரிடம் இருந்து ₹4,600ஐ அபகரித்துள்ளனர்.

இது தொடர்பாக, சைபர் கிரைம் ஏடிஎஸ்பி பழனி தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி, மோசடி ஆசாமி அபகரித்த ₹4,600ஐ மீட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து, நேற்று நடந்த சிறப்பு குறைதீர்வு கூட்டத்தில், ஆன்லைன் மோசடியில் பணத்தை பறிகொடுத்த ராதிகாவிடம் மீட்கப்பட்ட ₹4,600ஐ எஸ்பி கார்த்திகேயன் ஒப்படைத்தார். மேலும், உடனடியாக உதவி எண்ணுக்கு தொடர்புகொள்ள வழிகாட்டிய ராதிகாவின் கிராமத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியைக்கு எஸ்பி பாராட்டு தெரிவித்தார்.

Related posts

துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கம்

நெல்லில் நவீன ரக தொழில் நுட்ப பயிற்சி