ஆன்லைன் கல்வி கற்க வசதியில்லை கிராமங்களுக்கே சென்று பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்-வீட்டிலேயே முடங்கியிருந்த மாணவர்கள் உற்சாகம்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் கிராமங்களுக்கே சென்று அரசுப்பள்ளி ஆசிரியர் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தி வருவதை பலரும் பாராட்டி வருகின்றனர்.நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா ஊரடங்கில், தொடர்ந்து இந்த (இரண்டாவது) கல்வியாண்டிலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன்மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தனியார் பள்ளியில் படிக்கும் வசதிபடைத்த மாணவ, மாணவிகளுக்கு கிடைத்த இந்த ஆன்லைன் வகுப்புகள் அரசுப்பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு எட்டாக்கனியாகத்தான் உள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் அதிக கிராமப்புறங்களைக்கொண்ட, கல்வியில் பின்தங்கிய மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளும், அதில் படிக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகம். கொரோனா அச்சுறுத்தலால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வீட்டிலேயே முடங்கியுள்ளனர். நேரடிவகுப்பில் பங்கேற்று பல மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் அந்த கவலையை தற்போது போக்கி வருகிறார். ஆம், விழுப்புரம் அருகே உள்ள கஞ்சனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம்வகுப்புவரை சுமார் 350 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பணியாற்றிவரும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஜெயராணி என்பவர், கிராமங்களுக்கே சென்று மாணவ, மாணவிகளை பொதுவான இடங்களில் அமர வைத்து பாடம் கற்பித்து வருகிறார். இப்பள்ளியில் அருகில் உள்ள நரசிங்கனூர், புதுர், கஞ்சனூர் உள்ளிட்ட 9 கிராமங்களைச்சேர்ந்த மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். சனி, ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து மற்ற 5 நாட்களிலும், தினம் ஒரு கிராமம் தேர்வு செய்து அங்குள்ள 6 முதல் 10ம்வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு அறிவியல், கணிதம், ஆங்கிலப்பாடங்களையும் நடத்தி வருகிறார். காலை முதல் மாலை வரை அதே கிராமத்தில் தங்கி ஆசிரியர் பணியை செவ்வனே செய்து வருவது மாணவர்கள் மட்டுமல்ல பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த ஒன்றரைஆண்டுகளாக வீட்டிலேயே முடங்கியிருந்த மாணவ, மாணவிகள் நேரடி வகுப்பில் பங்கேற்றதால் உற்சாகமடைந்து ஆர்வத்துடன் கல்வி கற்று வருகின்றனர். இதுகுறித்து மாணவ, மாணவிகள் கூறுகையில், எங்களது பெற்றோர்கள் கூலிவேலை செய்துதான் படிக்க வைக்கின்றனர். ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க ஆன்ட்ராய்டு போன் தேவை. ஆனால், அவ்வளவுபணம்கொடுத்து எங்களது பெற்றோர்கள் வாங்கிக்கொடுக்க மாட்டார்கள். இதனால், பாடம்கற்றுக்கொள்வதில் மிகுந்தசிரமம் ஏற்பட்டது. தொலைக்காட்சி வசதியும், கேபிள் இணைப்புக்கு பணம்கட்டவும் வசதியில்லாததால் அரசு துவங்கிய கல்வி சேனலைக்கூட எங்களால் பார்க்க முடியாத நிலை இருந்தது. இந்த சூழலில்தான், எங்கள் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் ஜெயரானி, எங்களின் கிராமங்களுக்கே வந்து பாடம் சொல்லித்தருகிறார். இதனால், மனக்கவலையும் நீங்கிவிட்டது. மனதில்உற்சாகமும் ஏற்பட்டு ஆர்வத்தோடு படித்து வருவதாக தெரிவித்தனர். பிள்ளைகளின் வறுமை நிலை மனதை உறுத்தியதுஇதுகுறித்து ஆசிரியர் ஜெயராணி கூறுகையில், எங்கள் பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் ஏழை, எளிய குடும்பத்திலிருந்துதான் வருகின்றனர். கொரோனா காலத்தில் கல்வி கற்க போன் வசதியும் இல்லை. பெற்றோரிடம் போன் இருந்தாலும் நெட்வசதிக்கு ரீச்சார்ஜ் செய்ய காசு இருக்காது. வறுமையில் உள்ள மாணவ, மாணவிகளின் நிலைமை எனது மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. அப்போதுதான் முடிவுசெய்தேன். வீட்டிற்கே சென்று பாடம் கற்பிக்கலாம் என்று. தற்போது, கொரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில், தினமும் ஒவ்வொரு கிராமமாக சென்று பொதுவான பாடங்களை நடத்தி, அவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்து வருகிறேன். பெற்றோர்களும் துணையாக இருக்கின்றனர். ஒன்றரை ஆண்டுகளாக வீட்டிலேயே முடங்கியுள்ள மாணவ, மாணவிகளின் மனநிலை பாடம் நடத்துவதன் மூலம் புத்துணர்ச்சி பெறுகிறது.இவ்வாறு அவர் கூறினார். …

Related posts

சிறுமியின் ஆபாச படத்தை காட்டி பணம் கேட்டு மிரட்டல்; கூலிப்படையை அனுப்பி பைனான்ஸ் அதிபர் கொலை: 8 பேர் கும்பலுக்கு வலை; தந்தையிடம் விசாரணை

கஞ்சா வழக்கில் யூடியூபர் சங்கர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

தமிழகத்தில் ஜிகா வைரஸ் தீவிர கண்காணிப்பு; மக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை: பொது சுகாதாரத்துறை தகவல்