ஆன்லைனிலே மீண்டும் வீட்டு வரி பெயர் திருத்தம் வசதி வேண்டும்

 

தேனி, ஜூன் 7: தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் கடந்த 2023ம் ஆண்டு வரை வரிவசூல் செய்யும் பணிகளை ஊராட்சி கிளர்க்குகள் நேரடியாக மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து கடந்த 2023ம் ஆண்டு மே முதல் அனைத்து ஊராட்சிகளிலும் ஆன்லைன் மூலம் வரிவசூல் செய்யும் நடைமுறை அமலுக்கு வந்தது. இதன்படி வரி வசூல் செய்யும் போது பெயர் மாற்றம், திருத்தம் போன்றவை கடந்த 2024 மார்ச் மாதம் வரை ஆன்லைனில் இருந்து வந்தது. இதனால் ஊராட்சி கிளர்க்குகள் பெயர் மாற்றம், பெயர் திருத்தம் செய்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஏப்.1ம் தேதி முதல் ஊராட்சிகளில் ஆன்லைனில் பெயர் மாற்றம், திருத்தம் செய்யும் வசதி திடீரென நீக்கப்பட்டது. இதனால் தற்போது வரி வசூலிக்கும் போது பெயர் மாற்றமோ அல்லது பெயர் திருத்தமோ செய்ய முடியவில்லை. இந்த நடைமுறையால் கட்டிய வீடுகளை கான்ட்ராக்டர்களிடம் இருந்து வாங்குபவர்கள், தங்களது பெயரில் மின் இணைப்பு கூட பெற இயலவில்லை.

எல்லாம் பழைய பெயரிலேயே தொடர்வதால் கிராமமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி கிளர்க்குகள் கூறுகையில், ‘எங்கள் அலுவலக கம்ப்யூட்டரில் பெயர் மாற்றம், திருத்தம் செய்யும் வசதி இந்த ஆண்டு ஏப்.1ம் தேதி முதல் முடக்கப்பட்டு விட்டது. கம்ப்யூட்டரில் அதற்குரிய வசதி இல்லாததால் மேற்கண்ட பணிகளை எங்களால் செய்ய முடியவில்லை’ என்றனர். இதுசம்மந்தமாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு