ஆந்திர மாநில அமைச்சர் கவுதம் ரெட்டி மாரடைப்பால் காலமானார் : தலைவர்கள் இரங்கல்

ஹைதராபாத்: ஆந்திர மாநில அமைச்சர் கவுதம் ரெட்டி இன்று காலை மாரட்டைப்பால் காலமானார். 51 வயதான இவர் நெஞ்சுவலி காரணமாக ஹைதராபாத் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு காலை 7.45 மணியளவில் மயங்கிய நிலையில் கொண்டு வரப்பட்டுள்ளார். கவுதம் ரெட்டியை பரிசோதித்த அப்பல்லோ மருத்துவர்கள், அவர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டபோதே பேச்சு, மூச்சற்ற நிலையில் கொண்டுவரப்பட்டதாகவும் அவருக்கு வீட்டிலேயே பலத்த மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். இருப்பினும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிபிஆர் உள்ளிட்ட முதலுதவிகள் செய்யப்பட்டன. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார் எனத் தெரிவித்தனர்.2019ம் ஆண்டு முதல் ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவையில் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்த கவுதம் ரெட்டி, நெல்லூர் மாவட்டம் அத்மகூர் தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது தந்தை ராஜா மோகன் ரெட்டி, நெல்லூர் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து 4 முறை தேர்வு செய்யப்பட்டவர். துபாயில் நடைபெற்ற சர்வதேச தொழில் அமைப்பினர் மாநாட்டில் கலந்து கொண்ட கவுதம் ரெட்டி நேற்று முன் தினம் ஹைதராபாத் திரும்பினார். அவரது திடீர் மரணத்தால் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் அமைச்சர் கவுதம் ரெட்டி மறைவுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே அவரது மகன் மேகபதி ராஜமோகன ரெட்டி, தந்தை மறைவுச் செய்தியறிந்து துபாயிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார். …

Related posts

நிதிஷை நீக்கும் வரை முடி வெட்டமாட்டேன் என்ற சபதம் நிறைவேற்றம்; அயோத்தியில் மொட்டை போட்ட பீகார் மாநில துணை முதல்வர்

வேகமெடுக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு: விழிப்புடன் இருக்க மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்