ஆந்திராவில் நடந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் கஞ்சா வியாபாரிகளை பிடிக்கசென்ற மதுரவாயல் போலீசார் மீது வெடிகுண்டு வீச்சு: சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் காயம்; கூட்டாளிகள் 3 பேர் சிக்கினர்

சென்னை: தமிழகத்துக்கு கஞ்சா சப்ளை செய்யும் கும்பலை பிடிக்கச் சென்ற தமிழக போலீசார் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசியதில் எஸ்ஐ உள்பட 3 பேர் படுகாயமடைந்த சம்பவம், காவல் துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, போரூர், வளசரவாக்கம், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில், இளைஞர்கள், மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. இதற்காக, ஆந்திராவில் இருந்து கஞ்சா மொத்தமாக கடத்தி வந்து, தமிழகத்தில் பொட்டலங்களாக பிரித்து சில்லறை விற்பனை செய்யப்படுகிறது.  இதுகுறித்து பூந்தமல்லி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து புளியம்பேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பூந்தமல்லி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில் வீட்டிற்குள் பதுங்கி இருந்த கல்லூரி மாணவர்கள் எழிலரசன், பிரித்திவிராஜ், உதயகுமார், டேவிட் உட்பட 10 பேரை கைது செய்து 18 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் மதுரவாயல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மதுரவாயல் போலீசார் 10 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில், ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் தடாவை சேர்ந்த முக்கிய புள்ளியான ஹரி என்பவர்தான் கஞ்சாவை சப்ளை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மதுரவாயல் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் மதுரவாயல் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையில் தனிப்படை போலீசார் கஞ்சா வியாபாரியை பிடிக்க 2 நாட்களுக்கு முன் ஆந்திர மாநிலம் தடாவுக்கு சென்றனர். இந்தக் குழுவில் மதுரவாயல் காவல் நிலைய முதல்நிலை காவலர் வெயில் முத்து மற்றும் போலீசார் மிலன் மற்றும் மூன்று ஊர்க்காவல் படைவீரர்கள் ஆகியோர் இருந்தனர். உடன் கஞ்சா வியாபாரியை அடையாளம் காட்ட அவர்களின் கூட்டாளி ஒருவரையும் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.இந்தநிலையில் நேற்று அதிகாலை தடா அருகே பேடிலிங்கலுபாடு என்ற இடத்தில் உள்ள கஞ்சா வியாபாரி ஹரியின் கூட்டாளிகள் தங்கியிருந்த ஒரு வீட்டுக்குள் மதுரவாயல் போலீசார் அதிரடியாக நுழைந்தனர். ஆனால் அங்கு ஹரி இல்லை. அவரது கூட்டாளிகள் மட்டும் சிலர் இருந்தனர். பின்னர் சப் இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் சோதனை செய்தபோது அங்கிருந்து சுமார் 2 கிலோ கஞ்சா மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்போது ஆயதங்களுக்கிடையே வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டு ஒன்று கீழே விழுந்ததாகவும், போலீசாரை கண்டதும் கஞ்சா கும்பல் நாட்டு வெடிகுண்டை போலீசார் மீது வீசியதாக கூறப்படுகிறது. இதில் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியதில் சப் இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் முதல்நிலை காவலர் வெயில்முத்து, உள்பட 3 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த சத்தம்கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அவர்களுக்கு உதவி செய்தனர். இந்த சம்பவம் குறித்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கும் எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அருகில் எங்கேயும் சிகிச்சை எடுக்காமல், அங்கிருந்து சென்னைக்கு வந்து, மதுரவாயல் ஆலப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் சுதாகருக்கு காது கிழிந்து கேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தலைமைக் காவலருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் கஞ்சா வியாபாரியான ஹரியின் கூட்டாளிகளான வண்டலூரை சேர்ந்த நரேஷ், டில்லி ஆந்திராவை சேர்ந்த முரளி ஆகிய 3 பேரையும் ஆந்திராவிலிருந்து தனிப்படை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்துள்ளனர். தனிப்படை போலீசார் உயர் அதிகாரிகளுக்கு உரிய தகவல் தெரிவிக்காமல் ஆந்திரா மாநிலம் தடா சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும் சம்பவம் நடந்த பகுதிக்கு அருகே இருந்த காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில் கஞ்சா வியாபாரி ஹரியை பிடிக்க முயன்றபோது அவரது கூட்டாளிகள் வெடிகுண்டு வீசியதில் தான் 3 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஆந்திர மாநில போலீசார் மதுரவாயல் போலீஸ் நிலையம் வந்து கைதுசெய்து அழைத்து வரப்பட்டவர்களிடம் விசாரணை செய்தனர். மேலும் நாட்டு வெடிகுண்டு வெடித்து  காயமடைந்து தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் போலீசாரிடமும் விசாரணை நடத்தி விட்டு சென்றனர். தனிப்படையினர் உயர் அதிகாரிகளுக்கு உரிய தகவல் தெரிவிக்காமல் ஆந்திரா மாநிலம் தடா சென்றதாகக் கூறப்படுகிறது. அருகே இருந்த காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கவில்லை….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு