ஆதிதிராவிட, பழங்குடியின முனைவர் பட்ட ஆய்வுக்கு ஊக்கத் தொகை அதிகரிப்பு; தமிழக அரசு உத்தரவு

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மை செயலாளர் கே.மணிவாசன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: ஆதிதிராவிட, பழங்குடியின முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டம் கடந்த 2013-14ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, 700 முழுநேர ஆய்வாளர்களுக்கு வழங்கப்பட்டது. அதற்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டன. இந்நிலையில், கடந்த 2021-22ம் நிதியாண்டில், ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதிதிராவிட முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டது. அத்துடன், ஊக்கத் தொகையும் ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்பட்டதுடன், ஆய்வாளர்கள் எண்ணிக்கையும் 1,200 முதல் 1,600 வரை என உயர்த்தப்பட்டது.இந்நிலையில், தற்போது தமிழக அரசு இந்த ஊக்கத்தொகை பெறுவதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த திட்டமானது, முழு நேர முனைவர் பட்ட ஆய்வாளர்கள் குறிப்பாக, மாநில பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அறிவியல், கலை, சமூக அறிவியல், வணிகவியல், சட்ட பிரிவுகளில் முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு பொருந்தும். ஆண்டுக்கு 1,600 ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர் ஆய்வாளர்களுக்கு வழங்கப்படும். இந்த ஊக்கத் தொகை பெறும் மாணவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது ஆணாக இருந்தால் அதிகபட்சம் 50 ஆகவும், பெண்ணாக இருந்தால் 55 ஆகவும் இருக்கலாம். முதுநிலை பட்டப்படிப்பில் குறைந்த பட்சம் 55 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆய்வாளர் வேறு எந்த உதவித்தொகை, மானியத்தொகை பெற்றிருக்கக்கூடாது. பல்கலைக்கழகம், கல்லூரி, இதர கல்விநிறுவனங்கள், மாநில, மத்திய அரசு பணியாளர்களுக்கு இந்த ஊக்கத் தொகை கிடைக்காது. எம்பில் முடித்தவர்களுக்கு 2 முதல் 4 ஆண்டுகள் வரையும், முதுநிலை பட்டம் முடித்தவர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரையும் ஊக்கத்தொகை கிடைக்கும். ஆண்டுக்கு ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை 10 மாதங்களாக ரூ.10 ஆயிரம் வீதம் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். இதில், 5 சதவீதம் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். இதற்கான விண்ணப்பம் ஆன்லைனில் மட்டுமே பெறப்படும். தகுதி அடிப்படையில் ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை