ஆண் நண்பர்களுடன் கடலில் குளித்த உ.பி. மாணவி மாயம்

 

காலாப்பட்டு, ஆக. 26: புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த உ.பி. மாணவி, காலாப்பட்டு அருகே ஆண் நண்பர்களுடன் கடலில் குளித்த போது அலையில் சிக்கி மாயமானார். அவரை மீனவர்கள் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர். உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியை சேர்ந்தவர் சவுமியா (24), கல்லூரி மாணவி. இவர் தனது ஆண் நண்பரான சித்தார்த்தின் தாய் ஜெயந்தி (45) என்பவருடன் கடந்த 22ம் தேதி புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார். புதுச்சேரியில் பல்வேறு இடங்களுக்கு சென்ற அவர்கள், ஆரோவில் குயிலாப்பாளையம் பகுதியில் அறை எடுத்து தங்கினர்.

இருவரும் நேற்று முன்தினம் ஊர் திரும்ப திட்டமிட்டு இருந்தனர். ஆனால் நண்பரின் தாய் ஜெயந்திக்கு மட்டும் டிக்கெட் கிடைத்தது. ஆகையால் அதன்பிறகு சவுமியா, ஊர் திரும்ப திட்டமிட்டிருந்தார். அதனால் அவர், ஏற்கனவே தங்கியிருந்த விடுதிக்கு அவர் திரும்பினார். இதற்கிடையே நேரத்தை கழிக்க அவர், பொம்மையார்பாளையம் கடற்கரைக்கு செல்ல திட்டமிட்டு, தனது அறைக்கு பக்கத்தில் தங்கியிருந்த திண்டுக்கல் உத்தம்பட்டியை சேர்ந்த சுரேஷ்குமார் (27), விடுதி ஊழியர் பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த மணீஷ் (32) ஆகியோருடன் பொம்மையார்பாளையம் கடலில் குளித்து விளையாடி மகிழ்ந்தார்.

அப்போது திடீரென வந்த ராட்சத அலையில் மாணவி சவுமியா இழுத்து செல்லப்பட்டார். அதிர்ச்சி அடைந்த சுரேஷ்குமார், மணீஷ் ஆகிய இருவரும் அருகிலிருந்த மீனவர்களிடம் நடந்ததை கூறினர். தகவலறிந்த கோட்டக்குப்பம் போலீசார், பொம்மையார்பாளையம் கடற்கரைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்ட மாணவி சவுமியா என்ன ஆனார்? என தெரியவில்லை.

கடலில் இழுத்து செல்லப்பட்ட மாணவி சவுமியாவை மீனவர்கள் உதவியுடன் கோட்டக்குப்பம் போலீசார் தேடி வருகின்றனர். உத்தரபிரதேசத்தில் உள்ள மாணவியின் பெற்றோருக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். சுரேஷ்குமார், மணீஷ் ஆகியோரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்

மது அருந்த பணம் தராததால் தற்கொலை

கல்லூரி விடுதியில் மாணவி மாயம்