ஆண்டிபட்டி பகுதியில் பானிபூரி கடைகளில் அதிகாரிகள் சோதனை: 5 கடைகளுக்கு அபராதம்

ஆண்டிபட்டி, ஜூலை 10: ஆண்டிபட்டி பகுதியில் உள்ள பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் சாயம் கலந்த பொறித்த உணவுகள் விற்பனை செய்த 5 கடைகளுக்கு அபராதம் விதித்தனர். பானிபூரியில் கலக்கும் செயற்கை நிறமிகளால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக கர்நாடகா அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து சென்னையிலும் ஆய்வுக்காக பானிபூரி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பானிபூரி கடைகளிலும் சோதனை நடத்த உணவுத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்படி ஆண்டிபட்டி பகுதியிலுள்ள பானிபூரி கடைகளில் ஆண்டிபட்டி வட்டார உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஜனகர் ஜோதிநாதன், ஆண்டிபட்டி எஸ்ஐ பிரபா மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் இணைந்து அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். பானிபூரிக்கு வழங்கப்படும் மசாலா நீரில் உடலுக்கு தீங்கு விளைவிக்ககூடிய சாயம் கலக்கப்பட்டுள்ளதா?, பாதுகாப்பான முறையில் பானிபூரி விற்கப்படுகிறதா என்று ஆய்வு செய்து பகுப்பாய்விற்காக மாதிரிகளை எடுத்து சென்றனர். சாயம் கலந்து விற்கப்பட்ட சிக்கன், காலிபிளவர் உள்ளிட்ட பொறித்த உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர். இதுதொடர்பாக 5 கடைகளுக்கு தலா ரூ.1000 அபராதம் விதித்தனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி