ஆண்டிபட்டி அருகே இடிந்து விழும் நிலையில் கலையரங்கம்-சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே, இடிந்து விழும் நிலையில் உள்ள கலையரங்கத்தை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பிச்சம்பட்டி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் கட்டிட தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், கிராம மக்களின் பயன்பாட்டிற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி நிர்வாகம் சார்பில் கலையரங்கம் கட்டப்பட்டது. கோயில் திருவிழாக் காலங்களில், கிராம பொது நிகழ்ச்சிகளை கலையரங்கத்தில் நடத்தி வந்தனர். இந்தக் கிராமத்தில் ரேஷன் கடை இல்லாததால், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வரை இந்த கலையரங்கம் ரேஷன் கடையாக செயல்பட்டு வந்தது. பகல் மற்றும் இரவு நேரங்களில் கிராம மக்கள் ஓய்வு எடுப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாததால் கலையரங்கம் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. கலையரங்கத்தில் மேற்பகுதியில் பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு மிகவும் சேதமடைந்துள்ளது. சிறுவர்கள் அந்த பகுதியில் விளையாடுவதால் பெற்றோர் மிகவும் அச்சப்படுகின்றனர். திருவிழா காலங்களில் இந்த கலையரங்கத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கலையரங்கத்தில் மேல் பகுதியில் உள்ள சிமெண்ட் பூச்சு பெயர்ந்து அடிக்கடி கீழே விழுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் சேதமடைந்து காணப்படும் கலையரங்கத்தை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

நீட் தொடர்பான தவெக தலைவர் விஜய் கருத்தை காங்கிரஸ் வரவேற்கிறது: செல்வப்பெருந்தகை

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம்!!

என்றும் எப்போதும் தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் : தமிழ்நாடு அரசு புகழாரம்