Saturday, July 6, 2024
Home » ஆண்கள்தான் டிபென்டென்ட்… பெண்கள் இன்டிபென்டென்ட்…

ஆண்கள்தான் டிபென்டென்ட்… பெண்கள் இன்டிபென்டென்ட்…

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் தோழி சொல்கிறார் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிஎப்போதெல்லாம் சோர்வடைகிறேனோ அப்போதெல்லாம், நான் வாங்கிய பாராட்டுப் பத்திரங்களையும், பெற்ற மெடல்களையும் எடுத்து பார்ப்பேன்.. மீண்டும் எழுந்து ஓட ஆரம்பிப்பேன் எனப் பேசத் தொடங்கிய டி.பி.சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி மிகச் சமீபத்தில் பெய்த பெருமழையில், கீழ்ப்பாக்கம் கல்லறையில் மயங்கிய நிலையில் கிடந்த வரை தனது தோள்களில் சுமந்து காப்பாற்றி அனைவரின் கவனத்தை ஈர்த்தவர். அவரிடம் உரையாடியதில்.. தங்களின் இளமைக் காலம்…எனக்கு ஊர் பெரியகுளம். ஆனால் பிறந்தது திருநெல்வேலி. படித்தது சென்னையில். சென்னை எம்சிசி. கல்லூரியில் முதுகலை முடித்தேன். 6ம் வகுப்பு  படிக்கும்போதே விளையாட்டில் ஆர்வம் இருந்தது. கல்லூரியில் சிறந்த விளையாட்டு வீராங்களையாக இருந்ததுடன், அப்போதே கல்லூரியில் நான் பெமீலியர். கல்லூரி வாழ்க்கை எனக்கு வேறொரு வாசலை திறந்துவிட்டது. கல்லூரியில் என்னோடு படித்த பெண் மயங்கி விழ, இதேபோல் அன்றே எனது தோள்களில் தூக்கி போட்டு மூன்றாவது மாடிக்கு கொண்டு சென்று, முதலுதவி செய்திருக்கிறேன். காவல்துறைக்குள் வந்தது… என் அப்பா மலபார் போலீஸில் இருந்து வந்து காவல்துறை உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஹாட் வொர்க்கர். நேர்மையானவர். தைரியமானவர். எனவே சீருடை மீது எனக்கும் காதல் இருந்தது. அதிகாலை எழுவது.. நேரத்தைக் கடைபிடிப்பது.. நேர்த்தியாக உடை உடுத்துவது.. வீட்டில் குழந்தைகளோடு நேரம் செலவு செய்வது.. அன்பாக இருப்பது.. அடுத்தவர்களுக்கு உதவுவதென அப்பாவைப் பார்த்தே வளர்ந்தேன்.  அப்பா ஸ்போர்ட்ஸ் மேன் என்பதைத் தாண்டி குட் சூட்டர். காவல் துறையில் நிறைய பதக்கங்களை வென்றவர். எனக்கு மிகப் பெரிய இன்ஸ்பிரேஷன். அவரைப் பார்த்தே என்னை செதுக்கிக் கொண்டேன்.நான் குழந்தையாக இருக்கும்போதே எழுப்பி கிரவுண்டுக்குப் போகச் சொல்லுவார். பெண்கள் தைரியமா இருக்கனும். நேர்மையா இருக்கனும். தர்மம் செய்யனும்னு சொல்லிக் கொடுத்தார். குழந்தை பருவத்திலே இந்த விசயங்கள் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. முதலில் ராணுவத்தில் சேரவே ஆசைப்பட்டேன். அப்போது ராணுவத்தில் பெண்களை எடுக்க மாட்டார்கள். எனவே காவல்துறை சீருடையை அணிய நேர்ந்தது.அசோக் நகர் காவலர் பயிற்சி கல்லூரியில் இணைந்து ஆணுக்கு நிகராக அனைத்து பயிற்சிகளையும் நானும் எடுத்தேன். பயிற்சியில் எனக்கு ஸ்ட்ராங்கான ஃபவுண்டேஷன் கிடைத்தது. பயிற்சி முடிந்ததும் 1991ல் முதல் நிலைக் காவலராக பணியில் சேர்ந்தேன். 2010ல் காவல் ஆய்வாளரானேன். தற்போது டி.பி. சத்திரம் காவல் நிலைய ஆய்வாளராகப் பொறுப்பேற்று 3 மாதங்கள் ஆகிறது. நேர்மையாக இரு. நியாயத்துக்காகப் போராடு. உன் கண்முன்னால் எந்த குற்றம் நடந்தாலும் தட்டிக் கேளு என்ற என் அப்பாவின் தாரக மந்திரங்களை அப்படியே பின்பற்றி வருகிறேன்.சீறுடையில் செய்த சவால்கள் சில…சவால்கள் நிறைந்த வேலைதான் இது. ஆனால், இது ஒரு டீம் வொர்க். காவல்துறையை பொறுத்தவரை ஒருத்தராகச் சென்று எதையும் சாதிக்க முடியாது. சென்னை பேசின் பிரிட்ஜ்தான் எனக்கு முதல் அப்பாயின்ட்மென்ட். அது ஸ்லம் (slum) ஏரியா. கஞ்சா விற்பவர்களைப் பிடித்தது, குழந்தை கடத்தியவர்களைப் பிடித்தது என நிறைய சவாலான வேலைகள் அங்கிருந்தது. என்னை ஊக்குவிக்கிற மாதிரியான உயரதிகாரிகள் இருந்தார்கள். அப்போதைய கமிஷனர் ஜெயக்குமார் சார் மற்றும் ஜே.சியாக இருந்த சைலேந்திரபாபு சார் சவாலான வேலைகளை என்னை நம்பிக் கொடுத்தார்கள். லா அண்ட் ஆர்டரில் முதல் ஆய்வாளர் நான். நான் எப்போதும் நேருக்க நேராக மோதுபவள். பேஸின் பாலத்தில் கஞ்சா, பிரவுன் சுகர், மாவோ விற்பவர்களை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டேன். அப்போது யாருக்கும் தெரியாமல் மரத்தில் ஏறி உட்கார்ந்து, மரத்திற்கு கீழே பிரவுன் சுகர் பாக்கெட்களை விற்க வந்தவனைக் கையும்களவுமாய் பிடித்தோம். சாராயம் காய்ச்சுபவர்களை பிடிக்க மாறுவேடத்தில் சென்றேன். மாட்டுவண்டியிலும் சென்று பிடித்தேன். எனவே எனக்கு காட்டேறி.. பேயி என பல பெயர்கள் உண்டு(சிரிக்கிறார்).ஒருமுறை கஞ்சா அக்யூஸ்ட் ஒருவன் பாட்டிலை உடைத்து என்னை நோக்கி குத்த வருகிறான். ‘வாடா.. வா குத்து.. குத்து..’ என்றேன். ஆனால் அவன் குத்தவே இல்லை அவன் கைய கீறிக்கொண்டு திரும்பி ஓடிட்டான். சும்மா பயம் காட்டுவானுங்க. வா செய்யுன்னு எதிர்த்து நின்னால் ஓடிருவானுங்க. குற்றவாளிய  பிடிக்கனும்னு நினைத்தால் விடவே மாட்டேன். அவனோடு ஓடி, உருண்டு பிரண்டு பிடிக்காமல் வரமாட்டேன். ஆண்களுக்கு நிகரா துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு அவன் பின்னாடியே ஓடுவேன். மண்ணுலையும் சேருலையும் அவர்களோடு புரளுவேன்.ஒரு குற்றவாளியப் பிடிக்கிறது கஷ்டம். அதற்கு இறங்கி நிறைய வேலை செய்யனும். நேரம் எடுக்கும். லிங்க் பிடிச்சு ஒவ்வொரு கட்டமாக முன்னேறி நூல் பிடிச்சுப்போயிதான் குற்றவாளிகளைப் பிடிப்போம். அக்யூஸ்டை அடிச்சு பிடிச்சுதான் உண்மையை வாங்கனும் என்றில்லை. அன்பா பொறுமையாப் பேசி, அவன் தேவையை நிறைவேற்றியும் உண்மைகளை அவனிடமிருந்து கொண்டுவர முடியும். இல்லீகளில் ஈடுபடுபவர்களை இரண்டுமுறை மன்னிப்பேன். மூன்றாவது முறையும் தப்பு செய்தால் தண்டிப்பேன். வறுமைதான் அவர்களை இந்த மாதிரியான இடத்தில் கொண்டு வந்து நிறுத்துகிறது. படித்தவர்களும் வேலையின்மையால் தவறு செய்கிறார்கள்.1992ல் மகாமகம் குள சம்பவத்தில் விபத்தில் சிக்கியவர்களையும், இறந்த உடல்களை யும் அப்போதே என் தோள்களில் தூக்கிப்போட்டு மேலே கொண்டு வந்து சேர்த்தேன். 2019ல் மெட்ரோ பணிகள் நடந்த நேரம் அது. கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் உடையில் மெட்ரோ கேபிள் நெருப்பு பற்றிக்கொள்ள, அவர் உடை பற்றி குபீர் என எரிந்து, உடையோடு முற்றிலும் கருகிய நிலையில் அவர் அச்சப்பட்டு கூனி குறுகி உட்கார்ந்திருந்தார். ஜீப்பில் ரவுண்ட்ஸ் சென்ற நான், அந்தப் பெண்ணை அப்படியே பெட்ஷீட்டை சுற்றி, என் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு செல்லும்போதே ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன்.கடந்த ஆண்டு கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில், வீட்டில் யாரும் இல்லாத நிலையில், வயதானவர் ஒருவர் மாரடைப்பால் இறந்துவிட்டார். மூன்று நாள் கழித்து உடல் விகாரம் அடைந்து, அழுகிய நிலையில், உப்பி பயங்கரமாய் நாற்றம் எடுக்க, அருகில் வர அனைவரும் அஞ்சுகிறார்கள். வயிற்றைப் பிரட்டி, வாந்தி வரும் நிலையில், வழியின்றி முன்னால் நின்று, துணிந்து இறங்கி உடலை அப்புறப்படுத்தி மார்ச்சுவரிக்கு அனுப்பினோம். 2015 சென்னை வெள்ளத்தில் உயிர்களை மீட்டு காப்பாற்றியது, கோவிட் தொற்று நேரத்தில் கடும் பணியாற்றி  இறந்த உடல்களை மீட்டு மரியாதையுடன் அடக்கம் செய்தது என சவால்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.பாடி ஃபிட்டிங்கின் ரகசியம்…போட்டி போடுவது எனக்கு பிடிக்கும். என் வாழ்க்கை முழுவதும் காம்பெடிட்டராகவே இருக்கவே விரும்புகிறேன். தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுவேன். 5 மணிக்கெல்லாம் கிரவுண்டில் இருப்பேன். பிறகு பயிற்சி.. பயிற்சி.. பயிற்சிதான். சரியாக 8 மணிக்கு காவல் நிலையத்தில் இருப்பேன். காவல் நிலையம்தான் எனக்கு எப்போதும் வீடு. ஒரு உடலை தூக்கி தோளில் போட்டுச் செல்வது சாதாரண விசயமில்லைதான். பெண்கள் உறுதியானவர்களாக இருக்க, பெண்களுக்கு உடற்பயிற்சி ரொம்பவே முக்கியம். நான் ஸ்போர்ட்ஸ் பிளேயர் என்பதால்தான் வலுவான பாடியுடன் இருக்கிறேன்.  கல்லூரியில் படித்த காலத்திலே நான் அத்லெட். இப்போதுவரை அது தொடர்கிறது. சிறந்த போல்வால்ட் பிளேயர். போல்வால்ட்டில் ஏசியா ரெக்கார்ட் செய்திருப்பதுடன் பின்லாந்து, தாய்லாந்து, சீனா என பல்வேறு நாடுகளில் பரிசைகளைப் வென்றிருக்கிறேன். வருகிற 5ம் தேதி முதல் போல்வால்ட் மீட் இருப்பதால் அதற்கான் பயிற்சியில் தற்போது இருக்கிறேன். தவிர ஜுடோ தெரியும். கூடவே வாலிபால் பிளேயர், பேஸ்கட்பால் பிளேயர், கபடி பிளேயர் என எல்லா ஈவென்டையும் டச் பண்ணி மாவட்ட மற்றும் மாநில அளவில் நிறைய ரிவார்ட் மெடல்ன்னு  அடிச்சுருக்கேன். கூடவே குட் சூட்டர். ஆல் இந்தியா அளவில் சிவில் சூட்டிங் செய்ததில் பிராஸோ, சில்வர், கோல்டுW மெடல்களை பெற்றுள்ளேன்.நன்றாக புல்லட் ஓட்டுவேன். புல்லட்டில் ஜிம்னாஸ்டிக் சாகசங்கள் செய்து, ஒருமுறை நெருப்பு வளையத்திற்குள் புல்லட்டில் நுழைந்து வெளியே வந்தபோது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எழுந்து நின்று ரசித்து கை தட்டினார். பெண்கள் விளையாட்டில் ஏதாவது ஒருதுறையில் கட்டாயம் இருக்க வேண்டும். அப்போதுதான் தைரியமும், தன்னம்பிக்கையும், சுய பாதுகாப்பும், நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்கிற எண்ணமும் வரும். யாருடைய கண்களையும் நேருக்கு நேராகப் பார்த்து பேசும் தைரியம் கிடைக்கும்.தங்கள் சமூக சேவை குறித்து… வறுமையில் இருப்பவர்களைப் பார்த்தால் எனக்கு வலிக்கும். எந்த பிரச்சனை என்றாலும் என்னைப் பற்றி யோசிக்காமல் ஓடிச் செல்வேன்.டி.பி.சத்திரம் காவல் நிலையம் இருப்பது ஸ்லம் பகுதி. கடை நிலையில் வேலை செய்பவர்களே பெரும்பாலும் இங்கு வசிக்கிறார்கள். குப்பையை பொறுக்கி விற்றால்தான் வருமானம். கூலி கிடைத்தால்தான் சாப்பாடு. இந்த நிலையில் அந்த மக்களை மீட்டெடுக்கும் பொறுப்பும் எனக்கும் இருக்கிறது.  கொரோனா நோய் தொற்றிலும், சென்னை பெருமழை வெள்ளத்திலும் அவர்கள் உணவின்றி, இடமின்றி தவித்தார்கள். அவர்களுக்கு அரிசி, பருப்பு, துணிமணிகளை ஏற்பாடு செய்து காவல் நிலையத்திற்கே வரவழைத்து கொடுத்தேன்.பெண்களுக்கு தையல் எந்திரங்களை வாங்கிக் கொடுத்து வாழ்வாதாரத்திற்கு வழி செய்வது. வறுமையில் இருக்கும் பெண்களுக்கு தேவையான சீர்வரிசைகளை வாங்கித்தந்து திருமணம் செய்து வைப்பது. பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள், சாலையோரங்களில் வசிப்பவர்களைக் காப்பாற்றி உணவு, உடை மற்றும் மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொடுத்து காப்பகங்களில் சேர்ப்பது. முதியோர்கள் உதவி தொகை பெற உதவுவது. மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களை காப்பகத்தில் சேர்ப்பது. குறிப்பாக மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முக்கியத்துவம் தருவதென சேவைகள் தொடர்கிறது.என் கண்ணில் யாரும் அனாதையாகச் சுற்றக் கூடாது. அவர்களை காப்பாற்றி பாதுகாப்பான இல்லங்களில் விடுவதே என் வேலை.பெற்ற விருதுகள் குறித்து…ஒவ்வொரு போலீஸ் கமிஷனரும், ஒவ்வொரு டி.ஜி.பி.யும் என்னை அழைத்து பாராட்டி ரிவார்டும் மெடலும் கொடுத்திருக்கிறார்கள். மகாமகம் குள விபத்தில் சிக்கியவர்களை மீட்டதற்காக அப்போதைய காவல்துறை உயரதிகாரிகளிடம் இருந்து எனக்கு பாராட்டுகளும், மெடலும் கிடைத்தது.முன்னாள் முதல்வர்களிடம் இருந்து பெற்ற வீரதீர விருதுகள், முன்களப் பணியாளர் விருது, கேலண்டரி மெடல், பப்ளிக் சர்வீஸ் மெடல் என பல விருதுகளைப் பெற்றுள்ளேன். கீழ்ப்பாக்கம் கல்லறையில் மயங்கிக் கிடந்தவரை கோல்டன் ஹவரில் காப்பாற்றியதற்காக தற்போதைய முதல்வர் அவர்கள் என்னை அவர்கள் வீட்டுக்கே வரவழைத்து அன்பாக உபசரித்து பாராட்டியதுடன், முதல்வர் வழங்கிய அப்ரிசேஷன் மடல் இன்னும் நிறைய செய்வதற்கான உந்து சக்தியாக இருந்தது. இந்த ஊக்குவிப்புகளே நிறைய செய்வதற்கான ஆர்வத்தை எனக்குத் தூண்டுகிறதுபெண்களுக்கு சொல்ல நினைப்பது…ஆண்கள்தான் டிபென்டென்ட். நாம இன்டிபென்டென்ட். எல்லா சவாலான வேலைகளையும் எதிர்நீச்சல் போட்டு பெண்களும் செய்ய முடியும். செய்கிறார்கள். பெண்கள் அடிமையும் இல்லை. ஆண்கள் அடிமைப்படுத்துவதும் இல்லை. அப்படியாக நினைத்துக்கொண்டு அடிமையாக வாழ்கிறோம். பெண்கள் முதலில் தைரியமாக வெளியே வாருங்கள்.செய்தி: மகேஸ்வரி நாகராஜன்படங்கள்:  ஆ. வின்சென்ட்பால்

You may also like

Leave a Comment

4 + twenty =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi