ஆட்டோ டிரைவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை திருவண்ணாமலை போக்சோ கோர்ட் தீர்ப்பு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

திருவண்ணாமலை, டிச.12: சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ கோர்ட் தீர்ப்பு அளித்தது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கோட்டை காலனி பகுதியை சேர்ந்தவர் சேகர் மகன் பிரகாஷ்(24). ஆட்டோ டிரைவர். கடந்த 19.1.2021 அன்று வெளியூரில் இருந்து வந்தவாசியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு வந்திருந்த 17 வயது சிறுமியை, பிரகாஷ் ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதுடன், இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, வந்தவாசி மகளிர் போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். பின்னர், பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

மருத்துவ பரிசோதனையில், சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது உறுதியானது. அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் பிரகாஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ டிரைவர் பிரகாஷுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். இதையடுத்து, போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பிரகாஷை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related posts

வாள்வீச்சு போட்டிக்கு மாவட்ட அணி தேர்வு

வரி செலுத்தாதவர்கள் மீது ஜப்தி நடவடிக்கை: நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை

பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம்: நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை