Wednesday, September 18, 2024
Home » ஆட்டத்தை பார்க்காமல் ஆளை மட்டுமே பார்க்கிறார்கள்!

ஆட்டத்தை பார்க்காமல் ஆளை மட்டுமே பார்க்கிறார்கள்!

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் தோழிகிராமிய கலைகளில் ஒன்றாக திகழும் கரகாட்டம் பழமையான கலையாகும். ஆதிசக்தி பரமேஸ்வரியின் அவதாரங்களான மாரியம்மன், முத்தாரம்மன், செண்பகவல்லியம்மன் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் விழா என்றால் அதில் கரகாட்டம் முக்கிய பங்கு வகிக்கும். குறிப்பாக தென் மாவட்டங்களில் கரகாட்டம் இல்லாமல் அம்மன் கோயில் விழாக்கள் இல்லை. ஆக்ரோஷமாக நின்ற அம்மனை சாந்தப்படுத்தஉருவான கலையே கரகம்.பெருங்கோயில்களில் தீர்த்தவாரி என்ற பெயரில் அம்பாளுக்கு நீராடல் நடக்கும். ஆனால் கிராம கோயில்களில் தீர்த்தக் கும்பங்களில், குடங்கள் மூலம் ஆறு, ஏரி, குளம், குட்டைகளில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து அபிஷேகம் நடக்கும். அம்மனுக்கு நடைபெறும் அபிஷேகத்தை எடுத்து வருவதை கும்பம் எடுத்து வருதல் என்று கூறுவர்.அந்த கும்பம் எடுத்து வரும்போது அதற்கு முன்னால் நையாண்டி மேளத்தை அதன் கலைஞர்கள் இசைக்க, கரகம் ஆடும் பெண்கள் பூங்கரகத்தை தலையில் சுமந்து ஆடிவருவர். கும்பத்திற்கு முன்னால் ஆடும் ஆட்டம் என்பதாலே கரகாட்டத்தை கும்பாட்டம் என்றும் கூறுவர்.அசுரர்களை வதம் செய்துவிட்டு ஆக்ரோஷத்தோடு இருந்த சக்தியை சாந்தம் கொள்ள செய்வதற்காக, பூங்கரகம் எடுத்து ஆடினாள் மாரி. அந்த ஆட்டத்தின் உச்சத்தில் ஆக்ரோஷம் தணிந்து தன்னிலை மறந்து தானும் கரகம் எடுத்து ஆடினாள் சக்தி. இதனால் தான் அம்மனுக்கு பிடித்தமான கலையாக கரகாட்டம் ஆனது.முந்தைய காலங்களில் பகலெல்லாம் பாடுபட்டு உழைத்து வரும் விவசாயிகள் மற்றும் தொழிலாளிகள் ஆண்டுக்கு ஒரு முறை பண்டிகை நாளை தவிர்த்து மற்றொரு நாளில் புத்தாடை அணிவது கோயில் விழாவில் தான். அந்த விழாவையொட்டி தான் வணங்கும் தெய்வத்தை மகிழ்ச்சி படுத்தவேண்டும். அதே நேரம் தாமும் மகிழ்வுற வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானது தான் கிராமிய கலைகள். அதில் முக்கிய இடம் பிடிப்பது கரகாட்டம்.அந்த அளவிற்கு அளப்பரிய கலையான கரகாட்டம் இன்றைய காலக்கட்டத்தில் எப்படி இருக்கிறது என்பதை அறிய கரகாட்டக் கலைஞர்களை தேடி சென்றோம். திருநெல்வேலி டவுன் மகிழ்வண்ணநாதபுரத்தில் கரகாட்டக்குழு நடத்தி வரும் சங்கர்கணேஷை சந்தித்தோம்.‘‘கிராமிய கலைகள் எல்லாம் அழிந்து கொண்டு தான் வருகிறது. காரணம் அதை ஊக்கப்படுத்த அரசு முன் வரவில்லை. பாரம்பரியமாக செய்து வருபவர்கள் கூட அதில் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை ஈடுபடுத்தவில்லை. தன்னோடு இது போகட்டும். நம் பிள்ளைங்க படித்து பட்டம் பெற்று வேலைக்கு செல்லட்டும் கை நிறைய சம்பாதிக்கட்டும் என்று நினைக்கிறார்கள்.ஆனால் உண்மை என்னவென்றால் தொடர்ந்து வேலை வந்து கொண்டிருந்தால் ஒரு கரகாட்டக் கலைஞன் பெறும் ஊதியம் ஐ.டி.நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் ஊதியத்தையும் தாண்டும்.ஆனால் ஒரு மாதம் போல் எல்லா மாதங்களிலும் தொழில் இருப்பதில்லை. அது போல் எல்லா கலைஞர்களுக்கும் வாய்ப்பு கிட்டுவதில்லை. சில கலைஞர்களுக்கு ஓய்வில்லாமல் தொடர்ந்து வேலை வருகிறது. பலருக்கு மாதத்தில் ஒரு ஆர்டர் கிடைப்பதே அரிதாக உள்ளது.இந்த கலை மீது எனக்கு ஆர்வம் வர காரணம், எங்க அம்மா கரகாட்டக்கலையில் கொடி கட்டி திகழ்ந்தவர். நெல்லை டவுன் வெள்ளையம்மா என்றால் இந்த கலையோடு தொடர்பு உள்ளவர்கள் எல்லோருக்கும் தெரியும்.அந்த அளவுக்கு பெயரோடு திகழ்ந்தார்கள். அந்த கலை ஆர்வம் எனக்கும் எழுந்தது. நான் கரகம் ஆடினேன். என் மனைவியும் கரகம் ஆடினாள். 30 வயதுக்கு பிறகு நாங்கள் இருவரும் ஆடவில்லை. இந்த கலையில் 30 வயதுக்கு மேல் பெண்களுக்கு மார்க்கெட் இல்லை’’ என்றார் சங்கர்கணேஷ்.கரகம் ஆடும் நந்தினி கூறும்போது, ‘‘எனக்கு இப்போ 17 வயதாகிறது. நான் 13 வயதில் ஆடத்தொடங்கினேன். என் பெற்றோருக்கு என்னோடு சேர்த்து 3 மகள்களும், ஒரு மகனும் உண்டு. என் அக்கா, நான், என் தங்கை மூன்று பேருமே கரகம் ஆடுகிறோம். நல்ல சீசன் டைம்ல ஒரு நாளைக்கு 4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை சம்பளம் வாங்குகிறேன்.சீசன் உள்ள மாதங்களில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் வீட்டில் இருப்பேன். மற்றபடி எப்போதுமே பிசிதான். உடன் வேலை பார்ப்பவர்களால் எந்த இடையூறும் இல்லை. ஆனால் பார்வையாளர்களில் சிலர் குரூரமாக பார்ப்பார்கள். அந்த பார்வை தான் நம்மை நாணப்படுத்தும். சிலர் ஆட்டத்தை பார்த்திடாமல் ஆளையே உத்துப்பார்த்துக் கொண்டுஇருப்பார்கள்.இரட்டை அர்த்தப் பேச்சுக்கள் பெண்களை முகம் சுழிக்க வைப்பதாக சொல்கிறீர்கள். அப்படி எல்லாம் எங்கள் கலைஞர்கள் நடந்து கொள்வதில்லை. விழா நடத்தும் இளைஞர்களே அவ்விதம் பேசுங்கள். அப்போ தான் ரசிப்பார்கள் என்று எங்களிடம் கூறுகிறார்கள். முன்பெல்லாம் கரகத்தை தலையில் வைத்துக்கொண்டே சாகசங்கள் செய்வோம்.குறிப்பாக, தாம்பூலத்தில் நின்று ஆடுவது. கரகத்தை தலையில் வைத்துக்கொண்டே குனிந்து சோடா பாட்டிலிலிருந்து சோடா குடிப்பது, கண் இமை கொண்டு ரூபாய் நோட்டை எடுப்பது போன்ற பல்வேறு சாகசங்கள் செய்து பார்வையாளர்களிடமிருந்து கை தட்டு வாங்குவோம். இப்போதெல்லாம் இரட்டை அர்த்த பேச்சுக்களும், கவர்ச்சி நடனங்களும் தான் கை தட்டை வாங்கித் தருகின்றது.இரட்டை அர்த்த பேச்சு என்பது நீங்கள் நினைக்கிற மாதிரி கொச்சையாக இருப்பதில்லை. மூன்று பெண் கரகாட்ட கலைஞர்களும், இரண்டு ஆண் கரகாட்ட கலைஞரும் களத்தில் இருப்போம். ஆண் கரகாட்ட கலைஞர், மற்றொரு ஆணுக்கு தனது மகளை மணமுடித்து கொடுப்பதாகவும்.மருமகன் வீட்டுக்கு வந்த நிலையில் அவனுடைய மாமியார் அவன் மனைவியிடம், ‘‘வீட்டுக்கு வந்திருக்கிற மருமகனுக்கு சாப்பிட எதாவது கொடு’’ என்று சொல்ல…அவரது மனைவி ‘‘மருமகனுக்கு என்ன வேண்டுமாம்’’ என்று கேட்க…‘‘மாமியார், பாலும், மெது வடையும் வேணுமாம்’’ என்று கூறுவார். இப்படித்தான் பேச்சு போய் கொண்டிருக்கும்’’ என்றவரை தொடர்ந்தார் மற்றொரு கரகாட்ட கலைஞரான முத்துசித்ரா.‘‘எங்கள் கலையை தெய்வீகமாகவே நாங்கள் கருதுகிறோம்’’ என்று பேசத் துவங்கினார் முத்துசித்ரா. ‘‘எங்களை தாங்குகிற பூமித்தாய்க்கும், நடனத்துக்கு உறுதுணையாக இருக்கிற இசைக்கருவிகளுக்கும் வணக்கம் செலுத்திவிட்டுத்தான் ஆட்டத்தை துவங்குவோம்’’ என்றார்.‘‘புக்கிங் செய்ய வரும்போதே பொண்ணு பார்க்க வருவது போலத்தான் வருகிறார்கள். பெண் நல்ல நிறமாக இருக்க வேண்டும். அழகாக இருக்க வேண்டும். ரொம்பவும் சதை போடாமல் இருக்க வேண்டும் என்றெல்லாம் பார்க்கிறார்கள்’’ என்கிறார் 18 வயது நிரம்பிய ஜெயந்தி. ‘‘எல்லா கலையும் அழகானது தான். எல்லா கலைஞர்களும் நல்லவர்கள் தான். இந்த சமூகம் தான் தங்களின்  தேவைக்காக அவர்களின் கலைத்திறனை மாற்றி அமைக்கிறார்கள்’’ என்றார் நந்தினி.சு.இளம் கலைமாறன்ஆர்.பரமகுமார்ச.சுடலை ரத்தினம்

You may also like

Leave a Comment

sixteen + 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi