ஆட்சி அமைக்கும் முன்பாகவே ஆட்டம் காணும் அடித்தளம் தலிபான்களின் பிடியில் இருந்த 3 மாவட்டங்கள் பறி போயின: கடும் தாக்குதல் நடத்தி பிடித்தது மக்கள் படை

காபூல்: ஆப்கானிஸ்தானில் கடந்த முறையைப் போல் தலிபான்கள் ஆட்சி அமைப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. தலிபான்களை எதிர்த்து போரிடும் எதிர் போராளிகள், தலிபான்களை வீழ்த்தி 3 மாவட்டங்களை கைப்பற்றி உள்ளனர். மக்களும் ஆங்காங்கே போராட்டங்களை நடத்துகின்றனர். இந்த போராட்டங்கள் தலிபான்களுக்கு ஆரம்பக் கட்ட சவாலாக மாறி இருக்கின்றன. ஆப்கானிஸ்தானில் கடந்த 1996ல் தலிபான்கள் ஆட்சியை பிடித்த போது, உள்நாட்டில் பெரிய அளவில் அவர்களுக்கு எதிர்ப்புகள் வலுக்கவில்லை. இதனால், மத சட்டப்படி பெண்களுக்கு எதிராக பல கொடூரமான கட்டுப்பாடுகளை விதித்தனர். எந்த சர்வதேச நாடுகளின் தலையீடும் இல்லாமல் கொடுங்கோல் ஆட்சி செய்தனர். ஆனால், இம்முறை நிலைமை அப்படியில்லை. தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதுமே, பழைய கொடூர கட்டுப்பாடுகளுக்கு பயந்து ஆப்கன் மக்கள் விமான சக்கரங்களில் அமர்ந்து தப்பிக்க முயன்று பலியான சம்பவங்கள் உலகையே உலுக்கி உள்ளது. இதனால், பல நாடுகள் ஆப்கனை உன்னிப்பாக கவனிக்கின்றன. அதோடு, இந்த முறை உள்நாட்டிலும் தலிபான்களை எதிர்த்து போராட மக்கள் மத்தியில் தைரியம் வந்துள்ளது. கடந்த 19ம் தேதி ஆப்கனின் சுதந்திர தினமாகும். இதை கொண்டாட தலிபான்கள் தடை விதித்த போதிலும், தலைநகர் காபூல் உள்ளிட்ட பல நகரங்களில் மக்கள் ஆப்கன் தேசிய கொடியுடன் ஊர்வலமாக வந்து கண்டன கோஷமிட்டனர். இதில் பங்கேற்ற பெரும்பாலானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தலிபான்களின் அடக்குமுறைக்கு தற்போது அப்படியே பணியும் மனநிலையில் மக்கள் இப்போது இல்லை என்பது தெளிவாகிறது. இதனால், தலிபான்கள் ஆட்சி அமைக்கும் முன்பாகவே அவர்களின் அடித்தளம் ஆட்டம் காண தொடங்கி உள்ளது. இது, தலிபான்களுக்கு ஏற்பட்டுள்ள முதல் சவாலாக கருதப்படுகிறது. அதே போல், உள்நாட்டில் தலிபான்களுக்கு எதிரான போராளி குழுக்களும் இம்முறை வலுவாக உள்ளன. கைர் முகமது அந்தாராபி  தலைமையின் கீழ் செயல்படும், ‘பொதுமக்கள் எதிர்ப்பு படை,’ பக்லான் மாகாணத்தில் தலிபான்களை எதிர்த்து போரிட்டு வருகிறது. அப்போராளிகள், போல்-இ-ஹிசர், டே சாலே, கசான் ஆகிய 3 மாவட்டங்களை பிடித்துள்ளனர். அங்கிருந்த தலிபான் தீவிரவாதிகளை போராளி படை ஓட ஓட விரட்டி உள்ளது. இப்போரில் 40 தலிபான்கள் கொல்லப்பட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், தலிபான்கள் தரப்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இதற்கிடையே, தலிபான் துணை நிறுவனர் பராதர் தலைமையில் புதிய அரசு அமைப்பதில் தலிபான்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். எனவே, இன்னும் ஓரிரு நாளில் தலிபான் ஆட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்கப்படை வரும் 31ம் தேதியுடன் ஆப்கானில் இருந்து வெளியேற உள்ளது. அதன் பிறகே தலிபான்கள் ஆட்சியை அமைப்பார்கள் என்று தெரிகிறது. அதன் பிறகு, தலிபான்களின் கை இன்னும் ஓங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தந்தையிடம் கைக்குழந்தையை திருப்பி தந்த அமெரிக்க ராணுவம்காபூல் விமான நிலைய பின்பக்க சுவர் வழியாக ஒரு தம்பதி பச்சிளம் குழந்தையை அமெரிக்க வீரர்களிடம் வேலி தாண்டி வீடியோ உலகம் முழுவதும் நேற்று முன்தினம் வைரலாக பரவியது. தங்களால் வெளியேற முடியாவிட்டாலும் குழந்தையையாவது கொண்டு செல்லுங்கள் என அப்பெற்றோர் குழந்தையை தந்ததாக கூறப்பட்டது. ஆனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை தருமாறு பெற்றோர் தந்ததாகவும், சிகிச்சை முடிந்ததும் தந்தையிடமே குழந்தை ஒப்படைக்கப்பட்டதாகவும் அமெரிக்க ராணுவம் கூறி உள்ளது. அச்சத்துடன் காத்திருக்கும் மக்கள்ஆப்கானிஸ்தானில் இருந்து ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் அமெரிக்க படை முழுமையாக வெளியேற்றப்படும் என்றும் அதிபர் பைடன் கூறி உள்ளது. இந்த தேதியை பைடன் நீட்டிக்கவில்லை. இதனால் இன்னும் 10 நாட்களில், எப்போது தங்களை அமெரிக்க விமானங்கள் அழைத்துச் செல்லும், ஒருவேளை கெடு முடிந்து கைவிட்டு விடுவார்களோ என்ற அச்சத்தில் ஆப்கன் மக்கள் விமான நிலையத்தில் காத்திருக்கிருக்கின்றனர். 640 பேர் இல்லீங்க…823 பேர்காபூலில் இருந்து அகதிகளாக ஆப்கன் மக்களை அமெரிக்காவின் சி-17 சரக்கு விமானம் அழைத்து வந்த புகைப்படங்கள் சமீபத்தில் வைரலாகின. இந்த ஒரே விமானத்தில் 640 பேர் கோழி குஞ்சுகளைப் போல அடைத்துக் கொண்டு அழைத்து வரப்பட்டதாக கூறப்பட்டது. இதில், 183 குழந்தைகள் சேர்க்கப்படவில்லை என அமெரிக்க விமானப்படை தற்போது கூறி உள்ளது. அதாவது, அந்த ஒரு விமானத்தில் அழைத்து வரப்பட்டவர்கள் 640 அல்ல… 823 பேராம். சி-17 விமானத்தில் ஒரே நேரத்தில் 823 பேரை மீட்டு அழைத்து வந்தது இதுவே முதல் முறை என அமெரிக்க விமானப்படை கூறி உள்ளது.85 இந்தியர்கள் மீட்பு 400 பேர் சிக்கி தவிப்புகாபூலில் இருந்து 85 இந்தியர்கள் நேற்று மீட்கப்பட்டனர். இவர்கள் இந்திய விமானப்படையின் சி-17 சரக்கு விமானம் மூலம் தஜிகிஸ்தான் வழியாக நேற்று டெல்லி ஹிண்டன் விமானப்படை தளத்திற்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டனர். தலிபான்கள் ஆட்சியை பிடித்த பிறகு, அமெரிக்க ராணுவத்தின் உதவியுடன் இந்தியாவுக்கு சுமார் 280 பேர் பத்திரமாக அழைத்து வரப்பட்டுள்ளனர். இன்னும் 400 இந்தியர்கள் காபூலில் சிக்கி இருப்பதாககூறப்படுகிறது.150 இந்தியர்கள் கடத்தப்பட்டனரா?காபூலில் 150க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி பீதியை ஏற்படுத்தின. இதனை தலிபான்கள் மறுத்துள்ளனர். இது குறித்து இந்திய அரசு தரப்பில் கூறப்பட்ட தகவலில், காபூல் விமான நிலையம் நோக்கி வந்த 150க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வந்த போது தலிபான் தீவிரவாதிகள் அவர்களை தடுத்து நிறுத்தி, அடையாளம் தெரியாத இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, அவர்களின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை பரிசோதித்த தீவிரவாதிகள்  பின்னர் விடுவித்துள்ளனர். இந்தியர்களை தலிபான்கள் தாக்கினார்களா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. விடுவிக்கப்பட்ட இந்தியர்கள் காபூல் விமான நிலையத்திற்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.அசாமில்14 பேர் கைதுதலிபான்களுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர். அதுபோல், அசாமில் தலிபான்களுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு தெரிவித்ததாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சட்ட விரோத நடவடிக்கைகள், ஐடி மற்றும் கிரிமினல் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன….

Related posts

ஜப்பானில் முதியோர்கள் எண்ணிக்கை புதிய உச்சம்

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

ரஷ்ய ஆயுத கிடங்கு மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்: ஏவுகணைகள், வெடிகுண்டுகள் அழிப்பு