ஆடுகளத்தை அதகளப்படுத்தலாமா? களமிறங்குது சேவலு…கண்டு ரசிக்க ஆவலு…!

உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பால் உற்சாகம்உத்தமபாளையத்தில் முழு வீச்சில் பயிற்சிஉத்தமபாளையம் : உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பை தொடர்ந்து சேவல் சண்டை நடத்த வளர்ப்போர் ஆர்வமடைந்துள்ளனர். இதையடுத்து உத்தமபாளையத்தில் சேவல்களுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.ஜல்லிக்கட்டை போல வே தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு பட்டியலில் கிடா முட்டு, சேவல்கட்டு எனப்படும் சேவல் சண்டைக்கும் முக்கிய இடமுண்டு. ஜல்லிக்கட்டுக்கு தரப்படும் முக்கியத்துவம் இதற்கு காலப்போக்கில் தரப்படவில்லை என்றாலும், கிராமங்களில் தற்போது வரை சேவல் சண்டையை பார்த்து ரசிப்போர் அதிகமுள்ளனர்.  பசுமை கொஞ்சி விளையாடும் தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியில் காலங்காலமாக சேவல் சண்டை நடந்து வருகிறது. இம்முறை இதற்கான அனுமதி கிடைப்பதில் சிக்கல் எழவே, இந்த ஊரை சேர்ந்த தங்கமுத்து, அனுமதி வழங்கக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘சேவல்களின் கால்களில் கத்தி மற்றும் பிளேடு உள்ளிட்ட ஆயுதங்களை கட்டக் கூடாது. இரு சேவல்களும் போட்டியின் முடிவில் உயிருடன் இருக்க வேண்டும்’ என்ற நிபந்தனையோடு, வரும் ஜன.17ம் தேதி நடத்திக் கொள்ள அனுமதியளித்து உத்தரவிட்டார். இதையடுத்து உத்தமபாளையம் கிராமத்தில் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.குறுங்கள போர் வீரனாய்…பொதுவாக, சேவல் சண்டை போட்டிகளில் குறைந்தது ஒரு மணி நேரமாவது சேவல்கள் நின்று மோத வேண்டும். இதற்காகவே சிறப்பு உணவுகள் வழங்குவதோடு, ஜல்லிக்கட்டு காளைகளை போலவே நீச்சல், பாத திடம், அலகு குத்துதல் மற்றும் ஓட்டப்பயிற்சிகளை வழங்குகின்றனர். மேலும், தடுப்பூசி, வைட்டமின் மாத்திரைகள், சளி பிடிக்காமல் இருக்க டானிக் என சேவல்களை ராஜமரியாதையாக வளர்த்து வருகின்றனர். களத்தில் நின்று விளையாடும் சேவல்களை ரூ.1 லட்சத்துக்கும் மேல் வரை விலை கொடுத்து வாங்கி செல்பவர்கள் உள்ளனர். இதற்காக ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தேனி மாவட்டத்திற்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.முதல்வருக்கு நன்றி…இதுகுறித்து சேவல் வளர்ப்பாளர் முகமது ராஜா கூறும்போது, ‘‘தமிழகத்தில் மட்டும் 150 வகை சேவல் இனங்கள் இருந்துள்ளன. இன்று 18 வகைகள் மட்டுமே உள்ளன. எனவே சேவல் சண்டையையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்ல நாங்கள் முடிவெடுத்து 25 வருடமாகவே சேவலை வளர்க்கிறோம். தேனி மாவட்டத்தில் மட்டும் 2 ஆயிரம் பேர் வரை உள்ளோம். தமிழகம் முழுவதும் சேவல் வளர்ப்பவர்கள் என 35 ஆயிரம் பேர் வரை இருக்கிறோம். தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு, சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. எங்களது சேவல் சண்டையை அரசே ஊக்குவித்து, ஜல்லிக்கட்டு நடத்துவது போல ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்த வேண்டும்’’ என்றார்.பாரம்பரியம் காப்போம்…ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்த தங்கமுத்து கூறும்போது, ‘‘நமது தமிழர் வாழ்வியல் முறையில் சேவல் வளர்ப்பும், சேவல் சண்டையும் முக்கியமானது. உயர்நீதிமன்ற கிளை அனுமதி வழங்கியதால் மகிழ்ச்சியில் உள்ளோம். சேவல் சண்டையை அடுத்தடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல சாதி, மதம் பார்க்காமல் நாங்கள் இணைந்துள்ளோம்.  சூதாட்டத்திற்கும் இடமில்லை.   கத்தி கட்டி சண்டையிட விடமாட்டோம். இப்போதுவரை 500க்கும் மேற்பட்ட சேவல்கள் சண்டைக்கு தயாராகி வருகின்றன. தமிழர் திருநாளில் சேவல் சண்டையை திருவிழாவாக நடத்துவதுடன், தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரத்தை காப்பதுடன், நமது முன்னோர்கள் வளர்த்த சேவல் இனங்கள் அழியாது காக்க இது ஒரு முயற்சியாக இருக்கும்’’ என்றார்.பறந்து பறந்து அடிப்பேன்களத்தில் நேருக்கு நேர் மோதுதல், அந்தரத்தில் பறந்து தாக்குதல், சைடு வாங்கி கொத்துதல் என சேவல்களின் சண்டை ரகம் பார்ப்பவர்களுக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தும். ஒரே நிமிடத்தில் அடிச்சு தூக்கும் சேவல்களும் உண்டு. ஒரு மணி நேரம் தாண்டியும் மோதும் ரகங்களும் உண்டு. குறிப்பாக, தேனி மாவட்ட மண்ணில் அதிகம் வளர்க்கப்படும் பொட்டமாரி வகை சேவலுக்குத்தான் ஓவர் மவுசாம்… எதிர் சேவலை திணற வைப்பதில் இவைகள் கில்லாடி என்கின்றனர். நரம்பு, கழுத்து, தலைகளில் கொத்தி வீழ்த்தும் இந்தியன் தாத்தா வகை வர்மக்கலை சேவல்கள் இருக்கிறதாம்.ஓங்கி அடிச்சால் ஒன்றரை டென் வெயிட்போட்டியில் பங்கேற்க வரும் சேவல்களை மைதானத்தில் ஒரு வட்டத்தில் உள்ளே விடுவார்கள். நடுவர்கள் கண்காணிப்பார்கள். எதிர்சேவலை ஒரே கொத்தில் கெத்தாக வீழ்த்தும் சேவல்களும் உண்டு. மாறாக கால் மணி நேரம் விளையாட்டு, கால் மணிநேர ஓய்வு என 1 மணி நேரம், ஒன்றரை மணி நேரம் நின்று களமாடும் சேவல்களும் உண்டு. ஆட்ட நேரத்திலேயே எதிர் சேவலை நிலைகுலைய வைக்கும், நீண்ட நேரம் களமாடினாலும் சிறப்பான மோதலை வெளிப்படுத்தி அதிக புள்ளிகள் பெறும் சேவல் வெற்றியாளராக அறிவிக்கப்படும்….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்