ஆடி கிருத்திகைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திருத்தணி வரும் நிலையில் ₹54 கோடியில் அமைக்கப்பட்ட புறவழிச்சாலை நாளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது: திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

திருத்தணி, ஜூலை 24 : ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு திருத்தணி புறவழிச்சாலை நாளை திறக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பயன்பாட்டிற்கு வருகிறது. திருத்தணியில் ஆடிக்கிருத்திகை விழாவில் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க பணிகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள புறவழிச்சாலையை திறந்து வைக்க பொதுமக்கள் கோரிக்கை தொடர்பாக தினகரன் செய்தி எதிரொலியாக திருத்தணியில் புறவழிச்சாலை திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நெடுஞ்சாலைத்துறையினர் செய்து வருகின்றனர்..

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் திருத்தணி புறவழிச்சாலை திட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் முதலமைச்சரின் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ₹52 கோடி மதிப்பீட்டில் சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து அரக்கோணம் சாலை சந்திப்பு (வள்ளியம்மாபுரம்) வரை 3.2 கிமீ தூரம் சாலை அமைக்கும் பணிகள் கடந்த 2018ல் தொடங்கப்பட்டு சுமார் 6 ஆண்டுகள் பணி நடைபெற்று வந்தது. புறவழிச்சாலைக்கு இடையில் நடந்து வந்த ரயில்வே உயர்மட்ட மேம்பாலம் மற்றும் நந்தி ஆற்றின் இடையில் பாலம் அமைக்கும் பணிகளும் நிறைவும் பெற்றன.

இந்நிலையில் திருத்தணி முருகன் கோயிலில் வரும் 29ம் தேதி ஆடிக்கிருத்திகை விழா நடைபெற உள்ள நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் திருத்தணிக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விழா தொடங்கும் முன்பாக பணிகள் முடிவுற்று தயார் நிலையில் உள்ள திருத்தணி புறவழிச்சாலையில் போக்குவரத்து சேவை தொடங்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான செய்தி படத்துடன் தினகரன் நாளிதழில் கடந்த 18ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த செய்தி எதிரொலியாக நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் எஸ்.பழனிவேல் 20ம் தேதி திருத்தணி புறவழிச் சாலையில் இறுதிக்கட்ட ஆய்வு மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து, தமிழக அரசின் உத்தரவின்பேரில் நாளை புறவழிச்சாலைக்கு திறப்பு விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். புறவழிச்சாலையில் அதிகளவில் வாகனங்கள் சென்றுவரும் என்பதால், சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை மற்றும் அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் உள்ள புறவழிச்சாலை இணைப்பு பகுதியில் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். தற்காலிக வேகத்தடை அமைக்கவும், புறவழிச்சாலைக்கு இருபுறமும் மின் விளக்குகள் அமைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இருபுறமும் மரக்கன்றுகள்
நேற்று புறவழிச்சாலையில் எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சாலையோரத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்த அவர், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் புறவழிச்சாலையில் ஒளிரும் விளக்குகள், மின் விளக்குகள், சிக்னல் ஆகியவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த ஆய்வின்போது திருத்தணி கோட்ட உதவிப் பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர் ஞான அருள்ராஜ், திருத்தணி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கிருஷ்ணன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் அகூர் மாணிக்கம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related posts

துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கம்

நெல்லில் நவீன ரக தொழில் நுட்ப பயிற்சி