ஆடிப்பூரம், வளர் பிறை பஞ்சமியை முன்னிட்டு அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை

ராமநாதபுரம், ஜூலை 23: ஆடி பூரம் மற்றும் வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கை சுயம்பு மகா வராஹிஅம்மன் மற்றும் மாரியூர் பவளநிறவள்ளியம்மன் உடனுரை பூவேந்தியநாதர் கோயிலில் சுமங்கலி பூஜை, வளைகாப்பு நடந்தது. ஆடி மாத வளர்பிறை பஞ்சமி திதி மற்றும் ஆடி பூரம் உற்சவத்தை முன்னிட்டு சுயம்பு மஹா வராஹி அம்மனுக்கு மஞ்சள், பால், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல வகை அபிஷேகம் நடந்தது. 1,008 வளையல்களால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானம் நிர்வாகம் சார்பில் உலக நன்மைக்காக சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அம்மன் காப்பு, வேத மந்திரங்கள் ஓதப்பட்டது. பொதுமக்கள் விராலி மஞ்சள் அறைத்து, அம்மனுக்கு காப்பு செலுத்தி வழிபட்டனர். இதனை போன்று கடலாடி அருகே உள்ள மாரியூர் பவளநிறவள்ளியம்மன் உடனுரை பூவேந்தியநாதர் கோயிலில் அம்பாளுக்கு சுமங்கலி பூஜையும், வளை காப்பு வைபமும் நடந்தது. காலையில் கோ பூஜையும் மூலவர் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பால் அபிஷேகம் உள்ளிட்ட 21 அபிஷேகங்கள் நடந்தது.

தொடர்ந்து பெண்கள் வளையல், பட்டு உள்ளிட்ட சீமந்த பொருட்களை மேள வாத்தியங்களுடன் ஊர்வலமாக எடுத்து வந்து, அம்பாளுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டது. பிறகு எலுமிச்சை, புளியோதரை, தயிர், தக்காளி உள்ளிட்ட 11 வகை சாதங்கள் படையலாக படைக்கப்பட்டு, வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பெண்கள் புது மாங்கல்யம் மற்றும் வளையல்கள் அணிந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை