ஆடல்வல்லானின் அரிய நடனம்… அருகில் ரசிக்கும் அன்னை!

சிற்பமும் சிறப்பும்ஆடல்வல்லானின் அரிய நடனம்… அருகில் ரசிக்கும் அன்னை!ஆலயம்:கைலாசநாதர் கோயில், காஞ்சிபுரம்காலம்: இராஜசிம்ம வர்ம பல்லவ மன்னனால் கி.பி.8-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.சிறப்பு: கருவறையைச்சுற்றி வரும் பாதையான ‘சாந்தார நாழிகை’ முதன் முதலாக  இடம் பெற்றது இக்கோயிலில்தான்.தமிழ் நாட்டின் கோயில் கட்டடக்கலை வரலாற்றில், கால மாற்றத்தினால் அழியா வண்ணம் நீடித்திருக்கக் கூடிய கட்டடங்களாகக் கற்கோயில்களை அமைத்து, கோயில் கட்டடக்கலை வளர்ச்சிக்கு முன்னோட்டப்பாதை அமைத்தவர்கள் பல்லவர்கள்.தொடக்கத்தில் குடைவரைக்கோயில்களையும், அதன் பின் ஒற்றைக் கற்றளிகளையும் அமைத்த பல்லவ அரசர்கள்,  தொடர்ந்து கட்டுமானக் கோயில்களை அமைப்பதிலும் முன்னோடிகளாக திகழ்ந்தார்கள்.தமிழகத்தில் கோயில் கட்டுமானத்தொழில்நுட்பம் மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலில் இராஜசிம்மனால் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மேம்பட்ட கலையம்சங்கள் கொண்டு கட்டப்பட்டது தான் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்காஞ்சி கைலாசநாதர் கோயில்பல்லவர்களுடைய கட்டடக்கோயில்களிலேயே மிகவும் உன்னத கட்டமைப்பும், சிற்ப எழிலும் வாய்ந்தது கைலாசநாதர் ஆலயம். அவர்களின் சின்னமான சிங்க உருவங்களை ஆலயம் எங்கும் பல வடிவங்களில், பல உணர்வுகள் காட்டி அமைத்துள்ளனர்.சிவபெருமானுக்காக எடுப்பிக்கப்பட்ட இக்கோயில்,  மூன்றுதளங்களைக் கொண்டு, கோயில் கட்டடக்கலையின் சிறப்புகள் அனைத்தும் ஒருங்கே கொண்டு சிற்பக் கருவூலமாய் விளங்குகிறது.எதிரி மன்னன் வியந்து பாராட்டிய கோயில் சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்கிரமாதித்தன், கி.பி 740ல் காஞ்சியின் மீது படையெடுத்த போது, பல்லவர்கள் தம் தலைநகரான காஞ்சியை விட்டு வெளியேறி விட்டார்கள். காஞ்சிக்குள் நுழைந்து வெற்றி பெற்று கைலாசநாதர் ஆலயம் சென்ற விக்கிரமாதித்தனையும் அவன் மனைவி லோகமாதேவியையும் கைலாசநாதர் கோயிலின் பேரழகும் கம்பீரமும் கட்டிப்போட்டு விட்டது.இக்கோயிலின் அழகு கண்டு பிரமித்த விக்கிரமாதித்தன், ‘இது ஒரு பொக்கிஷம், இதை பாதுகாப்பது நமது கடமை’ என்று கல்லில் எழுதிவைத்துச்சென்றான்.ராஜசிம்மனின் கலை ஆர்வத்துக்கு சிறிதும் குறையாத கலா ரசிகனான சாளுக்கிய விக்கிரமாதித்தன், நாடு திரும்பும் போது பல்லவ சிற்பிகளையும் தன்னோடு அழைத்துப்போய், தனது தலைநகரான பட்டடக்கல்லில் (கர்நாடக மாநிலம்), காஞ்சி வெற்றியைக்கொண்டாடும் வண்ணம், அவனது மனைவி லோகமாதேவியின் இஷ்ட தெய்வமான விருபாக்‌ஷருக்கு, கைலாசநாதர் ஆலயம் போன்றே ஒரு பேராலயம் எழுப்பினான். விருபாக்‌ஷர் கோயில் இன்றும் அதே பேரழகுடன் பட்டடக்கல்லில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.பல ‘முதல்’ சிறப்புக்கள்கருவறையைச் சுற்றி வரும் பாதையான “சாந்தார நாழிகை”,  நுழைவு கோபுரம் என கோயில் கட்டடக்கலையின் பல ‘முதல்’ சிறப்புகளை தன்னகத்தே கொண்டது கைலாசநாதர் கோயில்.கல்வெட்டுக்களில் பெரிய திருக்கற்றளி, திருக்கற்றளி, ராஜசிம்மேஸ்வரம்(மன்னர் ராஜசிம்மன் பெயரால்) என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த சிவாலயம் கண்ட  ராஜராஜசோழன், ‘கச்சிப்பேட்டுப் பெரியதளி’ என போற்றியது சிறப்பாகும்.இத்திருக்கோயிலின் கட்டுமானத்தைக்கண்டு வியந்த ராஜராஜனின் சிந்தையில் எழுந்த பிரம்மாண்டம் தான் ‘தஞ்சைப்பெரிய கோயில்’.தஞ்சைப்பெரிய கோயில் கட்டப்படும் வரை கைலாசநாதர் கோயில்தான் தமிழகத்தில் பெரியகோவிலாக விளங்கியது.பூசலார் நாயனார் வரலாற்றில் இக்கோயில் இடம் பெற்றிருப்பது மற்றுமொரு சிறப்பு.கருவறைக் கோட்டங்களிலும், திருச்சுற்றில் 56 சிற்றாலயங்களிலும், தட்சிணாமூர்த்தி, கங்காதரர், கங்காளர், காலாந்தகமூர்த்தி, சோமஸ்கந்தர், திரிபுராந்தகர், கஜசம்ஹார மூர்த்தி, பிட்சாடனர்,  ஆடல்வல்லான், துர்க்கை, ஜேஷ்டாதேவி, முருகன், விஷ்ணு, நரசிம்மர், 64 சிவ வடிவங்கள் என ஏராளமான சிற்பங்கள் நிறைந்துள்ளன.ஸ்வஸ்திக வடிவ சிவ நடனம்கோயிலின் வெளிப்புற தேவ கோட்டங் களில் உள்ள குறிப்பிடத்தக்கது இந்த ‘ஸ்வஸ்திக வடிவ சிவ நடன’ சிற்பம்.தீமைகளை வென்ற பின் தன் மனதை அடக்கி வெற்றி கொள்ளும் சிவ தாண்டவம் இது.வலது காலில் மண்டியிட்டு, இடது காலை பின்னே மடக்கியும், பின் கரங்களில் உடுக்கை, ஆயுதங்கள் தாங்கியும், நடன முத்திரைகள் காட்டியும், இடது முன் கரத்தை தலையின் மீது வைத்தும், வலது முன் கரத்தால் மடக்கிய இடது பின்னங்கால் பாதம் தொட்டும் காட்சியளிக்கும் ஆடல் வல்லானின் இந்த அழகிய அரிய தோற்றம் கண்டு நாம் மட்டும் மனம் லயித்துப் போகவில்லை… அருகில் வலக்கை ஊன்றி, வலது கால் மடக்கி ஒயிலாய் நின்று, எழில் தோற்றத்துடன் ஆடல்வல்லானைப் பார்த்து ரசிக்கும் அன்னையும் தான்!.மது ஜெகதீஷ்…

Related posts

பக்த விஜயம்

ராஜராஜன் முன் கிளியாய் தோன்றிய காளி

மருந்தும் விருந்துமாகும் மகத்தான கோயில் பிரசாதங்கள்