ஆசிரியை பாடம் நடத்தும்போது பள்ளி மாணவன் குத்தாட்டம்: சமூக வலைதளங்களில் வைரல்

வேலூர்: தமிழகத்தில் சமீப காலமாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் சிலர் வகுப்பறைகளில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவிடுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த வேப்பேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர் ஒருவர் வகுப்பறையில் சக மாணவர்களை துடைப்பத்தால் தாக்கும் வீடியோ பரவியது. இதேபோன்று, வகுப்பறைக்குள் மாணவர்கள் மற்றும் மாணவிகள் ஜோடியாக அமர்ந்து குறும்புத்தனத்தில் ஈடுபட்ட வீடியோவும் வெளியானது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரிக்கார்ட் நோட்டை சமர்பிக்கும்படி கூறியுள்ளார். அப்போது, ஒரு மாணவன் வகுப்பறையில் படுத்திருப்பதை கண்டார். அவரிடம் சென்று ரிக்கார்ட் நோட்டு குறித்து கேட்டபோது ஆத்திரமடைந்த மாணவன் ஆசிரியரை தகாத வார்த்தைகளால் திட்டி கையை ஓங்கி அடிக்க முயன்றார். அவருக்கு ஆதரவாக இரு மாணவர்களும் ஆசிரியரை மிரட்டி அவதூறாக பேசினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து உயரதிகாரிகள் விசாரணை நடத்தி 3 மாணவர்களை சஸ்பெண்ட் செய்தனர். இதற்கிடையில், அரசு பள்ளியில் ஆசிரியை ஒருவர் வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது மாணவன் ஒருவன் பாடத்தை கவனிக்காமல் நடனமாடி கொண்டிருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 38 நொடிகள் கொண்ட இந்த வீடியோவில் ஆசிரியை மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருக்கிறார். ஒரு சில மாணவர்கள் மட்டுமே பாடத்தை கவனிக்கின்றனர். ஆனால் வகுப்பறையில் கடைசி பென்ச்சில் உள்ள மாணவன் ஒருவன் குத்தாட்டம் போடுவதும், தடைசெய்யப்பட்ட குட்கா பொருளை மற்றொரு மாணவன் வீசி அடிப்பதும், சிலர் செல்போன் வைத்து வேடிக்கை பார்ப்பதும் போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ பதிவான அரசு பள்ளி எந்த மாவட்டத்தை சேர்ந்தது? என  தெரியவில்லை.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘இன்றைய காலக்கட்டத்தில் உள்ள தகவல் தொழில்நுட்பங்களை தவறாக மாணவர்கள் சிலர் பயன்படுத்துகின்றனர்’ என்றனர்.   இதனிடையே இந்த வீடியோவில் பதிவான காட்சிகள் எந்த பள்ளியில் நடந்த சம்பவம்? என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்….

Related posts

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்