ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவதற்கு ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

 

ஊட்டி, ஜன.1: புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்துள்ளதால் சுற்றுலா தலங்கள் களை கட்டியுள்ளன. குளு குளு சுற்றுலா நகரமான ஊட்டிக்கு வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் அதிகளவு சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகின்றனர். பள்ளிகளில் அரையாண்டு தேர்வு முடிவடைந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் விடுமுறையை கொண்டாடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்துள்ளனர்.

குறிப்பாக கடந்த ஒரு வார காலமாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. ஊட்டி மட்டுமின்றி நகருக்கு வெளியே உள்ள பைக்காரா படகு இல்லம், நீர் வீழ்ச்சி, சூட்டிங் மட்டம் போன்ற பகுதிகளும் சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களை கட்டியுள்ளது. இந்நிலையில் நாளை புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில் அதனை கொண்டாடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு படையெடுத்துள்ளனர்.

குறிப்பாக கேரள, கர்நாடகாவில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளது. புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஊட்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் ஹோட்டல்கள் வண்ண வண்ண விளக்குகளால் ஜொலிக்கின்றன. சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக ஊட்டி நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் லாட்ஜுகள் காட்டேஜ்களில் உள்ள பெரும்பாலான அறைகள் நிரம்பி உள்ளன.

அதிக அளவிலான வாகனங்கள் நகருக்குள் வருவதால் முக்கிய சாலைகளான கமர்சியல் சாலை, எட்டின்ஸ் சாலை, கூடலூர் சாலைகளில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இவற்றை காவல்துறையினர் உடனுக்குடன் சரி செய்தனர். இதனிடையே இன்றுடன் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்க உள்ளதால், இன்று மதியத்திற்கு பின் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைய வாய்ப்புள்ளது.

Related posts

கூடலூரில் மனைவி நல வேட்பு நாள் விழா

குருவாயூர் கிருஷ்ணர் கோயில் மேல் சாந்தியாக ஜித் நம்பூதிரி தேர்வு

திருச்சூர் அருகே கயிறு இழுக்கும் போட்டியில் மோதல்; வாலிபருக்கு கத்திக்குத்து