ஆக்கிரமிப்புகள் வேகமாக அகற்றப்பட்டு வரும் நிலையில் குப்பை கிடங்கான சதுப்பேரி உபரிநீர் வெளியேறும் கால்வாய்-அதிகாரிகள் நடவடிக்கைக்கு பொதுமக்கள் கோரிக்கை

வேலூர் : வேலூர் சதுப்பேரி உபரிநீர் வெளியேறும் கால்வாயில் குப்பை கூளங்கள் கொட்டி எரிக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வேலூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வேலூர் நகரின் பிரதான நிலத்தடி நீராதாரமாக விளங்குவது சதுப்பேரி. பாலாற்றில் இருந்து வரும் நீரும், பருவமழையின் போது கிடைக்கும் நீருமே இதற்கான நீராதாரம். 621 ஹெக்டேர் பரப்பளவுள்ள சதுப்பேரியால் 10 கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு இறுதியில் தொடர்ந்து பெய்த பருவமழையால் சதுப்பேரி முழுமையாக நிரம்பி பல நாட்களுக்கு தனது உபரி நீரை கால்வாய் வழியாக வெளியேற்றியது.இந்த  கால்வாயில் வெளியேறிய நீரால் அக்கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. ஏற்கனவே ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி தனது நீர்பிடிப்பு பகுதியை பல ஏக்கர்களுக்கு இழந்திருந்த சதுப்பேரியின் நீர்வரத்து கால்வாய்களும், உபரிநீரை வெளியேற்றும் கால்வாய்களும் ஆக்கிரமிப்பில் சிக்கி சின்னாபின்னமாகி கிடந்தன.இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் அளவெடுக்கப்பட்டு அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டு வருகின்றன. அதன்படி வேலூர் சதுப்பேரியின் உபரிநீர் வெளியேறும் கால்வாய் ஆக்கிரமிப்புகளும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அகற்றப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் சதுப்பேரியின் உபரிநீர் வெளியேறும் கலங்கு பகுதியின் அருகில் கால்வாய் கரையை ஒட்டி தேவிநகர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை மையம் அமைந்துள்ளது. இம்மையத்தில் இருந்தும், உள்ளாட்சி அமைப்புகளில் சேகரிக்கப்படும் குப்பைகளும் இக்கால்வாயில் கொட்டப்பட்டு எரிக்கப்படுகின்றன. இதனால் இக்கால்வாயில் 24 மணி நேரமும் திடக்கழிவுகள் எரிந்து கொண்டுள்ளன. இதில் இருந்து எழும் துர்நாற்றம் கலந்த புகையால் அப்பகுதி மக்கள் வேதனைக்கு ஆளாகின்றனர்.எனவே, ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வரும் நிலையில் குப்பைகளை சதுப்பேரியிலும், அதன் நீர்வரத்து மற்றும் உபரிநீர் வெளியேறும் கால்வாய்களில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு தள்ளுபடி!!

பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!!

அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் முத்தமிழ் முருகன் மாநாடு ஆலோசனை கூட்டம்