ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அமைக்க கோரி மறியல்: போடி அருகே பரபரப்பு

 

போடி, அக். 7: போடி அருகே, ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அமைக்க வலியுறுத்தி கிராமமக்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போடி அருகே உள்ள அணைக்கரைப்பட்டி கிராம ஊராட்சிக்குட்பட்டது சன்னாசிபுரம் செட் கிராமம். இங்கு விவசாயிகள், கூலித்தொழிலாளிகள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். ஆக்கிரமிப்பு காரணமாக, சன்னாசிபுரம் செட்-மயான சாலை மிகவும் குறுகலாக உள்ளதுடன், குன்றும், குழியுமாக உள்ளது. இந்த சாலை வழியாக விவசாய விளைபொருட்களை கொண்டு செல்வதில் விவசாயிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.

மேலும் வாகன போக்குவரத்துக்கு சிரமமாக உள்ளது. இதனால் இப்பகுதிமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தார்ச்சாலை அமைக்க வேண்டும் என அணைக்கரைப்பட்டி கிராம ஊராட்சியில் கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் நேற்று காலை இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் தார்ச்சாலை அமைக்கும் பணி துவங்கியது. அங்கு வந்த கிராமமக்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்னரே தார்ச்சாலை அமைக்க வேண்டும் என கூறி காலை 8 மணியளவில் சன்னாசிபுரம் செட்-மயான சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போடி தாலுகா இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் காலை 11.30 மணியளவில் சர்வேயர் வேல்முருகன் தலைமையில் சன்னாசிபுரம் செட்-மயான சாலையை அளவீடு செய்யும் பணி துவங்கியது. இதன்பின்னர் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளதால் இப்பகுதிமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை