அவுட் சோர்சிங் முறையால் வட இந்திய ஒப்பந்த தொழிலாளர்கள் நியமனம் என்எல்சியில் புறக்கணிக்கப்படும் தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பு

*அதிர்ச்சியில் பட்டதாரிகள்*மீண்டும் போராட்ட களமாகும் நெய்வேலிகடலூர் மாவட்டம் நெய்வேலியில் நவரத்னா அந்தஸ்தை பெற்றுள்ள என்எல்சி இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி நிறுவனம்  தமிழர்களுக்கு வேலை வாய்ப்பையும் தமிழகத்தின் மின் தேவையையும் பூர்த்தி செய்யும் நோக்குடன் காமராஜரின் முயற்சியால் உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த நிறுவனத்தில் கடந்த சில வருடங்களாக வட இந்தியர்களுக்கு பணியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் தமிழர்களாக இருந்த நிலையில் தற்போது அவுட் சோர்சிங் முறையால் வட இந்திய ஒப்பந்த தொழிலாளர்கள் அதிகளவில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பட்டதாரி பொறியாளர்களாக மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும், அது தவிர மனிதவளம், நிதி உள்ளிட்ட அதிகாரிகளுக்கான வேலை வாய்ப்பு என 259 பணியிடங்களுக்கான விண்ணப்பம் வரவேற்பது குறித்து கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 13ம் தேதியன்று நிறுவன இணைய தளத்திலும், முன்னணி நாளிதழ்களிலும் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. இதற்காக விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி கோவிட்-19 பரவல் காரணமாக 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் எழுத்துத்தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது. இறுதியாக 2020ம் ஆண்டு நவம்பர் 17 முதல் 25ம் தேதி வரை எழுத்துத்தேர்வு நாட்டின் முக்கிய நகரங்களில் நடைபெற்றது. இதையடுத்து தனியார் நிறுவனம் நடத்திய எழுத்துத்தேர்வில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர். இந்த தேர்வின் முடிவு கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி 259 காலியிடங்களுக்காக நேர்முகத் தேர்வுக்காக 1582 பேர் அடங்கிய பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை சார்ந்தவர்கள் 8 பேர் மட்டும் தேர்வாகி இருப்பதாக கூறப்படுகிறது. பெரும்பாலான வடமாநிலத்தை சார்ந்தவர்கள் பெயர்கள் தான் அதிகளவில் உள்ளது. இதனால் வேலை வாய்ப்பு கிடைக்கும் என தமிழகத்திலிருந்து விண்ணப்பம் போட்டு இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சமீப காலமாகவே என்எல்சி இந்தியா நிறுவனத்தில் வட இந்தியர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியில் சேர்த்து கொள்வதாக குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வரும் நிலையில் அதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த அழைப்பு உள்ளது. ரயில்வே, வருமான வரி, தபால் துறை, உளவுத்துறை உள்ளிட்ட துறைகளில் நடந்த தேர்வில் தமிழகத்தை சார்ந்த பலர் புறக்கணிக்கப்பட்டுள்ளதை போன்று, என்எல்சி இந்தியா நிறுவனத்திலும் நடந்திருப்பதை கண்டு தமிழக இளைஞர்கள் பலர் கொதிப்படைந்துள்ளனர். இதனை கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்து கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். என்எல்சி நிறுவனம் இந்த தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்தவில்லை எனில் பெரும் போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, என்எல்சியோடு தொடர்பு உடைய அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்கள், இறந்தோர் வாரிசு, வீடு நிலம் கொடுத்தோர் என பலர் வேலை வாய்ப்பு இல்லாமல் அல்லல்பட்டு வரும் நிலையில், தனியார்மயம் என்ற கொள்கையின் அடிப்படையில் அனைத்து பணிகளும் அவுட் சோர்சிங் விடப்பட்டு, அதிலும் வடமாநிலத்தவர்களே பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். தமிழகத்தை சார்ந்தவர்கள் தொடர்ந்து என்எல்சியில் கடந்த 5 ஆண்டுகளாக புறக்கணிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தட்டிக்கேட்க வேண்டிய தமிழக அரசு எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் பொதுமக்களும், இளைஞர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.நெய்வேலி, ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடேசன் கூறியதாவது:நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் தொடங்கப்பட்டதன் நோக்கம் இப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்பதுதான். ஆனால் கடந்த சில வருடங்களாக அதன் நோக்கம் சீர்குலைந்து வட மாநில தொழிலாளர்கள் அதிகளவில் ஒப்பந்த தொழிலாளர்கள் முதல் பொறியாளர், அதிகாரிகள் வரை தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். GATE தேர்வு முறையால் வட மாநிலத்தை சேர்ந்த அதிகாரிகள் அதிகளவில் பணிக்கு வந்துள்ளனர். சமீபத்தில் இரண்டாம் அனல்மின் நிலைய விபத்துக்கு மொழி பிரச்னையே முக்கிய காரணம். கல்வி, தொழில் வளர்ச்சி, திறமை என அனைத்திலும் சிறந்து விளக்கும் தமிழக பட்டதாரி இளைஞர்களால் GATE  தேர்வில் வெற்றி பெற முடியவில்லை என்பது ஏன் என்பது புரியாத புதிராகவே உள்ளது. என்றார்.நெய்வேலி, வேகாக்கொல்லை கிராம முதுகலை பொறியியல் பட்டதாரி இளைஞர் சக்திவேல் கூறியதாவது: பொறியியல் படித்த எனது உறவினர்கள் நல்ல முறையில் தேர்வு எழுதியும் தேர்வில் அதிக மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. என்எல்சி நிறுவனத்தால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபட்டுள்ளது. நிறுவனத்துக்கு தாங்கள் பிறந்து வாழ்ந்த வீடு, நிலங்களை கொடுத்துவிட்டு இன்று சொந்த ஊரில் அகதிகள் போல் வாழ்ந்து வருகிறோம் என்றார் வேதனையுடன், நெய்வேலி, சூழலியல் பாதுகாப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் திராவிடன் கூறியதாவது: இப்பகுதி படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு முற்றிலும் மறுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை தட்டிக்கேட்க வேண்டிய தமிழக அரசு கண்டும் காணாதது போல் இருந்து வருகிறது. தமிழக அரசு உடன் நடவடிக்கை எடுத்து என்எல்சி நிறுவனத்தில் மொத்த வேலை வாய்ப்பில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு 50 சதவீதமும், தமிழக இளைஞர்களுக்கு 40 சதவீதமும், மீதமுள்ள 10 சதவீதத்தை வட மாநிலத்தவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.தமிழர்களுக்கு முக்கியத்துவம் இல்லைஎன்எல்சி இந்தியா நிறுவனம் GATE  நேர்முகத் தேர்வில் மெக்கானிக்கல் பிரிவில் 761 பேரும், எலக்ட்ரிக்கல்  பிரிவில் 404 பேரும், எலக்ட்ரிக்கல் பிரிவில் 63 பேரும், சிவில் பிரிவில்  30 பேரும், கண்ட்ரோல் அண்ட் இண்ட்டிமெண்டேஷன்ஸ் பிரிவில் 91 பேரும்,  கம்ப்யூட்டர் பிரிவில் 32 பேரும், மைனிங் பிரிவில் 30 பேரும், ஜியாலஜி  பிரிவில் 30 பேரும், பைனான்ஸ் பிரிவில் 80 பேரும், மனிதவள பிரிவில் 61  பேரும்  என 1,582 பேர் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் மொத்த காலி பணியிடங்கள் 259 ஆகும்.என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பட்டதாரி  பொறியாளர்கள் பதவிக்கான தேர்வுக்காக நடத்தப்பட்ட எழுத்துத்தேர்வில்,  தமிழகத்தை சார்ந்த இளைஞர்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படாமல்,  மிகக்குறைவான சதவிகிதத்தில் உள்ளதாலும், வடநாட்டை சார்ந்தவர்கள் அதிகளவில்  தேர்வு செய்யப்பட்டதாலும் தமிழக இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்….

Related posts

மடிப்பாக்கம் பிரதான சாலை மற்றும் மேடவாக்கம் பிரதான சாலை சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்!

விக்கிரவாண்டியில் நாளை வாக்கு எண்ணிக்கை: காலை 11 மணிக்கு முடிவு தெரியும்

மடிப்பாக்கம் பிரதான சாலை மற்றும் மேடவாக்கம் பிரதான சாலை சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்!