அவசரமாக போனது ரயில் 1.10 லட்சம் மீன் குஞ்சுகள் இறந்தன

கோவை: கோவையை சேர்ந்தவர் காசிநாத். மீன் வளர்ப்பு தொழில் செய்து வருகிறார். அமராவதி அணையில் ஒப்பந்த முறையில் மீன் வளர்த்து விற்பனை செய்கிறார். இவர் அணையில் வளர்க்க கொல்கத்தாவில் கண்ணாடி கெண்டை மீன் குஞ்சுகள் வாங்க ஆர்டர் கொடுத்திருந்தார். நேற்று முன்தினம் காலை 10.20 மணிக்கு ஷாலிமர் ரயிலில் 397 அட்டை பெட்டிகளில் தண்ணீர் பாக்ெகட்டுடன் மீன் குஞ்சுகள் வந்தன. கோவை ரயில் நிலையத்தில் 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பார்சல் பெட்டியில் இருந்து மீன் குஞ்சு பெட்டிகளை இறக்கி கொண்டிருந்தனர். 183 பெட்டிகள் இறக்கிய நிலையில் ரயில் திடீெரன புறப்பட்டு சென்றது. அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் ரயில்வே பார்சல் பிரிவிற்கு தகவல் அளித்தனர். ஆனால் ரயில் வெகு தூரம் சென்றுவிட்டது. இதைத்தொடர்ந்து பாலக்காடு, எர்ணாகுளம் உட்பட பல்வேறு ரயில் நிலையங்களில் இதர மீன் பெட்டிகள் இறக்கி வைக்கப்பட்டு நேற்று காலை கோவை ரயில் நிலையம் கொண்டு வரப்பட்டது. கோவையில் இறக்காமல் கேரளா சென்று திரும்ப வந்த 214 பெட்டிகளில் இருந்த 1.10 லட்சம் மீன் குஞ்சுகள் அனைத்தும் இறந்து விட்டன. இதனால் சுமார் 2 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக மீன் குஞ்சு ஆர்டர் கொடுத்த காசிநாத் ரயில்வே நிர்வாகத்திடம் முறையிட்டார். கொல்கத்தாவில் இருந்து கோவை வர 48 மணி நேரமாகும். 48 மணி நேரம் உயிர் வாழும் வகையில் தண்ணீர் நிரப்பி ஆக்சிஜன் செலுத்தி பெட்டிக்குள் அடைத்து மீன் குஞ்சுகளை டெலிவரி செய்துள்ளனர். உரிய நேரத்தில் இறக்காமல் சென்றதால் மீன் குஞ்சுகள் இறந்து விட்டன. பார்சல் பிரிவினர் ரயிலை மீன் குஞ்சு பெட்டிகளை இறக்கும் வகையில் அவகாசம் கொடுத்திருக்கலாம். தொழிலாளர்களும் பெட்டிகளை இறக்கும் வரை அவகாசம் கேட்டிருக்கலாம். தாமதத்தில் மீன் குஞ்சுகள் இறந்தது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்….

Related posts

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவை தொகை ₹94.49 கோடி: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

அமாவாசை முன்னிட்டு இன்றும், நாளையும் 1,065 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட்: டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு