அழகான இளம்பெண்களின் புகைப்படத்தை வெளியிட்டு போலி மேட்ரிமோனியல் வெப்சைட் மூலம் லட்சக்கணக்கில் பணம் சுருட்டும் கும்பல்: இளைஞர்கள், திருமணமாகாத 35 வயது கடந்த ஆண்கள் குறிவைப்பு: மோசடி பெண்களை வைத்து பணம் பறிப்பு

சென்னை: திருமணமாகாத இளைஞர்கள் மற்றும் 35 வயது கடந்தும் திருமணத்துக்கு பெண் கிடைக்காதவர்களை குறி வைத்து ஒரு கும்பல் போலி மேட்ரிமோனியலை உருவாக்கி, இதுவரை கோடிக்கணக்கில் பணத்தை பறித்துள்ளது. இதற்காக மோசடி பெண்களை, திருமணத்துக்காக பதிவு செய்துள்ள ஆண்களுடன் செல்போனில் பேச வைத்து ‘அவசரம்’ என்ற பெயரில் பணம் பறிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். திருமணத்துக்காக தங்கள் மகனுக்கு, கல்யாண தரகர் மூலம் வரன் தேடி பெற்றோர் பல்வேறு ஊர்களுக்கு செல்வது வழக்கம். ஆனால், மேட்ரிமோனியல் என்ற இணையத்தில் தங்கள் பெயர், சம்பளம், தொழில், விரும்பும் பெண்கள், என்ன மதம், ஜாதி, எம்மதமும் சம்மதம் என்று குறிப்பிட்டு பதிவு செய்கின்றனர். எல்லா பணிகளும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே முடிந்து விடுகிறது. அதேபோலே திருமணமாகாத பெண்களின் குடும்பத்தினரும் மணமகன் தேவை என்று அதே மேட்ரிமோனியலில் பதிவு செய்கின்றனர். ஆரம்ப காலகட்டத்தில் ஒருசில மேட்ரிமோனியல் வெப்சைட்கள் முறையாக பதிவு செய்து, தங்களது வாடிக்கையாளர்களுக்கு தேவையான விவரங்களை சரியாக வழங்கி வந்தன. முதலில் ஒரு மேட்ரிமோனியல் வெப்சைட்டை தேர்வு செய்து நாம் உள்ளே சென்றால் இலவச ரிஜிஸ்ட்ரேஷன் என்று வரும். அதற்குள்ளே சென்று நமது பெயர் மற்றும் விவரங்களை பதிவிட்டு, புகைப்படத்தை அப்லோட் செய்து விட்டால், பொருத்தமான வரன் வந்துள்ளது என்று சம்மந்தப்பட்டவர் செல்போனுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவார்கள். அதற்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும். தற்போது, மேட்ரிமோனியலில் மணமகள் தேடி பதிவு செய்யும் வாடிக்கையாளர்களின் வாட்ஸ்அப் எண்ணை பெற்று அதில், அழகான இளம்பெண் புகைப்படத்தை அனுப்புகின்றனர். மணமகன் தேடுபவர் என்றால் அழகான வாலிபரின் புகைப்படம் அனுப்புகின்றனர். அவர்கள் பற்றி விவரங்களை அறிந்துகொள்ள முதலில் 1000 முதல் 7000 வரை செலுத்த வேண்டும். அதிலும், பேக்கேஜ் முறையை அறிமுகப்படுத்தி உள்ளனர்.  அவ்வாறு பணம் கட்டி உள்ளே சென்று பார்க்கும்போது ஆரம்பத்தில் நிறைய பெண்களின் புகைப்படங்கள் மற்றும் ஜாதகங்களை அனுப்புவார்கள். இவை சில மேட்ரிமோனியல் வெப்சைட்களில் ஓரளவிற்கு சரியாக இருக்கும். ஆனால் பல வெப்சைட்களில் பெங்களூரு, ஐதராபாத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பெண்களின் புகைப்படங்களே அதிகமாக பதிவிடுகின்றனர். தமிழ்நாட்டை சேர்ந்த வாலிபருக்கு தமிழே தெரியாத வெளிமாநில பெண்ணின் படம், அவரின் சம்பளத்தை லட்சக்கணக்கில் குறிப்பிட்டு அனுப்புகின்றனர். தமிழர்களுக்கு வடஇந்திய பெண் எப்படி பொருத்தமாக இருப்பார் என்ற லாஜிக்கே இல்லாமல் ேபாலி மேட்ரிமோனியல் வெப்சைட்கள் செயல்படுகின்றன.அந்த பெண்ணின் செல்போன் எண்ணை தருவதற்கு, ஒரு கட்டணத்தை வாங்கிக்கொண்டு, அந்த பெண்ணிடம் பேச வைப்பார்கள். அவ்வாறு பேசும் பெண் குறிப்பிட்ட அந்த வெப்சைட்டிக்கு நன்கு அறிமுகமான பெண்ணாக இருப்பார். அவர் ஒரு வாரம், 10 நாள் பழகி, உங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என கூறுவார். அன்பை பொழிந்து உருகி… உருகி… சாட்டிங் செய்துவிட்டு, திடீரென ஒருநாள் தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது என 25 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை கேட்பார். மேலும், நான் அடுத்த வாரம் சென்னை வருகிறேன். அப்போது, உன்னை சந்தித்து அந்த பணத்தை திருப்பி கொடுத்துவிடுகிறேன், என கூறுவார். ஆனால், தரமாட்டார்;சென்னைக்கு வரமாட்டார். குறைவான பணத்தை இழந்தவர்கள் புகார் கொடுக்க வருவதில்லை. இலவசம் என்று கூறி முதலில் ஆசைவார்த்தை கூறி அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை ஏமாற்றுவதே இவர்கள் வேலை. போலீஸ், பிரஸ், அட்வகேட் என்று இருந்தால் அவர்களை தவிர்த்து, இன்ஜினியர், டாக்டர், பிஸ்னஸ் மேன் என்று இருந்தால் அவர்களை குறிவைத்து ஏமாற்றுகின்றனர். குறிப்பாக, மறுமணம் என்று வரும் நபர்களை குறிவைத்து பணம் பறித்து வருகின்றனர். பணத்தை இழந்த பலர், அந்த மோசடி கும்பலிடம் இருந்து அதை திரும்ப பெற முடியாமல் தவித்து வருகின்றனர். பல பெண்கள் பாலியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.ஜொள்ளு பேச்சு பேச மாத சம்பளத்தில் பெண் நியமனம் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண் தானே  என வாலிபர்கள், மறுமணம் செய்பவர்கள் பணத்தை அவர் குறிப்பிடும் வங்கி கணக்கில் செலுத்துவர். அதன்பிறகு அந்த பெண் பேசிய எண் உபயோகத்தில் இருக்காது. இதுபற்றி சம்மந்தப்பட்ட  மேட்ரிமோனியல் வெப்சைட்டில் கேட்டால், நல்லவர்களை நீங்கள் தான் தேர்வு செய்ய வேண்டும், என மிகவும் கூலாக பதில் கூறுகின்றனர். ஆனால் குறிப்பிட்ட அந்த வெப்சைட்டுக்கும் அந்த பெண்ணிற்கும் தொடர்பு உள்ளது. மோசடி பணத்தை அவர்கள் பங்கு பிரித்து கொள்வது அல்லது சம்பளத்துக்கு பெண்களை வைத்து அவர்கள் மூலம் பணம் பறிக்கின்றனர்.டார்க்கெட்டில் சிக்கும் 50 வயது ஆண்கள்டெல்லியில் இருந்து இயங்கும்  ஒரு கும்பல் போலி மேட்ரிமோனியல் தொழிலை பணம் பறிப்பதற்காகவே உருவாக்கி, ஜொள்ளு விடும் ஆசாமிகளை, பசை உள்ள ஆசாமிகளை தேர்வு செய்து பணத்தை கறக்கின்றனர். இந்த மோசடி கும்பலின், டார்கெட் 40 வயதிலிருந்து 50 வயதுள்ள ஆண்கள். இவர்கள் மறுமணத்திற்கு வெப்சைட்டில் பதிவிட்டால், உடனடியாக, நிறுவன உரிமையாளரா, கம்பெனி அதிகாரியா, தொழிலதிபரா என அதிக வருவாய் உள்ள நபர்களை, தொடர்புகொண்டு, 35 வயதுடைய பெண் உங்களுக்கு பொருத்தமாக உள்ளார் என ஒரு அழகான இளம்பெண்ணின்  புகைப்படத்தை அனுப்புவார்கள். அதன்பின் அந்த பெண்ணை ஒரு வாரம், 10 நாள் பேச வைத்து, பின்னர் அவசர பண தேவை என கூறி, ஒரு பெரிய தொகையை  குறிப்பிட்ட நபரிடமிருந்து பெற்றுக்கொண்டு அதன் பிறகு இணைப்பை துண்டித்து  விடுவார்கள். ஏமாந்த நபர்கள், போலீசில் புகார் அளித்தாலும் பயன் இல்லை. காரணம், டெல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள சிறு  சிறு பகுதிகளை சேர்ந்த இடத்தை காட்டும். குறிப்பாக குர்கான் என்னும் பகுதியில் இருந்து அதிக போலி மேட்ரிமோனி கும்பல் செயல்படுவதுதான். இதனால், அவர்களை பிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்படுகிறது.’வெளிநாடு வரன் பெயரில் மோசடிமேட்ரிமோனியல் சைட்டில், ஒரு சிலர் பதிவிடும்போதே வெளிநாட்டு  மாப்பிள்ளை வேண்டும் அல்லது வெளிநாட்டில் வேலை செய்யும் பெண் வேண்டும்  என்று தேடுவார்கள். வெளிநாட்டு நம்பரில் இருந்து பேசுவதாக குறிப்பிட்ட ஒரு நம்பரை  அவர்கள் தேர்வு செய்து கனடாவிலிருந்து பேசுவதாகவும், அமெரிக்காவிலிருந்து  பேசுவதாகவும் ஏமாற்றுவார்கள். அவ்வாறு பேசி 10, 20 நாட்கள் அவர்கள்  சாட்டிங் செய்துவிட்டு, திடீரென ஒரு நாள் நான் உன்னை பார்க்க சென்னை வருகிறேன் என்று கூறுவார்கள். பின்னர், சென்னை ஏர்போர்ட்டில் இருந்து  சுங்கத்துறை அதிகாரி பேசுகிறேன். உங்களை பார்க்க வெளிநாட்டில் இருந்து வந்த  நபர், தற்போது இங்கு உள்ளார். அவரிடம் பணம் அனைத்தும் டாலராக உள்ளது. அவர்  உங்களுக்காக கிப்ட் வாங்கி வந்துள்ளார். அதனை இந்திய மதிப்பில் தான் பணம்  கட்ட வேண்டும் என்று கூறி 20 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை உடனடியாக  குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு செலுத்த சொல்வார்கள். இவர்களும் நமக்காக  வந்துள்ளார்கள் என பணத்தை செலுத்திய பின்பு இணைப்பு துண்டிக்கப்படும். இதுபோன்ற சம்பவங்களும் சமீபத்தில் சென்னையில் நடந்துள்ளது….

Related posts

சொத்து தகராறில் பெண் தற்கொலை

சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு