Thursday, June 27, 2024
Home » அற்ப அரசியலுக்காக இஸ்லாமிய பெண்களின் உடை உரிமையை மறுப்பதா? : சீமான் ஆவேசம்!!

அற்ப அரசியலுக்காக இஸ்லாமிய பெண்களின் உடை உரிமையை மறுப்பதா? : சீமான் ஆவேசம்!!

by kannappan

சென்னை : மோடியின் ஆட்சியில் குஜராத்தில் நிகழ்த்தப்பட்ட இஸ்லாமிய மதவெறிப் படுகொலைகளை நாடு முழுமைக்கும் அரங்கேற்றத் துடிப்பதா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கர்நாடக மாநிலத்தின் கல்விக்கூடங்களில் இசுலாமியப்பெண்கள் தங்களது மார்க்கத்தின்படி, உடை உடுத்தி வருவதற்கு எதிர்ப்புத்தெரிவித்து, கடந்த சில வாரங்களாக மதவெறி இந்துத்துவக்கும்பல் நிகழ்த்தி வரும் வன்முறை வெறியாட்டங்களும், பிரித்தாளும் சூழ்ச்சிகளும் அதிர்ச்சியளிக்கின்றன. கல்விக்கொள்கையையும், தேர்வு முறையையும் காவிமயப்படுத்தும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு, தற்போது மாணவர்களின் மனங்களிலும் மதவாத நச்சுப்பரப்புரையை விதைத்து மதமோதலுக்கு வித்திடுவது கடும் கண்டனத்திற்குரியது. தங்களது அரசியல் ஆதாயத்திற்காகவும், தன்னலப்போக்குக்காகவும் மாணவர்கள் மத்தியில் மதவுணர்ச்சியைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் இந்துத்துவக்கூடாரத்தின் இழிஅரசியலை வன்மையாக எதிர்க்கிறேன்.பன்மைத்துவத்தின் மூலம் உலகை ஈர்த்த இந்தியப் பெருநாட்டில் ஒற்றைத்தன்மையைப் புகுத்தி, மதத்தால் மக்களைப் பிளந்து பிரிக்க வழிவகை செய்திடும் பாஜகவின் செயல்பாடுகள் வெட்கக்கேடானது. வளர்ச்சியென்று வாய்கிழியப் பேசி ஆட்சியதிகாரத்திற்கு வந்துவிட்டு, மதவாதத்தைத் தூண்டிவிட்டு நாட்டைக் கூறுபோட நினைக்கும் பாஜகவின் ஆட்சியாளர்களும், ஆதரவாளர்களும்தான் இந்நாட்டின் உண்மையான தேசவிரோதிகள்; பிரிவினைவாதிகள். இந்நாட்டுக்குள்ளேயும், வெளியேயுமென பல்லாயிரக்கணக்கான பிரச்சினைகள் முற்றுமுழுதாகச் சூழ்ந்திருக்க அவற்றைத் தீர்ப்பதற்கும், போக்குவதற்குமாக வேலைசெய்யாது மதவாத அரசியலைக் கையிலெடுக்கும் பாஜகவின் செயல்பாடுகள் அருவருக்கத்தக்கது.வடகிழக்கில் அருணாச்சலப்பிரதேசத்திலும், தெற்கே இலங்கையிலுமென இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக சீனா நிலைகொண்டிருக்கிறது. இந்திய நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்தில் விழுந்துக்கிடக்கிறது. பூகோள ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மிகப்பெரும் சரிவையும், நெருக்கடியையும் நாடு சந்தித்துக் கொண்டிருக்கையில், அதனை சரிகட்ட எவ்வித நடவடிக்கையையும் எடுக்க முன்வராத இந்நாட்டின் ஆட்சியாளர்கள் மதப்பூசல்களை உருவாக்கி மக்களைத் திசைதிருப்ப எண்ணுவது கொடுங்கோன்மையின் உச்சமாகும். நாட்டு மக்களிடையே நிலவும் பொருளற்ற நிலை, வறுமை, ஏழ்மை, பட்டினி, வேலையில்லாத்திண்டாட்டம், சிறு குறு தொழில்களிலன் நலிவு, நிறுவனங்கள் செய்திடும் வேலையிழப்பு, அன்றாடம் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலையேற்றம், அத்தியாவசியப் பொருட்களின் கட்டுங்கடங்காத விலையுயர்வு, நாடு முழுக்க நிலவும் அசாதாரணமான சூழல், வீரியம்பெற்று வரும் கொரோனா நோய்த்தொற்று என சிக்கல்கள் நாட்டை நாளும் வாட்டி வதைக்கையில் அதுகுறித்து எவ்விதச் சிந்தனையும், தொலைநோக்குப்பார்வையுமற்று மதத்தை வைத்து மலிவான அரசியல் செய்து வாக்குவேட்டையாட முயலும் இந்துத்துவக்கும்பலின் படுபாதகச் செயல்பாடுகள் மானுடகுலத்திற்கே விரோதமானதாகும். பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் குஜராத்தின் முதல்வராக இருக்கும்போது அம்மாநிலத்தில் நிகழ்த்தப்பட்ட இசுலாமிய மக்களின் உயிர்களைக் காவுகொண்ட மதவெறிப்படுகொலைகளையும், சூறையாடல்களையும் நாடு முழுமைக்குமாக நடத்தி, அதன்மூலம் தனது அதிகாரத்தை நிலைநிறுத்தத் துடிக்கும் பாஜக ஆட்சியாளர்களின் வஞ்சகச்செயல்பாடுகள் எதன்பொருட்டும் ஏற்க முடியாத மனிதப்பேரவலமாகும்.நாடு முழுமைக்கும் எப்போதும் இல்லாத அளவுக்கு மதம் குறித்தான சர்ச்சைகளும், பூசல்களும், பிளவுகளும் புற்றீசல்களாக ஆங்காங்கே எழுந்திருக்கும் நிலையில், பாஜகவின் எட்டு ஆண்டுகால ஆட்சியை மதிப்பிடுகிறபோது நாட்டின் முன்னேற்றமோ, மக்களின் நலவாழ்வோ அணுவளவும் முன்நகரவில்லை என்பதும், வளர்ச்சி, மாற்றமென்று பேசி, ஆட்சியதிகாரத்திற்கு வந்த பிரதமர் மோடியின் ஆட்சியில் அதற்கான அறிகுறிகள்கூட தென்படவில்லை என்பதும் இந்த ஆட்சியும், அதிகாரமும் யாருக்கானவை என்பதை பறைசாற்றும் சான்றுகளாகும். உணவு, உடை, வழிபாடு என வாழ்வியல் முறைகளில் இருக்கும் மாறுபாட்டைக் காட்டி, அதன்மூலம் மக்களிடையே பாகுபாட்டையும், மதவெறுப்புணர்வையும் விதைத்து, மதக்கலவரங்களை உருவாக்க எண்ணும் பாஜகவின் கொடுங்கோல் செயல்பாட்டின் நீட்சியாகவே இசுலாமியப்பெண்களின் உடைகளுக்கெதிராக மாணவர்களை மூளைச்சலவை செய்து தூண்டிவிட்டுள்ளது என்பது வெளிப்படையானதாகும்.அசோகப்பேரரசர் நினைத்திருந்தால், தனது ஆட்சிக்காலத்தில் நாட்டு மக்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக பௌத்த மதத்திற்கு மாற்றியிருக்க முடியும். முகலாயர்களது ஆட்சியில் அவர்கள் நினைத்திருந்தால் இசுலாமிய மார்க்கத்தை நோக்கி மக்கள் அனைவரையும் தள்ளியிருக்க முடியும். ஆங்கிலேயர்கள் நினைத்திருந்தால் துப்பாக்கி முனையில் நாட்டு மக்களை கிருத்துவர்களாக மாற்றி நிறுத்தியிருக்க முடியும். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்ய முன்வரவில்லை.அரசர்கள் ஆளுகை செய்யும் மன்னராட்சியாக இருந்தாலும், படையெடுப்புகள் மூலம் நிலத்தை ஆக்கிரமித்த அந்நியர்கள் ஆட்சியாக இருந்தாலும், அடிமைப்படுத்தி ஆண்ட வெள்ளையர்கள் ஆட்சியாக இருந்தாலுமென எந்தக் காலக்கட்டத்திலும் மதத்தை முன்னிறுத்தி மக்களைத் துன்புறுத்தவுமில்லை; மதத்தைத் தழுவக்கூறி, மக்களைக் கட்டாயப்படுத்தவுமில்லை; வழிபாட்டுத்தலங்கள் மீது தாக்குதல் தொடுத்து, மதக்கலவரங்களை மக்களிடையே உருவாக்க முனையவுமில்லை. இவ்வாறு ஆண்டாண்டு காலமாக இம்மண்ணில் இருந்த மதவுரிமையும், சகோதரத்துவ உணர்வும், சமூக நல்லிணக்கமும் எட்டு ஆண்டுகால பாஜகவின் ஆட்சிக்காலத்தில் முற்றாகக் குலைக்கப்பட்டு வருகிறது.விரும்பிய மதத்தைத் தழுவதற்கும், அதுதொடர்பான வழிபாட்டு முறைகளை மேற்கொள்வதற்கும், அதுகுறித்தக் கருத்துப்பரவலைச் செய்வதற்குமான வாய்ப்பை இந்தியாவின் அரசியலமைப்புச் சாசனம் அடிப்படை உரிமையாக வரையறுத்து வழங்கியுள்ள நிலையில், அதற்கு நேர்மாறாக, இசுலாமியப் பெண்களின் உடைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதும், மதவாத அடையாளமானக் காவித்துண்டை அணிந்துக் கல்விக்கூடங்களுக்கு வருகைதருவதுமானப் போக்குகள் ஒருபோதும் ஏற்புடையதல்ல. ‘வெள்ளையர்களது ஆட்சிக்காலத்தில் அரசின் கொடுமைகளுக்கெதிராகப் போராடும் உரிமையையாவது கொடுத்தார்கள். விடுதலைபெற்ற நாட்டில் அந்த உரிமையும் பறிக்கப்பட்டுவிட்டது’ என்றார் தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள். அக்கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் மானுட உரிமைக்காகவும், மண்ணின் நலனுக்காகவும், மக்களின் நலவாழ்வுக்காகவுமாக அறவழியில் போராடும் மனித உரிமை ஆதரவாளர்களை, சனநாயகப்பற்றாளர்களை கடும் சட்டங்களின் கீழ் கைதுசெய்து, சிறையிலடைத்து கொடும் சித்திரவதை செய்கிறது பாசிச பாஜக அரசு.தேசப்பக்தி குறித்து மண்ணின் மக்களுக்குப் பாடமெடுத்து வந்த இந்நாட்டுக்கும், இந்நாட்டின் விடுதலைக்கும் எவ்விதத்தொடர்புமற்ற ஆரியக்கூட்டமும், அவர்களது அடிவருடும் மதவெறிக்கூட்டமும், கர்நாடகாவில் இந்தியக்கொடியை இறக்கிவிட்டு, காவிக்கொடியைப் பறக்கவிட்ட இந்துத்துவக்கும்பலின் தேசவிரோதச்செயலுக்கு என்ன எதிர்வினையாற்றப் போகிறார்கள்? மதம் என்பது யானைக்கு மட்டுமல்ல மனிதர்களுக்குப் பிடித்தாலும் அழிவுதான் மிஞ்சும்! சாதியோ, மதமோ எதுவும் மனிதனைப் படைக்கவில்லை. மனிதன்தான் சமயங்களையும், சடங்குகளையும், பழக்க வழக்கங்களையும் உருவாக்கினான் என்பதை இந்நாட்டின் ஆட்சியாளர்கள் இனியாவது உணரத் தொடங்க வேண்டும். ‘தான் வாழுகிற நாட்டைவிட, தான் சார்ந்திருக்கும் மதம்தான் பெரிதென்று நாட்டின் ஆட்சியாளர்கள் எண்ணிச் செயல்படத் தொடங்கினால், இந்நாடு நாசமாவதை யாராலும் தடுக்க முடியாது’ எனும் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் எச்சரிக்கை மொழிகளைத்தான் இத்தருணத்தில் நாட்டு மக்களுக்கு நினைவுபடுத்தத் தோன்றுகிறது. சூழ்ந்திருக்கும் பேராபத்தை உணர்ந்து, நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நம்பிக்கைத் தூண்களாக திகழும் இளைய தலைமுறைகளின் மனதில் மதவாத வன்மத்தை விதைத்து, அவர்களது எதிர்காலத்தையே அழிக்க நினைக்கும் மனிதகுல விரோதியான பாஜகவின் எதேச்சதிகாரச்செயல்பாடுகளையும், கொடும் வன்முறைச்செயல்களையும் தடுத்து நிறுத்தி, நாட்டின் ஒற்றுமையைக் காக்கவும், சமூகத்தின் நல்லிணக்கத்தை நிலைநாட்டவுமாக அணிதிரள வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பும், கடமையுமெனக்கூறி, அறைகூவல் விடுக்கிறேன்.ஆகவே, கர்நாடகாவில் மதவெறிக்கும்பலால் அரங்கேற்றப்படும் நாசகாரச்செயல்பாடுகளுக்கு இளைய தலைமுறைப்பிள்ளைகள் இரையாகாமல் காப்பாற்றக் களமிறங்கி, மதவாதத்திற்கு எதிராக மனிதம் காக்கவும், மக்களை நல்வழிப்படுத்தவுமாக சனநாயகப்பேராற்றல்களும், மானுடப்பற்றாளர்களும் ஒன்றிணைய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். இத்தோடு, அண்டை மாநிலமான கர்நாடகாவில் நடைபெற்று வரும் மதவெறிச்செயல்கள் தமிழ்நாட்டிலும் தலைதூக்காது தடுக்க மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட்டு, இந்துத்துவக்கும்பலை இரும்புக்கரம் கொண்டு, சட்டத்தின் துணைநின்று ஒடுக்க வேண்டுமென தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்….

You may also like

Leave a Comment

one × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi