அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் தொடங்கியது: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று மாலை சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி சூரனை ஜெயந்திநாதர் வதம் செய்யும் நிகழ்வைக் காண லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ளனர். கடற்கரையில் தொலைதூரத்தில் நின்று கொண்டிருக்கும் பக்தர்கள் சூரசம்ஹாரத்தை தெளிவாகப் பார்க்கும் வகையில் 6 இடங்களில் எல்இடி டி.வி.க்கள் அமைக்கப்பட்டுள்ளன.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25ம் தேதி தொடங்கியது. 6ம் திருவிழாவான இன்று காலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 6 மணிக்கு யாகசாலை பூஜைதொடங்கியது. பிற்பகல் 12 மணி அளவில் யாகசாலை தீபாராதனையும், 12.45 மணிக்கு மேல் சப்பரத்தில் ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து எழுந்தருளி வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடன், மேள, தாளம் முழங்க சண்முகவிலாசம் வந்தடைந்தார். அங்கு தீபாராதனை நடந்தது. மதியம் 2 மணிக்கு மேல் சஷ்டி மண்டபத்தில் ஜெயந்திநாதருக்கு அபிஷேக அலங்காரம் நடந்தது. மாலை 4 மணி அளவில் சூரசம்ஹாரத்திற்காக ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளினார். அங்கு சூரனை கஜ முகம், சிங்க முகம் மற்றும் சுயரூபத்தோடு வரும் சூரனை ஜெயந்திநாதர் வதம் செய்த பின்னர், சந்தோஷ மண்டபத்தில் ஜெயந்திநாதர், அம்பாளுடன் எழுந்தருளுகிறார். அங்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. பின்னர் கிரி பிரகாரம் உலா வந்து திருக்கோயில் வந்து சேர்கிறார். இரவு 108 மகாதேவர் சந்நிதி முன்பு சுவாமிக்கு சாயா அபிஷேகம் நடக்கிறது. அதன்பின்னர் சஷ்டி பூஜைத் தகடுகள் கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது.சூரசம்ஹாரத்தை யொட்டி நேற்று மாலை முதலே பஸ், வேன்கள், சுற்றுலா பஸ்கள், கார்கள், ரயில்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சூரசம்ஹாரத்தை கடற்கரையில் தூரத்தில் இருக்கும் பக்தர்கள் பார்க்கும் வகையில் 6 இடங்களிலும், தற்காலிக கொட்டகைகளில் 20 இடங்களிலும் எல்இடி டிவிக்களை கோயில் நிர்வாகம் வைத்துள்ளது. உயர்கோபுரங்கள் அமைத்தும், சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டும் கண்காணிப்பு பணி நடக்கிறது. தீயணைப்பு வாகனங்கள், 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. சூரசம்ஹாரத்தை காணச் செல்லு்ம பக்தர்களுக்கு கம்புகள் கட்டிய வரிசைப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அனுமதிச் சீட்டுகள் பெற்ற வாகனங்களை மட்டுமே தாலுகா அலுவலக ரோட்டில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் அருகிலும், நாழிக்கிணறு பஸ் நிலையம் அருகிலும் நிறுத்த வேண்டும். மற்றவை ஊருக்கு வெளியில் நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது….

Related posts

மதுவிலக்கு திருத்தச்சட்டம் நாளை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மதுவிலக்கு திருத்தச்சட்டம் நாளை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கொள்ளையடித்து தலைமறைவான மேற்கு மாவட்ட பாஜக இளைஞரணி துணைத்தலைவர் கைது