Saturday, September 28, 2024
Home » அறிந்த தலம் அறியாத தகவல்கள் :திருவாதவூர்

அறிந்த தலம் அறியாத தகவல்கள் :திருவாதவூர்

by kannappan
Published: Last Updated on

திருவாதவூர் எனும் இத்திருத்தலத்தில்தான் மாணிக்கவாசகர் அவதரித்தார். வேதபுரம், வாதபுரம், வாதவூர், சமீரண புரம், பாண்டிய பட்டணம், வயிரவ புரம், சம்யாக கானம், பிரமபுரம் எனப் பல பெயர்கள் உண்டு.மழை பெய்யஇங்கே `விஷ்ணு தீர்த்தம்’ எனும் பெயரில் ஓர் ஏரி உள்ளது. ஏரிக்கரையில் ஒரு கம்பத்தின் மேல், `புருஷா மிருகம்’ என்று, ஏரிக்காவல் தெய்வம் உள்ளது. மழை பெய்யாமல் துயரப்படும் போது, ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுசேர்வார்கள். நூறு தேங்காய்களைத் தீயிலிட்டு நன்றாகக் கருக்குவார்கள். அதன்பின் சிறப்பாக மேள தாளங்களுடன் செல்வார்கள். கருக்கப்பட்டதை, நன்றாகக் குழைத்து புருஷா மிருகத்தின் மீது பூசுவார்கள். அவ்வளவு தான்! ஆகாயத்தில் எங்கிருந்தெல்லாமோ மேகங்கள் கூடும். வேண்டிய அளவு மழை பொழியும். இன்றும் இங்கே நடக்கக்கூடிய நிகழ்வு இது. (தல வரலாறு சொல்லும் அதிசயமான `புருஷா மிருகம்’ வரலாறு தனியாக உள்ளது)மாறுபாடான அம்பாள் சந்நதிஇங்கே எழுந்தருளி இருக்கும் அம்பிகையின் திருநாமம் ஸ்ரீவேத நாயகி – ஆரண வல்லி. குதூகலமான புன்னகையுடன் அம்பிகை காட்சி தரும் திருக்கோலம், மனதில் உள்ள கவலைகளை எல்லாம் அப்படியே துடைத்தெடுத்து விடும் அற்புதமான திருக்கோலம். எந்தக் கோயில்களிலும் பெரும்பான்மையாக, சிவபெருமானுக்கு இடப்புறமாகத்தான் அம்பிகை எழுந்தருளி இருப்பார். அதற்கு மாறாக மதுரையில் ஸ்ரீமீனாட்சியன்னை ஸ்ரீசுந்தரேசருக்கு வலப்புறமாக எழுந்தருளி இருக்கிறார். அதேபோல, இங்கே திருவாதவூரிலும் ஸ்ரீ வேதநாயகரின் வலப்புறத்தில், அன்னை ஆரணவல்லி எழுந்தருளி இருக்கிறார். இப்படியிருக்கும் திருத்தலங்களில் சக்தியின் ஆக்கம், சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஞான நூல்கள் கூறும் அறிவிப்பு. இஷ்ட – ஸித்திகளைத் தரும் சந்நதி.முக்கண் சூரியன் கிழக்குப் பிரகாரத்தில் எழுந்தருளி இருக்கும் சூரிய பகவான் பொன்தொடி, பொன் கேசம், பொன்மேனி, பொற்கமல மலர் போன்ற முக்கண்கள் கொண்டவர்.மாணிக்க வாசகர்மேற்குப் பிராகாரத்தில் மாணிக்க வாசகருக்கான தனி ஆலயம் கருவறையுடன் அமைந்து உள்ளது. இங்கே கிழக்கு நோக்கிய சந்நதியில் மூலவராக `மாணிக்க வாசகர்’ எழுந்தருளி உள்ளார். வேறு எந்தத் திருத்தலத்திலும் காண முடியாத அற்புதப் படைப்பு இது.வேதமும் சிவபெருமானும்வேதங்கள் சிவபெருமானைப் பூஜை செய்த காரணத்தால், இங்கே சிவபெருமான் `வேதநாதர்’ என அழைக்கப்படுகிறார். அதை முன்னிட்டு, வேதப்பயிற்சியில் சேருபவர்கள். வேதத்தில் திறமைசாலிகளாக விளங்க வேண்டும் என நினைப்பவர்கள் முதலானோர் இங்கு வந்து வழிபாடு செய்வது விசேஷம். விவரம் அறிந்தோர் இன்றும் இதைச்செய்துவருகிறார்கள். தீர்த்தங்கள் இங்கே சிவ தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், வாயு தீர்த்தம், அக்கினி தீர்த்தம், பைரவ தீர்த்தம், கபில தீர்த்தம் என ஏழு தீர்த்தங்கள் உள்ளன. இழந்ததைப் பெற்றது பாதம் முதல் இடுப்பு வரை, `பிரம்மா’வின் வடிவம். இடுப்பு முதல் கழுத்து வரை `மகா விஷ்ணு’ வடிவம். கழுத்து முதல் தலை வரை `ருத்திர’ வடிவம் என, திரிமூர்த்தி வடிவானவர் – பைரவர். ஒரு சமயம் பைரவர் கயிலைக்கு வந்தார், தன் வாகனமான வேத மயமான நாயை வெளியே விட்டுவிட்டு, உள்ளே சென்று கயிலை நாதரையும் அம்பாளையும் தரிசித்து விட்டு வெளியே வந்தார். வந்து பார்த்தால், அவரது வேத மயமான வாகனத்தைக் காணவில்லை. திடுக்கிட்டுப் போன பைரவர், மறுபடியும் உள்ளே சென்று, கயிலை  நாதரிடம் சொல்லி, ‘‘இழந்ததை மறுபடியும் திரும்பப் பெற அருள் செய்ய வேண்டும்” என வேண்டினார். கயிலைநாதர் கனிவோடு கூறத் தொடங்கினார்; ‘‘பைரவா! நீயே சிறந்தவன் என்ற செருக்கு வந்துவிட்டது உனக்கு. உன் வாகனம் சாதாரண வாகனமல்ல! அது வேதமயமானது. ஆணவம் பிடித்த இடத்தில் அருள்மயமான வேதத்தின் நுண்பொருள் விளங்காது மறைந்து விடும். நீ திருவாதவூருக்கு சென்று பூஜை செய்! இழந்ததைப் பெறுவாய்!” என அருள்புரிந்தார் கைலை நாதர். அதன்படியே திருவாதவூர் வந்த பைரவர், தன் பெயரால் ஒரு தீர்த்தம் உருவாக்கி, உள்ளன்போடு வழிபாடு செய்தார். அதன் பலனாக மூல லிங்கத்தில் இருந்து வேத மயமான நான்கு நாய்களுடன் வெளிப்பட்டார் வேதநாயகரான சிவபெருமான். அவற்றை பைரவரிடம் அளித்து, ‘‘பைரவா! இவற்றைப் பெற்றுக் கொள்! அமைதியாகச் செயல்படு! உன் பெயர் கொண்ட தீர்த்தத்தில் நீராடி எம்மை வழிபடுபவர்கள் சகல விதமான ஸித்திகளையும் அடைவார்கள்” என்று கூறி மறைந்தார். இவ்வாறு, இழந்ததை மீட்கும் தலமாகவும் இது திகழ்கிறது. சனிதோஷம் தீர்த்தது ஆணி மாண்டவ்யர் எனும் முனிவரின் ஜன்ம ராசியில் சனி பகவான் சஞ்சரிக்கக் கூடிய காலத்தில், அவர் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார். தவத்தின் மூலமாக, பாதிப்பில் இருந்து மீண்ட முனிவர், சனி பகவானுக்கு சாபம் கொடுத்தார்; ‘‘முயன்று என்னைப் பாதித்த நீ, முடவனாகப் போ!” என்று சாபம் கொடுத்தார். உத்தமரின் சாபம் உடனே பலித்தது. சனி பகவான் முடமானார். மகனின் முடமான நிலை கண்டு மனம் வருந்திய சூரிய பகவான், ஆணி மாண்டவ்யர் திருவடிகளில் விழுந்து வணங்கி, மகனின் துயர்தீர வேண்டினார். ஆணி மாண்டவ்ய முனிவர், ‘‘திருவாதவூர் சென்று உன் மகனுடன் வேதநாதரை வழிபாடு செய்! துயர் தீரும்” என்றார். அதன்படியே, சூரியபகவான் தன் மகனான சனி பகவானுடன் திருவாதவூர் வந்து, வேத நாதரையும் ஆரணவல்லி அம்மையையும் வழிபட்டார். அம்பிகையுடன் காட்சி தந்த வேதநாதரான சிவபெருமான், ”சனிபகவானே! நெளிந்து கிடக்கும் உன் பாதம் சரியாகும்! ஆனால், இவ்வரலாறு நினைவிருக்கும் விதமாக, உன் பெயரில் மட்டும் `பங்கு’ (ஊனம்) என்பது இருக்கும். இங்கு வாதபுரம் எனும் திருவாதவூரில் வந்து வழிபடுபவர்களை நெருங்காதே!” எனக் கூறி அனுப்பினார். சனி தோஷத்தை நீக்கக்கூடிய திருத்தலமாகவும் திகழ்கிறது.நூற்றுக்கால் மண்டபம்கிழக்குப் பிராகார வலப்புறக் கடைசியில், ஒரு நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. அற்புதமான இம்மண்டபம், மாணிக்க வாசகரால் கட்டப் பட்டது. சிவபெருமான் நரி-பரியாக்கிய நாளில், அதாவது நரிகளைக்குதிரைகளாக்கிய நாளில், சிவபெருமான் தம் திருவடிச் சிலம்பொலி காட்டிய இடம் இது.ஆரண வல்லியின் ஆவிர்பவம் – வேத நாயகியின் தோற்றம்:பிரம்மதேவர் இங்கே `ஆரண கேதகம்’ எனும் யாகம் செய்தார். தூய்மையான பக்தி நிறைந்த அவரது யாகத்தில் மகிழ்ந்த அம்பிகை, யாக குண்டத்தில் ஜொலித்த அக்கினியில் இருந்து வெளிப்பட்டார். கண்களைக் குளிர்விக்கும் பசுமையான ஔி எழுந்து படர, அதன் நடுவில் பீதாம்பரம் உடுத்தி, நீலமணி போன்ற நிறம் காட்டி, ஆபரணங்கள் பல அணிந்து, அம்பிகை வெளிப்பட்டார். அம்பிகைக்கு `ஆரணவல்லி’ எனத் திருநாமம் சூட்டிய பிரம்மதேவர், ‘‘தாயே! இங்கேயே என்றும் எழுந்தருளி, உன்னை வழிபடுபவர்களுக்கு எண்ணிய அனைத்தும் கிடைக்கும்படியாக அருள் புரிய வேண்டும்” என வேண்டினார். ‘‘அப்படியே ஆகட்டும்” என்றார் அம்பிகை. யாக வேள்வியில் உதித்த அன்னை.கொடுங்கைகள்தெற்குப் பிராகாரத்தில் ஒரு மேடையில் ஆறு கால் மண்டபம் ஒன்றுள்ளது. நம் நாட்டுச் சிற்பிகளின் கலை நுணுக்கத்தை, சிற்பத் திறமையை உலகெங்கும் பறைசாற்றும் அற்புதமான வேலைப்பாடுகள் கொண்டவை.துவார பாலகர்இங்கே சிவபெருமான் சந்நதியில் அமைந்துள்ள துவார பாலகர்களின் வடிவங்கள், அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்டவை.பிள்ளைப் பேறும் ஆஞ்சநேயரும்பிள்ளைப் பேறுக்காக வாயு பகவான், சிவபெருமானைப் பூஜை செய்த திருத்தலம் இது. பிரம்மதேவர் உபதேசப்படி வாயு பகவான், இங்கு வந்து காடாக இருந்த இப்பகுதியை, ஓர் அழகான நகரமாக மாற்றினார். தன் பெயரையே `வாதவூர் வாயு புரம்’ என அந்நகருக்குப் பெயர் சூட்டினார். திருக்கோயிலைப் பெரிதாக்கினார். உள்ளன்போடு உமைமணாளனை வழிபட்டார் வாயு தேவர். அவர் வழிபாட்டிற்கு இரங்கி, வேதநாதரும் ஆரணவல்லியும் காட்சி கொடுத்தார்கள். ‘‘வாயு பகவானே! வேண்டியதைக் கேள்!” என்றார்கள் தெய்வத் தம்பதிகள். ‘‘உத்தம குணமும் மாபெரும் வீரமும் நிறைந்த மகவொன்று வேண்டும்” என வேண்டினார் வாயு பகவான். வேத நாதரான சிவபெருமான் சொல்லத் தொடங்கினார், ‘‘வாயு பகவானே! முன்பொரு சமயம் ராவணன், கயிலை மலை மீது வானூர்தியில் செல்ல முயலும்போது, அவன் பயணம் தடைப்பட்டது. அதைக்கண்ட நந்தி, ‘‘இம் மலைமேல் இவ்வாறு செல்வது முறையல்ல, இறங்கிச் செல்! அல்லது திரும்பிச் செல்!” என்று அறிவுரை சொன்னான்.அதைக்கேட்ட ராவணன், ‘‘அற்பக்குரங்கே! நீ ஒதுங்கி நில்!” என இழிவாகப் பேசினான். ‘‘ராவணா! குரங்கென்று என்னை இழிவாகப்பேசிய உன் வம்சம், குரங்கு இனத்தால் அழிக்கப் படட்டும்!” எனச் சாபம் கொடுத்தான். அந்தச் சாபம் நிறைவேறும் காலம் வந்து விட்டது. இரக்கமற்ற ராவணன், அரக்க அறிவால் நல்லோர் அனைவரையும் படாதபாடு படுத்துகிறான். நேர்மை பெருகிய நந்தியின் சாபம் பலிக்கும் காலம் வந்து விட்டது. மாபெரும் அம்சமான ஒரு மைந்தன், உன் மூலம் அஞ்சனாதேவியிடம் உதிப்பான். பிறக்கும் அம்மைந்தன், பேரும் புகழும் பெறுவான். அவனால் ராவண குலம் பெரும் அழிவைச் சந்திக்கும்!” என்று அருள் புரிந்தார். வேத நாதரான சிவபெருமான் சொன்னவாறு, வாயு பகவானுக்குப் பிள்ளையாக ஆஞ்சநேயர் அவதரித்தார். ஆஞ்சநேயரால் ராவணனும் அவனைச்சார்ந்த அரக்கர்களும் பட்டபாடு தான் தெரியுமே. உத்தமமான பிள்ளைப்பேறு அருளும் திருத்தலம் இது என்பதை விளக்கும் நிகழ்வு இது.அக்னி பகவான் வழிபாடுபிருகு முனிவரால் சாபம் இடப்பெற்ற அக்னி பகவான், தன் பாவம் தீர சாப விமோசனம் வேண்டி பிரம்மதேவரைக் கேட்டார். பிரம்மதேவர், ‘‘வாதபுரியில்-வாதவூரில் சென்று வேதநாதரை வழிபாடு செய்! வாட்டம் தீரும்” என்றார். அதன் படியே திருவாதவூர் வந்த அக்னி பகவான், தன் பெயரால் ஒரு தீர்த்தம் உண்டாக்கி, அதில் நீராடி, ஆரணவல்லி சமேத வேதநாயகரை வழிபட்டார். வேத நாயகர் அருளால் சாபவிமோசனமும் பெற்றார். பாவமும் நீங்கப்பெற்றார். அறியாமல் செய்த பாவமும் நல்லவர்களின் சாபத்தையும் நீக்கும் திருத்தலம் இது….

You may also like

Leave a Comment

19 + ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi