அரையாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் நாளை திறப்பு: துப்புரவு பணிகள் தீவிரம்

 

நாகர்கோவில், ஜன.1: அரையாண்டு விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் நாளை (2ம் தேதி) திறக்கப்பட உள்ள நிலையில் துப்புரவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 11ம் தேதி முதல் 22ம் தேதி வரை அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடைபெற்றது. மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை காரணமாக அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு நடத்தப்பட்டது. தொடர்ந்து தென் மாவட்டங்களிலும் கனமழை கொட்டித்தீர்த்தது.

இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் முழு தேர்வுகளும் நடைபெறாததால் மாணவ மாணவியர் அனைத்து தேர்வுகளையும் எழுதவில்லை. ஒரு சில பாட தேர்வுகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டியுள்ளது. குமரி மாவட்டத்தில் கணித பாட தேர்வுகள் நடத்தப்பட வேண்டியுள்ள நிலையில் வரும் 3ம் தேதி 10ம் வகுப்புக்கு கணித பாட தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் டிசம்பர் 23ம் தேதி முதல் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. அரையாண்டு விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் நாளை (2ம் தேதி) திறக்கப்பட உள்ளது. இந்தநிலையில் பள்ளிகளில் துப்புரவு பணிகள் நடைபெற்று வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகள் உட்பட குமரி மாவட்டம் முழுவதும் அனைத்து வகை பள்ளிகளிலும் வளாகங்கள், வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.

குடிநீர் தொட்டிகள், கழிவறைகள் சுத்தப்படுத்தப்படுகிறது. நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் மாநகராட்சி நகர் நல அலுவலர்கள் மேற்பார்வையில் மீனாட்சிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி, பார்வதிபுரம் அரசு தொடக்கப்பள்ளி உட்பட நகர பகுதிகளில் உள்ள பள்ளிகளில் துப்புரவு பணிகள் நடைபெற்றது.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்