அருப்புக்கோட்டை காந்திநகரில் ஆக்கிரமிப்பை அகற்ற ஒரு வாரம் கெடு: நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு

 

அருப்புக்கோட்டை, ஜூலை 5: அருப்புக்கோட்டை காந்திநகர் பகுதியில் ஒருவார காலத்திற்குள் ஆக்கிரமிப்பாளர்கள் தானாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் வெங்கடேஷ் குமார் தெரிவித்துள்ளார்.  நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் வெங்கடேஷ் குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நெடுஞ்சாலைத்துறை சட்ட விதி 2001 பிரிவு 28- 2 (மிமி) பிரிவின்படி ஸ்ரீவில்லிபுத்தூர் பார்த்திபனூர் சாலை கிலோமீட்டர் 65/8 – 68/6, அருப்புக்கோட்டை காந்திநகர் முதல் ராமலிங்க மில் வரை உள்ள ஆக்கிரமிப்புகளை வருகிற 10ம் தேதிக்குள் பொதுமக்கள் தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை மூலம் ஆக்கிரமிப்புகள் வருகிற 12ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் அகற்றப்படும்.

மேலும் அதற்கான செலவுத்தொகை ஆக்கிரமிப்பாளர்களிடம் வசூல் செய்யப்படும். மேலும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பொழுது கையகப்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் திரும்ப வழங்கப்பட மாட்டாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அருப்புக்கோட்டை நகர் பகுதியிலும் விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை