அரியலூர் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம்

 

அரியலூர், செப். 21: அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம், தமிழ்நாடு நுகர்வோர் பேரவை சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு அக்கல்லூரியின் முதல்வர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.

இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் நுகர்வோர் ஆதரவுக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு நுகர்வோர் பேரவை செயலருமான சிவசங்கர் சேகரன், அரியலூர் குறுவட்ட பி.எஸ்.என்.எல். பொறியாளர் கனகராஜ், இணைய குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு, இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் சேவைகள்,

நுகர்வோர் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் சேவைகளின் தரம், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள், இரண்டடுக்கு குறைதீர் வழிமுறை, வாடிக்கையாளர் பராமரிப்பு சேவைகள், மேல்முறையீட்டு ஆணையம் உள்ளிட்டவைகள் குறித்தும், இணையக் குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து பேசினர். மேலும் குறும்படங்கள் மூலம் விளக்கினர்.

ஜெயங்கொண்டம் ரோஸ் அறக்கட்டளை இயக்குநர் ஜான் திருநாவுக்கரசு மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களது சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார். முன்னதாக தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு நிர்வாகி சதீஷ் அனைவரையும் வரவேற்றார். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு நுகர்வோர் பேரவை மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி